அப்போலோ வந்துபோன ஆளுநர் கப்சிப்: மர்மம் நீடிக்கிறது!
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக ஞாயிறுக்கிழமை மாலையில் விபரீதமான தகவல் பரவத் தொடங்கியது.
இதனையடுத்து, மும்பையிலிருந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு, ஜெயலலிதா உடல்நிலையின் தற்போதைய நிலவரம் குறித்த விவரம் கேட்டிருக்கிறார்.
இதனால், வித்யாசாகர் ராவ் உடனடியாக விமானத்தில் சென்னை விரைந்தார். இரவு 11 மணியளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து இறங்கிய வித்யாசாகர் ராவ், அங்கிருந்து நேராக ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றார்.
நள்ளிரவு 12 மணியளவில் அப்போலோ வந்தடைந்த வித்யாசாகர் ராவ், ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றியும், அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதன்பின் கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.
இதற்குமுன் இரு முறை அப்போலோ வந்து சென்றிருக்கிறார் வித்யாசாகர் ராவ். அப்போதெல்லாம் அப்போலோ மருத்துவர்கள் வித்யாசாகரிடம் சொன்ன தகவல்களை ஆளுநர் மாளிகை உடனடியாக அறிக்கையாக வெளியிடும். அதுபோல, ஞாயிற்றுக்கிழமை இரவும் ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிடும் என ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
ஆனால், வழக்கத்துக்கு மாறாக ஆளுநர் மாளிகை அறிக்கை எதுவும் வெளியிடாமல் மௌனம் சாதித்து வருகிறது. ஆளுநரின் இந்த மௌனம் பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிப்பதாக இருக்கிறது.
எனினும், ஜெயலலிதா உடல்நிலையின் தற்போதைய நிலவரம் குறித்து அவர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ரகசிய அறிக்கை அனுப்பிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.