தொடரும் மர்மம்: ஜெயலலிதாவின் சமையல்காரர் மீது கொலைவெறி தாக்குதல்!
ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மரணம், கோடநாடு காவலாளி கொலை ஆகியவற்றை தொடர்ந்து, ஜெயலலிதாவின் சமையல்காரரையும் கொலை செய்யும் முயற்சி நடந்துள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா காவலாளி கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணம் அடைந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜெயலலிதாவின் சமையல்காரராக இருந்தவரை கொலை செய்யும் நோக்கில் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
சிவகங்கையை சேர்ந்தவர் கே.பஞ்சவர்ணம் (80). இவர் 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் வீட்டு சமையல்காரராக பணியாற்றியவர். ஜெயலலிதாவின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர் சமையல்காரர் பஞ்சவர்ணம். பஞ்சவர்ணத்தின் பேரனுக்கு பெயர் சூட்டியதே ஜெயலலிதா தான். இவரது மகன் ப.முருகேசன் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு துறை இயக்குநராக இருக்கிறார். சைதாப்பேட்டையில் தந்தை பஞ்சவர்ணம் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
நேற்று காலையில் பஞ்சவர்ணம் நடைபயிற்சி செய்துவிட்டு, வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்தது. பயங்கர ஆயுதங்களுடன் அவரை தாக்கியது. இதில் பஞ்சவர்ணத்தின் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகே இருந்தவர்கள் வருவதற்குள் அந்தக் கும்பல் தப்பிச் சென்று விட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பஞ்சவர்ணத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணம் அடைந்த பரபரப்பு அடங்குவதற்குள் சமையல்காரரை கொலை செய்யும் நோக்கில் வெட்டப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.