மருத்துவமனையில் ஜெயலலிதா திடீர் அனுமதி: “இறைவா, உன் மாளிகையில்…”

தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை இரவு ஜெயலலிதாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் சீராக இருக்கிறது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0a

இத்தகவல் பரவியதையடுத்து, பொன்னையன், சைதை துரைசாமி, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவின் முக்கிய பிரமுகர்களும், கட்சித் தொண்டர்களும் நள்ளிரவு முதலே திரண்டுவந்து அப்பல்லோ மருத்துவமனைமுன் குவியத் துவங்கிவிட்டனர். இதனால் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

0a1

ஜெயலலிதா மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டிருப்பதால் அதிர்ச்சியடைந்திருக்கும் அ.தி.மு.க.வினர், அவரது உடல்நலம் வேண்டி இனி கோவில் கோவிலாக பிரார்த்தனை செய்வார்கள். “இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு… தலைவா, உன் காலடியில் நம்பிக்கையின் ஒளிவிளக்கு…” என்ற ‘ஒளிவிளக்கு’ படப்பாடலை தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்க விடுவார்கள். அ.தி.மு.க அமைச்சர்கள் அலகு குத்துவார்கள். காவடி எடுப்பார்கள். மண்சோறு சாப்பிடுவார்கள். இந்த உருக்கமான பக்தி பரவச களேபரத்தில் சுவாதி ஆணவக்கொலை, ராம்குமார் மர்மச்சாவு, காவிரி பிரச்சனை, உள்ளாட்சித் தேர்தல் நெருக்கடி, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் வழங்க இருக்கும் தீர்ப்பு பற்றிய எதிர்பார்ப்பு… என தமிழகத்தில் பற்றியெரியும் அனைத்துப் பிரச்சனைகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.