“மழையைவிட ஜெயலலிதா தான் பேரிடர்!”
தமிழ்நாட்டில் எந்த சிறிய நிகழ்வுக்கும் கருணாநிதியை விமர்சிப்பவர்களாக இருப்போம். ஆனால் ஜெயலலிதாவை அந்த அளவுக்கு விமர்சிக்கவோ, அவரிடமிருந்து எதிர்வினையை எதிர்பார்ப்பவர்களாகவோ இருக்க மாட்டோம். ஏனென்றால், கருணாநிதியைப் போல் ஜெயலலிதா எல்லாவற்றுக்கும் கருத்து சொல்பவராக, எதிர்வினையாற்றுபவராக தன்னைக் காட்டிக்கொள்ள மாட்டார்.
அவர் சத்தமில்லாமல் செயல்படுபவராக, தனது எதிர்வினையை எப்போதும் செயலில் மட்டுமே காட்டும் முதல்வராக நம்பவைக்கப்பட்டார். இத்தகைய ஒரு இமேஜை அவருக்கு உருவாக்கிக் கொடுத்ததில் சில குறிப்பிட்ட ஊடகங்களுக்கும், சில அறிவுஜீவிகளுக்கும், ஒரு பகுதி சிவில் சமூகத்துக்கும் பங்கு உண்டு. ஜெயலலிதாவின் இந்த இமேஜ் இப்போது பலூனைப் போல வெடித்துச் சிதறியிருக்கிறது.
அவரது தலைமையிலான அரசாங்கம் செயல்படாத அரசாங்கம்தான் என்பதும், அது முழுக்க முழுக்க அடிமைகளால் மட்டுமே நிறைந்திருக்கிறது என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த பேரிடரை எதிர்கொள்வதில் அவரது அரசாங்கம் முழுக்கவும் தோற்றிருக்கிறது.
அவரது மந்திரிகள் மக்களைச் சந்திக்கவோ, மீடியாவுக்கு முகம் கொடுக்கவோ அலறுகிறார்கள். இந்த மழையைவிட அவர்களுக்கு ஜெயாதான் பேரிடர். தாமாக ஒரு கருத்தைச் சொல்ல அஞ்சுகிறார்கள். வெறுப்பில் இருக்கும் மக்களிடம் அடி வாங்குவது ஒரு பக்கம் என்றால், சுயமாக செயல்பட்டு ஜெயாவிடம் உதை வாங்குவது இன்னொரு பக்கம் என்று தவிக்கிறார்கள். நிவாரணப் பொருட்களோடு சிறிய கட்அவுட் ஒன்றையும் தூக்கிக்கொண்டு திரிகிறார்கள்.
மீடியாவின் கேமரா தெரியும்போதெல்லாம், ஜெயாவின் புகைப்படம் ஒட்டப்பட்ட தட்டியை அசைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இடுப்பு வரை இருக்கும் தண்ணீரில் நின்றுகொண்டு குடிநீருக்காக கையேந்தும் மக்களுக்கு முன்னால் தனது தலைவியின் முகம் பதித்த தட்டியை அசைக்க ஒரு மனம் வேண்டும். கொஞ்சமும் சொரணை உணர்வற்ற, சுயமரியாதையின் சாரமற்ற, தனிமனிதத் துதியில் திளைக்கும் ஆபாச மனம் அது. அதை உருவாக்கியதில் எம்ஜியாரின் பங்கு அதிகம். ஜெயாவின் காலத்தில் இது ஆபாசத்தின் உச்சத்தை அடைந்திருக்கிறது.
“அ.தி.மு.க. என்பது ஏழைகளின் கட்சி” என்ற போலி இமேஜைக்கூட ஜெயாவால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. கட்சிக்காரர்கள் அனைவரும் கைவிடப்பட்ட மக்களின் முன்னால் புழுவைப் போல் நெளிந்துகொண்டிருக்கிறார்கள். என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால், செய்ய முடியாது.
நிலைமை கையை மீறிப் போகிறது. மக்களே தெருவில் இறங்கி தங்களைக் காத்துக்கொள்ள முயல்கிறார்கள். ஒரு பண்பட்ட சிவில் சமூகமாக ஒன்றிணைகிறார்கள். அதை அனுமதிப்பது என்பது, கிட்டத்தட்ட அரசு மக்களிடமிருந்து அப்புறப்படுவதுதான். அதையும் சகிக்க முடியவில்லை. அதனால்தான் அந்த நிவாரணத்துக்கு உரிமை கொண்டாடி, அதில் ஆபாசமாக இணைகிறார்கள். உணவுப் பொட்டலங்கள் மீது தங்கள் தலைவியின் ஸ்டிக்கர்களை ஒட்டுகிறார்கள்.
மக்கள் காரி உமிழ்வார்கள் எனத் தெரியும். என்றாலும், சில நாட்களில் அது மறக்கும், ஸ்டிக்கர்கள் தான் நிலைக்கும் என்று நம்புகிறார்கள். அவர்கள் மக்களின் நனவிலியை நம்புகிறார்கள். இப்போது களத்தில் இருப்பவர்களெல்லாம் வீடு திரும்பினாலும், இந்த கேடுகெட்ட அரசாங்கத்தைத் தான் மக்கள் நம்ப வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும்.
ஜெயலலிதாவுக்கு எங்கிருந்து இவ்வளவு நம்பிக்கை வருகிறது? அவர் யாரை நம்பி இவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்? நம் எல்லோரையும் தான். அவருக்கு நிறைய ஆதரவாளர்கள் உண்டு. ஆனால், பொதுவெளியில் அவர்கள் ‘கருணாநிதி எதிர்ப்பாளர்கள்’ என்று அறியப்பட்டிருப்பார்கள். அரசின் தவறை மிக லாவகமாக சிவில் சமூகத்தின் அற வீழ்ச்சியாக சித்தரிப்பார்கள். “அரசியல் பேச இது நேரம் இல்லை” என்று பசப்புவார்கள். “தனிமனித தாக்குதல் தவறு” என்று மாண்பு காப்பார்கள். எல்லாவற்றையும் பயன்படுத்தி ஜெயலலிதாவை காப்பாற்றுவார்கள். அ ந்த பிம்பத்தை நிலைநிறுத்தப் படாதபாடு படுவார்கள்.
ஏனெனில், இது ஸ்டிக்கர்களின் காலம்!
– ஜி கார்ல்மாக்ஸ்