அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ: வெற்றிவேல் எம்.எல்.ஏ. வெளியிட்டார்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்களுக்குப் பிறகு, சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எஸ்.குருமூர்த்தி என்ற சங்கித்துவவாதியின் ஆலோசனையின் பேரில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தொடர்ந்து வதந்திகளைக் கிளப்பி வந்தனர். அப்போதெல்லாம் அவற்றை மறுத்த டிடிவி தினகரன், “எங்களிடம் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சையே அளிக்கப்பட்டது. அந்த வீடியோக்களில் ஜெயலலிதா நைட்டியில் இருக்கிறார். ஒரு முதல்வராக இருந்தவரை அந்த கோலத்தில் பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதாலேயே அதை வெளியிடவில்லை. இருப்பினும், தேவைப்பட்டால் அந்த வீடியோவை வெளியிடுவோம்” எனக் கூறி வந்தார்.
இந்நிலையில், சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பன்னீர்செல்வம் – பழனிசாமி தரப்பினர் மீண்டும் கிளப்பிவிட்டதோடு, சசிகலா – டிடிவி தினகரன் தான் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் என்று சொல்லக்கூடிய போஸ்டர்களையும் ரா.கி. நகர் முழுக்க ஒட்டியுள்ளனர். (அதிமுகவினரின் அந்த போஸ்டர் மேலே உள்ளது.)
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மேலும் ஒருபடி மேலே போய், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்போம்” என்கிற ரீதியில் பிரசாரம் செய்தார்.
இதனால், எதிரிகளின் பிரசாரத்தை முறியடிக்கும் நோக்கில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா உடல்நிலை தேறி தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டபின் சசிகலா எடுத்த வீடியோவை இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜெயலலிதா படுக்கையில் சாய்ந்தமர்ந்து, நைட்டி அணிந்தபடி, டிவி பார்த்துக்கொண்டே பழச்சாறு அருந்துவது போல் காட்சி உள்ளது.