ஜவான் – விமர்சனம்
நடிப்பு: ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் (சிறப்புத் தோற்றம்), சஞ்சய் தத் (சிறப்புத் தோற்றம்), பிரியாமணி, யோகி பாபு மற்றும் பலர்
இயக்கம்: அட்லீ
ஒளிப்பதிவு: ஜி.கே.விஷ்ணு
படத்தொகுப்பு: ரூபன்
இசை: அனிருத்
தயாரிப்பு: ’ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட்’ கௌரி கான் & கௌரவ் வர்மா
வெளியீடு: ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் ஸ்ரீ கோகுலம் மூவிஸ்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)
’ராஜா ராணி’யில் அறிமுக இயக்குனராக அடியெடுத்து வைத்து, விஜய்யை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்து, ‘தொடர் வெற்றிப்பட இயக்குனர்’ என்ற சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இயக்குனர் அட்லீ இயக்கும் முதல் பாலிவுட் திரைப்படம் என்பதாலும், வட இந்தியாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தால் ‘கிங் கான்’ எனப் போற்றப்பட்டு, வெறித்தனமாகக் கொண்டாடப்படும் பாலிவுட் உச்சநட்சத்திரமான ஷாருக்கானை அவர் இயக்குகிறார் என்பதாலும், இது இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ’பான் – இந்திய’ திரைப்படமாக உருவாகிறது என்பதாலும், ‘ஜவான்’ திரைப்படத்துக்கு நாடு முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அந்த எதிர்பார்ப்பை 100 சதவிகிதம் பூர்த்தி செய்யும் திரைப்படமாக ‘ஜவான்’ படைக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் ஆரம்பத்தில், இந்தியாவின் வடகிழக்கு எல்லையோரத்தில் மூர்க்கமாய் பாயும் நதி ஒன்று, படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மூர்ச்சையாகி இருக்கும் கேப்டன் விக்ரம் ரத்தோரை (ஷாருக்கானை) இழுத்துக்கொண்டு வருகிறது. அருகிலுள்ள ஒரு மலைகிராமத்து மக்கள் அவரை மீட்டு, தங்களுக்குத் தெரிந்த நாட்டு வைத்தியம் செய்து, உயிரைக் காப்பாற்றுகிறார்கள். இதன்பின் அந்த கிராமத்து மக்கள் மீது ஆயுதக்குழுவினர் சிலர் திடீர் தாக்குதல் நடத்த, விக்ரம் ரத்தோர் வீறுகொண்டு எழுந்து, அந்த ஆயுதக்குழுவினருடன் ஆவேசமாக சண்டையிட்டு, அவர்களை விரட்டியடித்து, மக்களை காப்பாற்றுகிறார். அவருக்கு, தான் யார் என்பது உட்பட கடந்த கால சமாச்சாரங்கள் அனைத்தும் மறந்துபோயிருக்கிறது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பையில் மொட்டைத் தலையுடன் காட்சி தரும் ஆசாத் ரத்தோர் (இன்னொரு ஷாருக்கான்), லட்சுமி (பிரியாமணி) உள்ளிட்ட ஆறு பெண்களின் உதவியுடன் மெட்ரோ ரயிலை கடத்துகிறார். அந்த ரயிலில், ஒன்றிய அரசையே ஆட்டிப் படைக்கும் சர்வ வல்லமை கொண்ட மிகப் பெரிய ஆயுத வியாபாரியும் வில்லனுமான காளி கெய்குவாட்டின் (விஜய் சேதுபதியின்) பாசமான மகளும் இருக்கிறார். (ரூ.40 ஆயிரம் வங்கிக் கடனுக்காக ஏழை விவசாயி அவமானப்படுத்தப்பட்டு, தற்கொலைக்கு தள்ளப்படும் நிலையில், பெரும் செல்வந்தரான இந்த காளி கெய்குவாட்டின் ரூ 40 ஆயிரம் கோடி வங்கிக்கடனை ஒன்றிய அரசு அநியாயமாக தள்ளுபடி செய்திருந்தது.) காளி கெய்குவாட்டின் மகளை கொல்லப்போவதாக மிரட்டும் ஆசாத் ரத்தோர், ரூ.40 ஆயிரம் கோடியை தான் சொல்லும் வங்கிக் கணக்கில் செலுத்தினால் மெட்ரோ ரயிலையும், அனைத்துப் பயணிகளையும் விடுவிப்பதாக கூறுகிறார். தன் மகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக காளி கெய்குவாட், ஆசாத் ரத்தோர் கேட்ட 40 ஆயிரம் கோடி ரூபாயை டெபாசிட் செய்கிறார். அந்த பணத்தைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகளின் விவசாயக் கடன்கள் உடனடியாக அடைக்கப்படுகின்றன.
மெட்ரோ ரயிலைக் கடத்திய கும்பலைப் பிடிக்க பெண் போலீஸ் அதிகாரி நர்மதா ராய் (நயன்தாரா) தன் படையுடன் விரைந்து வந்து சுற்றி வளைக்கிறார். எனினும், ஆசாத் ரத்தோரும், அவருக்கு உதவிய பெண்களும் தப்பிவிடுகிறார்கள்.
உண்மையில் இந்த ஆசாத் ரத்தோர் கடத்தல்காரன் அல்ல; மொட்டைத் தலையரும் அல்ல. மும்பையில் உள்ள மகளிர் சிறை ஒன்றில் ஜெயிலராக பணி புரிபவர். அந்த சிறையில் இருக்கும் சில பெண்களை பயன்படுத்தி, நாட்டில் உள்ள பல சமூக பிரச்சினைகளை மாறுவேடத்தில் தனது ஸ்டைலில் அதிரடியாக தீர்க்கிறார்.
ஆசாத் ரத்தோர் யார் என்பதை கண்டுபிடிக்க பெண் போலீஸ் அதிகாரி நர்மதா ராய் ஒரு கைதியாக மகளிர் சிறைக்குச் செல்லுகிறார். ஆசாத் ரகோத்தருக்கு உதவும் பெண்களை அங்கு சந்தித்து அவரைப் பற்றிய உண்மைகளைக் கேட்டறிகிறார்.
ஆசாத் ரத்தோர் யார்? அவருடைய பின்னணி என்ன? ஜெயிலராக இருந்துகொண்டு, அவர் ஏன் சட்டத்துக்குப் புறம்பான சாகசங்களில் ஈடுபடுகிறார்? மலைகிராமத்து மக்களால் காப்பாற்றப்பட்ட கேப்டன் விக்ரம் ரத்தோர் யார்? அவருடைய பின்னணி என்ன? தான் யார் என்பதே மறந்துபோகும் அளவுக்கு அவர் தாக்கப்பட்டது ஏன்? இந்த இரண்டு ரத்தோர்களுக்கும் வில்லன் காளி கெய்குவாட்டுக்கும் இடையிலான பிரச்சனைகள் என்ன? வில்லன் எப்படி தண்டிக்கப்படுகிறார்? என்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடையளிக்கிறது ‘ஜவான்’ திரைப்படம்.
கேப்டன் விக்ரம் ரத்தோர், ஜெயிலர் ஆசாத் ரத்தோர் என்ற இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் ஷாருக்கான். மிகப் பெரிய மாஸ் ஹீரோ என்பதால் அவர் ஏற்றுள்ள இரண்டு கதாபாத்திரங்களும் மிக கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர் இல்லாத ஃபிரேமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு படம் முழுக்க வியாபித்திருக்கிறார். மொத்தப் படத்தையும் அவர் ஒருவரே அசால்டாக சுமந்திருக்கிறார். அவருடைய நடனம், அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை ஆகிய அனைத்துமே அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தரப்பினருக்கும் அறுசுவை விருந்து.
போலீஸ் அதிகாரி நர்மதா ராய் கதாபாத்திரத்தில் நயன்தாரா வருகிறார். வழக்கமாக மாஸ் ஹீரோ படங்களில் நாயகியாக நடிப்பவர்கள் நாயகனோடு டான்ஸ் ஆடிவிட்டுப் போவது போல் இல்லாமல், இந்த படத்தில் நயன்தாராவின் கம்பீரமான கதாபாத்திரம் கதையை நகர்த்துவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளது. முக்கியத்துவம் உணர்ந்து நயன்தாரா சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சியிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
ஆயுத வியாபாரி காளி கெய்குவாடாக வரும் விஜய் சேதுபதி, வித்தியாசமான கெட்டப்பில் வழக்கமான வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார். அவர் ஆங்காங்கே போடும் கவுண்ட்டர்கள் ரசிக்க வைக்கின்றன. மரண தண்டனையை அவர் விவரிக்கும்போது… அப்பப்பா… ஒரு மனிதன் முகத்தில் இவ்வளவு கொடூரமா…?
ஜெயிலர் ஆசாத் ரத்தோரின் சாகசங்களுக்கு உதவி செய்பவர்களாக வரும் பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட ஆறு பெண்களும் அளவாக நடித்து கவனம் பெறுகிறார்கள்.
கேப்டன் விக்ரம் ரத்தோரின் மனைவியாக தீபிகா படுகோன் பிளாஷ்பேக்கில் சிறிது நேரமே வந்தாலும் நிறைவாக நடித்து மனதில் நிற்கிறார். கர்ப்பிணியாக சிறை சென்று, அங்கேயே குழந்தை பெறுகிறவர் எனும் அவரது கதாபாத்திரம், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட நளினியை நினைவூட்டுகிறது.
யோகி பாபு, சஞ்சய் தத் ஆகியோர் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. அவர்களை இன்னும் கொஞ்சம் கூடுதலாக பயன்படுத்தியிருக்கலாம்.
இந்த படத்தின் மூலம் இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் வலுவாக காலூன்றிவிட்டார் என்றே சொல்லலாம். படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள வெகுமக்கள் ரசிக்கிற விதமாய் ஆக்ஷன், செண்டிமெண்ட் கலந்து சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் திரைக்கதை அமைத்து, தனது தனித்துவமான பிரமாண்டமான மேக்கிங்கை இணைத்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார். மேலும், மாஸ் ஹீரோவுக்கான கமர்ஷியல் திரைப்படத்தில் விவசாயிகள் தற்கொலை, கார்ப்பரேட்டுகளுக்கு கடன் தள்ளுபடி, மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால் குழந்தைகள் மரணம், ராணுவத்துக்கு ஆயுதம் வாங்குவதில் முறைகேடு, போபால் விஷவாயுக் கசிவு மரணங்கள் போன்ற மக்கள் பிரச்சனைகளை உறுத்தல் இல்லாமல் புகுத்தியிருப்பதும், ’அரசை, அதிகாரத்தை நோக்கி கேள்வி கேளுங்கள்’ என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வசனங்களை துணிச்சலாக இடம்பெற செய்திருப்பதும் பாராட்டுக்கு உரியது. இது போன்ற பான் – இந்திய படங்களை இனி அட்லீ அடுத்தடுத்து எடுத்துக் குவிப்பார் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.
அனிருத் இசையில் பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவும், ரூபனின் படத்தொகுப்பும் இயக்குனரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
’ஜவான்’ – ஷாருக்கானின் அசத்தலான நடிப்புக்காகவும், அட்லீயின் பிரமாண்டமான மேக்கிங்குக்காகவும் குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்!