பிரபஞ்சத்தின் துவக்கத்தை நோக்கி…
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் செலுத்தப்பட்ட முதல் தொலைநோக்கி இல்லை. இதுவரை தொண்ணூறுக்கும் மேற்பட்ட தொலைநோக்கிகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் 61 தொலைநோக்கிகள் பல்வேறு காரணங்களுக்காக பயன்பாட்டில் இல்லை. மீதி இன்றும் பயன்பாட்டில் உள்ளன. இதுவரை அனுப்பியதிலேயே பெரிய தொலைநோக்கியான ஹபிள் டெலஸ்கோப் அண்டங்கள், அண்டப் பேரடைகள், வாயு மேகங்களை எல்லாம் முன்பு எப்போதும் இல்லாத துல்லியத்தில் அனுப்பிக் கொண்டிருந்தது. இப்போது ஜேம்ஸ் வெப் அதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறது.
தொலைநோக்கிகளை ஏன் விண்வெளியில் கொண்டு போய் வைக்க வேண்டும்? பூமியில் இருந்தே பார்க்க முடியாதா என்ற கேள்வி எழுகிறது. பூமியிலும் ஆயிரக்கணக்கான பெரிய தொலைநோக்கிகள் உள்ளன. ஆனால் விண்வெளியில் இருந்து நமக்கு வரும் சங்கேதம் ஒளிதான். ‘தொலைநோக்கி என்பது உண்மையில் ஒளியை சேகரிக்கும் பக்கெட், அவ்வளவுதான்,’ என்று நாசா விஞ்ஞானி நாடலி படாலியா கூறுகிறார். பூமியை ஏற்கனவே முழுவதும் மின்மயமாக்கி ஒளியால் நிரப்பி விட்டோம் என்பதால் அந்த செயற்கை ஒளிகளை எல்லாம் விலக்கி விண்ணை ஆராய்வது வீண் தொல்லை. எனவே நேராக விண்வெளியில் தூக்கி உட்கார வைத்து விட்டால் அந்தப் பிரச்சினை இல்லை.
இதனால்தான் ஹபிளோ, ஜேம்ஸ் வெப்போ பார்த்தால் நமக்குப் பரிச்சயமான ஒரு தொலைநோக்கி போல இருக்காது. அவை ஒரு பெரிய கண்ணாடி போலத்தான் காணப்படும். எவ்வளவு பெரிய கண்ணாடி இருக்கிறதோ அவ்வளவு தூரத்தில் இருந்து ஒளியைப் பிடித்து பக்கெட்டில் போட முடியும்.
ஒளி என்பது கடந்த காலத்தை நமக்குக் காட்டும் கண்ணாடி. நாம் தலையை நிமிர்த்திப் பார்த்தால் தென்படும் சூரியன் என்பது உண்மையில் சூரியன் இல்லை. எட்டு நிமிடங்களுக்கு முன்பு சூரியனிடம் இருந்து கிளம்பிய ஒளிதான் இப்போது நமக்குத் தெரிகிறது. நாம் காணும் நிலவு கூட ஒன்றேகால் நொடிகளுக்கு முன்பு நிலவிடம் இருந்து கிளம்பிய ஒளிதான். சூரியக் குடும்பத்திலேயே இப்படி எனில் தொலைதூர கிரகங்கள், நட்சத்திரங்கள், அண்டங்கள் எப்படி இருக்கும். அவற்றின் ஒளி கிளம்பி நம்மை அடைவதற்கே பல ஆண்டுகள் பிடிக்கின்றன. இதனால்தான் விண்வெளியில் தூரங்களை மீட்டர், கிலோ மீட்டர் என்று கணக்கிடுவதில்லை. ஒளி ஆண்டுகள் என்று சொல்கிறார்கள். அதாவது ஒளி ஒரு முழு ஆண்டு பயணம் செய்தால் எவ்வளவு தூரத்தை கடக்குமோ அந்த தூரம் ஒளி ஆண்டு எனப்படுகிறது. நமது சூரியக் குடும்பத்துக்கு மிக அருகில் உள்ள ஆல்பா சென்டாரி எனப்படும் அடுத்த சூரியக் குடும்பம் சுமார் 4.37 ஒளி ஆண்டுகள் தாண்டி இருக்கிறது. அதாவது வானத்தில் ஆல்பா சென்டாரியை பார்த்தோம் எனில் அது இப்போது இருக்கும் சூரியக் குடும்பம் அல்ல. 4.37 ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து கிளம்பிய ஒளிதான் இப்போது நமக்கு தென்படுகிறது. ஒருவேளை இன்று காலை ஏதோ காரணத்தில் ஆல்பா சென்டாரி வெடித்து சிதறிப் போனால் அது நமக்குத் தெரிய வர நாலு ஆண்டுகள் பிடிக்கும்.
இப்படி ஒளி ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பயணிக்கும் போது அதன் அலைவரிசை நீண்டு கொண்டே வந்து மாற்றமடைகிறது. அதாவது பயணம் செய்து களைப்படைந்து விடுகிறது. அதன் அலைவரிசை புற ஊதாக்கதிர்களில் இருந்து அகச்சிவப்பு கதிர்களுக்கு மாறுகிறது. இதற்கு redshifting என்று பெயர். அந்த ஒளியைப் பிடித்து அதன் அலைவரிசையை பார்த்தால் எங்கிருந்து வந்திருக்கிறது, பயணித்த தூரம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த டெக்னிக் மூலம் மிக மிகப் பழைய அண்டங்கள் போன்றவற்றையும் கண்டுபிடிக்க முடியும். அதாவது ஒரு அண்டம் சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருந்தால் அதையும் நூல் பிடித்துப் பார்த்து விட இயலும்.
இதைத்தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி செய்யப் போகிறது. விண்வெளியில் இதுதான் முதல் அகச்சிவப்பு தொலைநோக்கி என்பதால் அந்த சாத்தியம் இருக்கிறது. கூடவே விண்வெளியில் அண்டங்களைத் தேடுவதில் ஹபிளுக்கு முக்கிய பிரச்சினை ஒன்று இருந்தது. நிறைய அண்டங்கள், நட்சத்திரக் கூட்டங்கள் சரியாக பார்க்க முடியாமல் வாயு மேகங்களினால் மறைக்கப்பட்டிருந்தன. புற ஊதாக்கதிர் மூலமே ஹபிள் இயங்கியதால் அந்த வாயு மேகங்களைத் தாண்டிப் பார்க்க இயலவில்லை. ஜேம்ஸ் வெப் அகச்சிவப்பு கதிர்களை வைத்து இயங்குவதால் இந்த தொந்தரவான வாயுக்கூட்டங்களை மீறி அவற்றுக்கு அப்பால் இருப்பவற்றைப் பார்க்க முடியும்.
இப்படி அகச்சிவப்பு கொண்டு இயங்குவதால் பூமியின் சுற்று வட்டப் பாதையில் இதனை இயக்க முடியாது. சூரியனின் ஒளி மேலே பட்டு சூடாகி விடும். எனவே பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள்.. இப்படி செய்ததில் ஒரே பிரச்சினை இருந்தது. ஹபிள் தொலைநோக்கியில் ஏதாவது பிரச்சினை என்றால் ஆளை அனுப்பி சரி செய்யலாம். முன்னர் செய்திருக்கிறார்கள். ஆனால் ஜேம்ஸ் வெப்பில் பிரச்சினை ஆனால் ஒன்றுமே செய்ய முடியாது. அது விண்வெளியில் போய் தானே விரிவடைந்து கொண்டு தானே இயக்கிக் கொண்டு தானே வேலை செய்ய வேண்டும். ஒரே ஒரு சிறிய பிரச்சினை என்றால் கூட அவ்வளவுதான். மொத்த ப்ராஜக்ட்டும் அவுட். அதாவது ஒரே ஒரு பால்தான் போடப்படும்; அதிலேயே செஞ்சுரி அடிக்க வேண்டும் என்ற நிலை.
அந்த செஞ்சுரியை ஜேம்ஸ் வெப் அடித்துக் காட்டி இருக்கிறது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், என்ஜினியர்கள் இணைந்து இருபது ஆண்டுகள் போட்ட உழைப்பின் பலனை இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக பிரபஞ்சத்தின் ஆரம்பத்தை ஜேம்ஸ் வெப் தட்டித் திறந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்றவை எப்படி உருக் கொள்கின்றன என்று கண்டறிய முடியும். ஒரு கிரகம் உருவாகும் அந்தக் கணம் எதிரே சேர் போட்டுக் கொண்டு உட்கார்ந்து பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கவனிக்க முடியும். இன்னும் ஆழமாகப் போய் பிரபஞ்சம் உருவான நொடிக்கு மிக அருகில் கூடப் போய்த் தேடலாம். அதன் மூலம் பிரபஞ்ச உருவாக்கத்தில் உள்ள சில மர்ம முடிச்சுகளை அவிழ்க்கலாம்.
பற்பல ஒளி ஆண்டுகள் காலத்தின் பின்னே செல்ல இயல்வது போல இதற்கு இன்னொரு பயன் இருக்கிறது. இந்தத் தொலைநோக்கியின் காமிரா கண்ணாடி மிகப் பெரியது. சுமார் ஒரு டென்னிஸ் மைதானம் அளவுக்கு இருக்கும். இதன் துல்லியம் எப்படி எனில் நிலவில் ஒரு பாறை மேல் ஒரு ஈ உட்காரந்திருந்தால் அதனை HD தரத்தில் படம் எடுக்க முடியும். இந்தத் துல்லியம் காரணமாக நமக்கு அருகே உள்ள நட்சத்திரக் கூட்டங்களில் ஏதாவது கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா என்றும் தேட இயலும். அந்த கிரகத்தில் நகரங்கள் இருந்தால் அதனைப் படம் எடுக்கும் அளவு போக முடியாது. ஆனால் அந்த கிரகங்களின் வெப்ப அலைமானிகளை (heat signature) வைத்து அங்கே எந்த மாதிரி வாயுக்கள், வேதிப் பொருட்கள் உள்ளன என்பதைக் கண்டறிய முடியும். அதை வைத்து உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற முடிவுக்கு வர முடியும். ஏலியன்கள் எதுவும் இல்லை எனினும் மனிதர்கள் வாழத் தகுதியான கிரகங்கள் வேறு ஏதாவது அருகில் இருக்கிறதா என்றும் பார்க்க முடியும். அதனால்தான் ஜேம்ஸ் வெப் பற்றிய ஆவணப்படம் இயக்கிய நதானியேல் காஹ்ன் அதற்கு ‘இன்னொரு பூமியைத் தேடி’ (‘The Hunt for Planet B’) என்று பெயரிட்டார்.
ஜேம்ஸ் வெப் நமக்குக் காட்டி இருப்பது சும்மா டீஸர்தான். அது இன்னும் திறக்கப் போகும் கதவுகள், காட்டப் போகும் உலகங்கள் அலாதியானவவை. அதன் மூலம் பிரபஞ்சம் பற்றிய புரிதலில் பற்பல மைல் தூரங்கள் நாம் பயணிக்கப் போகிறோம். மானுட உழைப்பின், மானுட அறிவின் உச்சம்தான் இந்த ஜேம்ஸ் வெப். பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வதில், சிருஷ்டியின் முடிச்சுகளை அவிழ்த்துப் பார்ப்பதில் அறிவியலைப் போன்ற நம்பகமான ஆசிரியர் நமக்கு இல்லை. இது வரை ஹபிள் என்ற நல்லாசிரியர் நமக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த வகுப்பில் பாஸ் பண்ணி விட்டு அடுத்த வகுப்பில் வந்து உட்காரந்திருக்கிறோம். இதோ ஜேம்ஸ் வெப் என்ற அடுத்த ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்திருக்கிறார். அறிவுக் கனல் தெறிக்க நம்மைப் பார்க்கிறார்.
குட் மார்னிங் டீச்சர்!
– ஸ்ரீதர் சுப்ரமணியம்