ஜமா – விமர்சனம்
நடிப்பு: பாரி இளவழகன், அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என்.மணிமேகலை, வசந்த் மாரிமுத்து மற்றும் பலர்
இயக்கம்: பாரி இளவழகன்
ஒளிப்பதிவு: கோபால் கிருஷ்ணா
இசை: இளையராஜா
தயாரிப்பு: லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன்ஸ்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா
திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ‘தெருக்கூத்து கலைக்குழு’வை ’ஜமா’ என்று அழைப்பார்களாம். அதே பொருளில் தான் இந்த திரைப்படத்துக்கு ‘ஜமா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆம்… இது ‘தெருக்கூத்து கலைக்குழு’ பற்றிய கதை.
தெருக்கூத்து கலைஞரான இளவரசு (ஸ்ரீ கிருஷ்ண தயாள்), சக தெருக்கூத்துக் கலைஞரான தாண்டவத்துடன் (சேத்தன்) சேர்ந்து ஒரு தெருக்கூத்து கலைக்குழுவை (’ஜமா’வை) தொடங்கி நடத்தி வருகிறார். அவர் ‘அர்ஜுனன்’ வேடம் கட்டி ஆடினால் அவ்வளவு பிரமாதமாக இருக்கும் என்று மெச்சும் அளவுக்கு சிறந்த தெருக்கூத்து கலைஞராகத் திகழ்கிறார். ஆனால், பொறாமையும், சுயநலமும் கொண்ட தாண்டவம், ‘ஜமா’வை தந்திரமாக அபகரித்து தனக்கு சொந்தமாக ஆக்கிக் கொள்கிறார். இதில் அதிர்ந்து மனமுடைந்த இளவரசு, இழப்பையும், தாண்டவத்தின் துரோகத்தையும் தாங்க முடியாமல் இறந்துபோகிறார்.
இளவரசுவின் மகன் கல்யாணம் (பாரி இளவழகன்). அவரும் தெருக்கூத்து கலைஞர் தான். தாண்டவத்தின் தெருக்கூத்து குழுவில் இடம் பெற்றிருக்கும் அவருக்கு, தன் தந்தையைப் போல ‘அர்ஜுனன்’ உள்ளிட்ட கம்பீரமான ஆண் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும்; தந்தையைப் போல தனக்கும் சொந்தமாக ஒரு ‘ஜமா’ இருக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் கல்யாணம் வளர்ந்துவிடக் கூடாது; தனது எடுபிடியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று கருதும் தாண்டவம், கல்யாணத்தை திரௌபதி, குந்தி தேவி போன்ற பெண் வேடங்களில் மட்டுமே நடிக்க வைக்கிறார்.
பெண் வேடங்களில் நடித்து நடித்து, சாதாரண நேரங்களில் கூட கல்யாணத்தின் நடை, பாவனை உள்ளிட்ட உடல்மொழி, பேச்சு போன்றவை பெண்ணுக்கு உரியவையாகவே மாறி விடுகின்றன. இதனால் பிறரது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் அவருக்கு யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள்.
தந்தையைப் போல கம்பீரமான ஆண் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பி, கல்யாணம் தனக்கென ஒரு ஜமாவைத் தொடங்க முயற்சி செய்கிறார். அதற்கு தாண்டவம் தடையாக இருக்கிறார்.
தாண்டவத்தின் மகளும், கல்யாணத்தின் பால்ய சினேகிதியுமான ஜெகதாம்பாள் (அம்மு அபிராமி) கல்யாணத்தை காதலிக்கிறார். அவர் ’ஜமா’வின் தலைவர் மகளாயிற்றே என்று ஒதுங்கிச் செல்லும் கல்யாணம், ஜெகாவின் பிடிவாதத்தால் ஒரு கட்டத்தில் மனம் மாறி காதலை ஏற்கிறார். ஆனால், தாண்டவம் இவர்களது காதலை கடுமையாக எதிர்க்கிறார். “தெருக்கூத்து கட்டுவதை விட்டுவிட்டு வா; நாம் எங்காவது போய் கல்யாணம் செய்து கொள்ளலாம்” என்று ஜெகா வற்புறுத்த, ”காதலை விட என் இலட்சியம் தான் முக்கியம்” என்று கல்யாணம் உறுதியாகச் சொல்லிவிட, ஜெகா விரக்தியில் வெளியூர் சென்று விடுகிறார்.
தன் இலட்சியத்துக்காக காதலையே துறந்த கல்யாணம், இலட்சியத்தை வென்றாரா? தனது தந்தையைப் போல ‘அர்ஜுனன்’ போன்ற கம்பீரமான ஆண் கதாபாத்திரம் ஏற்றாரா? தனக்கென்று ஒரு ‘ஜமா’ வாய்க்கப் பெற்றாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு எமோஷனலாகவும், மனநிறைவு தரும் விதமாகவும் விடை அளிக்கிறது ‘ஜமா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நமது பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் தெருக்கூத்து மிகவும் முக்கியமானது. தனித்துவமானது. அந்த கலையில் ஈடுபடும் கலைஞர்களின் கலை தாகத்தையும், யதார்த்த வாழ்க்கையையும் மிகச் சிறப்பாக பிரதிபலிக்கும் ‘அவதாரம்’ போன்ற உயரிய படங்களின் பட்டியலில் இடம் பெறத் தகுந்தது இந்த ‘ஜமா’. அத்தனை நுணுக்கமாக இப்படத்தை எழுதி, திறம்பட இயக்கியிருப்பதோடு, கதையின் நாயகனாக கல்யாணம் கதாபாத்திரத்தை ஏற்று, யதார்த்தமாக, அருமையாக நடித்திருக்கிறார் பாரி இளவழகன். அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தாண்டவம் என்ற கதாபாத்திரமாகவே மாறி, படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார் சேத்தன். வெற்றி மாறனின் ‘விடுதலை’க்கு அடுத்தபடியாக இது அவரது பெயர் சொல்லும் படமாக என்றென்றும் நிலைத்து நிற்கும்.
நாயகனின் தந்தை இளவரசுவாக ஸ்ரீ கிருஷ்ண தயாள் நடித்திருக்கிறார். அர்ஜுனன் வேடம் கட்டி அவர் ஆடும் கம்பீரமான ஆட்டம் அமர்க்களம்.
நாயகனை காதலிக்கும் ஜெகதாம்பாளாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார். தனது காதல் பிடிவாதத்தை வெளிப்படுத்தும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
கே.வி.என்.மணிமேகலை, வசந்த் மாரிமுத்து மற்றும் நிஜ தெருக்கூத்து கலைஞர்கள் பலர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி பலம் சேர்த்திருக்கிறார்கள்.
சிறுவயதிலேயே நாட்டுப்புற கலைகளை தத்தெடுத்துக்கொண்ட இளையராஜா, இப்படத்தின் பாடலிசையிலும், பின்னணி இசையிலும் ஜமாய்த்திருக்கிறார். கோபால் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, காட்சிகளை உயிரோட்டத்துடன் பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளது.
இப்படத்தின் நாயகனும், எழுத்தாளரும், இயக்குநருமான பாரி இளவழகன், தரமான பல விருதுகள் பெற தகுதியானவர். வாழ்த்துகிறோம்.
‘ஜமா’ – அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய படம்!