அலங்காநல்லூர் மக்கள் கடும் எதிர்ப்பு: ஓ.பி.எஸ். பங்கேற்க இருந்த சல்லிக்கட்டு விழா ரத்து!
தமிழக அரசின் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் சல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
முதல் நிகழ்ச்சியாக, சல்லிக்கட்டுக்கு உலக அளவில் பெயர் பெற்ற அலங்காநல்லூரில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு சல்லிக்கட்டு விளையாட்டை துவக்கி வைப்பார் என்றும், ஏனைய இடங்களில் மற்ற அமைச்சர்கள் காலை 11 மணிக்கு துவக்கி வைப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது
ஓ.பி.எஸ். பங்கேற்க இருந்த அலங்காநல்லூர் சல்லிக்கட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டது. ஆனால், “எங்களுக்கு தற்காலிக ஏற்பாடு தேவை இல்லை. இனி எப்போதும் தடையில்லாமல் சல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் வேண்டும். அதுவரை சல்லிக்கட்டு நடத்த விட மாட்டோம்” என்று கூறி அலங்காநல்லூர் வாடிவாசல் முன் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அமர்ந்து அறவழியில் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டும், பொதுமக்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. அலங்காநல்லூருக்கு ஓ.பி.எஸ். வந்தால் அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளதால்
அலங்காநல்லூரில் இன்று சல்லிக்கட்டு நடக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. இதனால், மதுரை ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் ஓ.பி.எஸ். தனது அலங்காநல்லூர் பயணத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் எதிப்பு காரணமாக தமிழக கிராமம் ஒன்றுக்குள் நுழைய முடியாமல், தமிழக முதல்வர் திரும்புவது இதுவே முதல் முறை.