மக்களின் எதிர்ப்பை மீறி ஜல்லிக்கட்டு நடத்த அரசு முயற்சி: அலங்காநல்லூரில் பதட்டம்!
தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமாக நடைபெறுவதை அடுத்து ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு இன்று மாலை பிறப்பித்துள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு விளையாட்டை அலங்காநல்லூரில் நாளை (ஞாயிறு) காலை 10 மணிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், 11 மணிக்கு ஏனைய இடங்களில் மற்ற அமைச்சர்களும் துவக்கி வைப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று கோரும் அலங்காநல்லூர் பொதுமக்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள், தமிழக அரசின் அவசர சட்டத்தை நிராகரித்துவிட்டார்கள். அங்குள்ள மக்களிடம் பேசிய போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள், முதலமைச்சரே வந்தாலும் நாளை ஜல்லிக்கட்டு நடக்காது என அறிவித்தனர். இதை வரவேற்று மக்கள் முழக்கமிட்டனர்.
நாளை ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறார். அத்துடன் அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதிக்கு வந்து, அங்கு போராடும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் நிரந்தர சட்டமே தீர்வு என அலங்காநல்லூர் மக்கள் முழக்கமிட்டனர். அத்துடன் இதில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் அறிவித்தது விட்டனர்.
இதுபோலவே சென்னை மெரினா கடற்கரையில் கூடியுள்ள மாணவர்களும், தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள போராட்ட களத்தில் உள்ளவர்களும் இதே முடிவை எடுத்துவிட்டனர். போராட்டங்கள் தொடர உள்ளது.
தற்போதைய கள நிலவரம் முழுமையாக மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக இருக்கிறது. நாளை காளைகளை அவிழ்த்துவிட மாட்டோம் என்று மாடு வளர்ப்போர் சங்கத்தினரும் அறிவித்துள்ளனர். இதனால் அலங்காநல்லூரில் அரசு திட்டமிட்டபடி நாளை காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனினும், மக்களின் எதிர்ப்பையும் மீறி ஜல்லிக்கட்டு நடத்த அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதால் அலங்காநல்லூரில் பதட்டம் அதிகரித்துள்ளது.