அலங்காநல்லூர் கைது எதிரொலி: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம்!
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோரை விடுவிக்கக் கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் போராடியதால் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு வெளியே வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றும், ஜல்லிக்கட்டு இந்த மாதத்துக்குள் நடைபெற அனுமதியளிக்க வேண்டும் என்றும் இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கூறியுள்ளனர்.
மெரினா அருகே இன்று காலை திடீரென ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, நடிகர்கள் மயில்சாமி, டி.ராஜேந்தர், அசோக் செல்வன், பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் போராட்டக் களத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்களுடன் இணைந்து தொடர் முழுக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்துக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவிக்க நேரில் வந்தார். “எந்த தலைவரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று அரசியலாக்க வேண்டாம்” என்று இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து ஸ்டாலின் போராட்டக் களத்திலிருந்து திரும்பிச் சென்றார்.
இங்கு போராடும் இளைஞர்கள் கூறுகையில், ”ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் குடியரசு தினத்தை கருப்பு குடியரசு தினமாக அனுசரிப்போம். தேசியக் கொடிக்குப் பதிலாக கருப்புக் கொடி ஏற்றுவோம். கருப்புச் சட்டை அணிவோம். ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் ‘நோட்டாவுக்கே எங்கள் ஓட்டு’ என்று தெளிவாகப் பதிவு செய்வோம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்காத எந்தக் கட்சியையும் ஆதரிக்க மாட்டோம்” என்று கூறினர்.
சென்னை மெரினா போல கோவை, திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை உட்பட தமிழகம் முழுவதும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.