ஓசூர் பெருமாள் கோயிலில் 12ஆம் நூற்றாண்டு சமண கல்வெட்டுகள், சிற்பங்கள் கண்டுபிடிப்பு!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2016/10/0a1a-29.jpg)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரைச் சுற்றி 3 மலைக் குன்றுகள் அமைந்துள்ளன. கிழக்கில் சந்திரசூடேஸ்வரர் மலையும், தென்கிழக்கில் வெங்கடேச பெருமாள் கோயிலும், வடக்கில் பிரம்மாமலையும் உள்ளது. மும்மூர்த்திகளும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது ஓசூரில் சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் குழு, அறம் கிருஷ்ணன் தலைமையில் பிரியன், ராசு,ஜெகன் ஆகியோர், ஓசூர் வெங்கடபெருமாள் கோயிலில் 3 சமண கல்வெட்டுகளும், 3 சிற்பங்களும் உள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து அறம் கிருஷ்ணன் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் தோன்றிய பல தொன்மையான சமயங்களில் சமண சமயமும் ஒன்று. ஓசூர் வழியாக சமண சமயம் பயணப்பட்டிருக்கும் என்பதற்கு, ஓசூர் வெங்கட பெருமாள் கோயிலில் உள்ள கி.பி.12-ம் ஆண்டு நூற்றாண்டைச் சேர்ந்த 3 சமண கல்வெட்டுகளும், 3 சமண கற்சிற்பங்களும் சான்றாக உள்ளன. தமிழ், வடமொழி, கிரந்தம் ஆகிய 3 மொழிகளில் இந்த கல்வெட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டுகள் கி.பி 12-ம் நூற்றாண்டில் ஒய்சாள அரசன் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளன. முதல் கல்வெட்டில், ஓசூரை முரசு நாடு எனவும், செவிடபாடி எனவும் கூறப்பட்டுள்ளது. முரசு நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள இளந்தை எனப்படும் சித்திரமேழி நல்லூர் கிராமத்தை (இன்றைய நல்லூர்) செவிடபாடியில் அமைந்துள்ள இச்சமண கோயிலுக்கு தேவதானமாக வழங்கிய தகவல்கள் உள்ளன.
2-வது கல்வெட்டில், தேவதானமாக கொடுக்கப்பட்ட இளந்தை எனப்படும் சித்திரமேழி நல்லூர் கிராமத்தின் எல்லைகளாக சூழகல்லுக்கு வடக்கும், தாசரபள்ளத்துக்கு கிழக்கும், ஆற்றுக்கு தெற்கும், கீழபள்ளத்துக்கு மேற்கும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருட பூஜைக்கும் 10 கண்டகம் விளையக்கூடிய கழனியும் தேவதானமாக வரி நீக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதை யாறேனும் அழிவு செய்தால் அது கங்கைக்கரையில் நூறாயிரம் குறால் பசுவையும், நூறாயிரம் பிராமணரையும் கொன்றதற்கு சமமாகும் என்று இக்கல்வெட்டு கூறுகிறது.
ஓசூர் வழியாகத்தான் சமண சமயம் தமிழகத்துக்குள் நுழைந்துள்ளது என்பதையும், அதன் காரணமாகவே கி.பி. 12-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியில் சமண சமயம் சிறப்பாக செழிப்புற்று இருந்துள்ளதையும் அறிய முடிகிறது. மேலும் இங்கு இருக்கும் சமண சிற்பம், சமண கல்வெட்டு இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இக்கோயிலின் அருகில் இருக்கும் சந்திரசூடேஸ்வரர் கோயிலின் அடிவாரத்தில் காணப்படும் குகை போன்ற இடத்தில் சமணர்கள் தங்கி இருந்திருக்கலாம்.
இந்த குகைத்தளத்தை சமண பள்ளியாகவும், சமண படுக்கையாகவும் பயன்படுத்தியிருக்க முடியும். இந்த கல்வெட்டுகள் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நமது முன்னோர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் விளக்குவதாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.