ஜெயிலர் – விமர்சனம்

நடிப்பு: ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா மேனன், மாஸ்டர் ரித்விக், விநாயகன், சரவணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ் குமார், சுனில், தமன்னா, யோகி பாபு மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: நெல்சன் திலீப்குமார்

ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன்

படத்தொகுப்பு: ஆர்.நிர்மல்

இசை: அனிருத்

தயாரிப்பு: ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன்

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே.அஹமத்

‘அண்ணாத்த’ படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் போனதால் ரஜினிகாந்தும், ‘பீஸ்ட்’ படம் எதிர்பாராத வகையில் தோல்விப்படமாக முத்திரை குத்தப்பட்டதால் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும், அடுத்து ஒரு மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘ஜெயிலர்’. அவர்களது உழைப்பு வீண் போகவில்லை என்பதை ‘ஜெயிலர்’ பார்த்த ரசிகர்களின் கோலாகல கொண்டாட்டமும், விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுமழையும் நிரூபிக்கின்றன.

ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் ஈடு இணையற்ற வெற்றியைப் பெற்ற படம் ‘பாட்ஷா’. அந்த ‘பாட்ஷா’ டெம்ப்ளேட்டில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது இந்த ‘ஜெயிலர்’ கதை. அதாவது, அதிரடியான ஒரு கடந்தகாலத்தைக் கொண்ட நாயகன், இப்போது ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார். இருப்பினும், மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்ற பழமொழிக்கேற்ப, விதி அறைகூவல்விட்டு அழைக்கும்போது அவர் தடாலென சூப்பர்ஹீரோவாக வெளியே வருவார், சாகசங்கள் புரிவார். இதுதான் ‘பாட்ஷா’ பாணி கதை. இந்த வகையைச் சேர்ந்தது தான் ’ஜெயிலர்’ படக்கதை.

0a1c

நேர்மையும் கண்டிப்பும் உள்ள திகார் ஜெயில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் டைகர் முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்). இவர் தனது மனைவி விஜி (ரம்யா கிருஷ்ணன்), காவல்துறை உதவி ஆணையராக இருக்கும் மகன் அர்ஜுன் (வசந்த் ரவி), மருமகள் (மிர்னா மேனன்), பேரன் (மாஸ்டர் ரித்விக்) ஆகியோருடன் சென்னையில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். வீட்டுக்குத் தேவையான காய்கறி வாங்கி வருவது, மகனின் – பேரனின் ஷூக்களைத் துடைப்பது, ஒரு நல்ல தாத்தாவாக பேரனுடன் சேர்ந்து யூடியூப் வீடியோக்கள் தயாரிப்பது என தனது ஓய்வுக்காலத்தை நிம்மதியாகக் கழிக்கிறார்.

சிலை கடத்தும் கும்பலின் கொடூர மாஃபியாத் தலைவனாக இருப்பவன் வர்மன் (விநாயகன்). இவன் விலையுயர்ந்த, நமது பாரம்பரியச் சின்னங்களாக விளங்கும்  பல கோயில் சிலைகளைத் திருடி வெளிநாடுகளுக்கு கடத்தி வருகிறான். ஒருநாள், சிலைகளைக் கடத்திச் செல்லும் இவனது லாரியை உதவி ஆணையர் அர்ஜுன் மடக்கிப் பிடித்துவிடுகிறார். அவர் விசாரணையை நிறுத்த மறுப்பதால் ஆத்திரப்படும் வர்மன், தனது ஆட்களை அனுப்பி அர்ஜுனை கடத்துகிறான்.

கடத்தப்பட்ட அர்ஜுன் படுகொலை செய்யப்பட்ட தகவல் அவரது தந்தையான முத்துவேல் பாண்டியனுக்குத் தெரிய வருகிறது. இதனால் நிலைகுலைந்து போகும் முத்துவேல் பாண்டியன் சூப்பர் ஹீரோவாக வெளிப்பட்டு, தன் மகனுக்காக பழிவாங்கப் புறப்படுகிறார். மகனை கடத்தியவனை கண்டுபிடித்து கொலை செய்கிறார். பேரனை கொல்ல முயன்றவனை கொலை செய்கிறார். தன் மனைவியை அழிக்கப்போவதாகச் சொன்னவனை கொலை செய்கிறார். இப்படி வர்மனின் ஆட்கள் 3 பேரை கொலை செய்துவிட்டு அவர் வர்மனை நெருங்கும்போது, சற்றும் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்படுகிறது. (அந்த திருப்பம் என்ன என்பதைச் சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால், படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.) இதன்மூலம் முத்துவேல் பாண்டியனை ஒரு நெருக்கடிக்கு உள்ளாக்கி, அவரிடம் தனக்கான, கடினமான, சட்டவிரோத வேலை ஒன்றை செய்யச் சொல்கிறான் வர்மன்.

அந்த வேலையை முத்துவேல் பாண்டியன் செய்து முடித்தாரா? இறுதியில் என்ன ஆனது? என்பது தான் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

0a1d

படத்தின் ஆரம்பத்தில் ‘இந்தப்பூனையும் பால் குடிக்குமா?’ என்கிற அளவுக்கு ரொம்ப சாதுவான குடும்பத் தலைவராக, மிக அமைதியான ஓய்வுபெற்ற ஜெயிலராக வந்து நம்மை கவர்கிறார் ரஜினிகாந்த். “சம்பாதிக்கிறவங்களுக்குத் தான் குடும்பத்துல மரியாதை. படிக்கிறவங்களுக்கும், ரிட்டையர்டு ஆனவங்களுக்கும் மரியாதை இல்லை” என்று புலம்பும் அளவுக்கு சராசரி மனிதராக இறங்கி நின்று பிரமாதமாக நடித்து நம்மை ரசிக்க வைக்கிறார். கால்டாக்ஸி டிரைவராக வரும் யோகிபாபுவுடன் சேர்ந்து ரஜினி கொளுத்திப் போடும் நகைச்சுவை வெடிகளால் திரையரங்கம் வெடித்துச் சிரிக்கிறது. ஆனால், மகன் கொல்லப்பட்டுவிட்டான் என்று தெரிந்தபின் அவரது நடையில், உடல்மொழியில், முகபாவனையில் ஏற்படும் மாற்றங்கள், சாதுவான மனிதன் மறைந்து சூப்பர்ஹீரோ வெளிப்படும் தருணங்கள் பிரமிப்பூட்டுகிறது. “ஒரு அளவுக்கு மேல பேச்சு இல்ல, வீச்சு தான்” என அவர் சுயரூபம் காட்டும்போது திரையரங்கம் ஆர்ப்பரிக்கிறது. இந்த வயதிலும் மனிதர் எப்படி இப்படி நெருப்பாக இருக்கிறார் என்ற வியப்பு ஏற்படுகிறது. அவரது ஸ்டைலையும், எனர்ஜியையும் ‘ஜெயிலர்’ திரையில் பார்த்து மகிழும் எவருக்கும் அவர் இன்னும் பல படங்களில் ஹீரோவாகவே நடிப்பார்; சூப்பர் ஸ்டாராகவே நிலைத்திருப்பார் என்ற எண்ணம் தோன்றுவது நிச்சயம். தவிர, ஃபிளாஷ்பேக்கில் திகார் ஜெயில் அதிகாரியாக வரும் ரஜினி, ‘டீ-ஏஜிங்’ தொழில்நுட்பத்தின் உதவியால் இளமையாக வருவது, அவரது ரசிகர்களுக்கு கண்கொள்ளாக் காட்சி; எப்போதும் காண ஏங்கும் காட்சி. கண்டு களியுங்கள் மக்களே!

சிலை கடத்தும் கும்பலின் கொடூரத் தலைவனாக, வில்லன் வர்மனாக வருகிறார் விநாயகன். ரஜினிக்கு அடுத்தபடியாக நம் கவனம் ஈர்ப்பவர் இவர் தான். துரோகிகளை ஆசிட் நிரப்பிய தொட்டிகளில் மூழ்கடித்துக் கொல்வது, எதிரிகளை சுத்தியலால் அடித்துக்கொல்வது என தன்னை எதிர்ப்பவர்களை பழிவாங்கும் முறையால் மிரட்டியிருக்கிறார். மலையாளம் கலந்து அவர் பேசும் வசனங்களும், மிரள வைக்கும் நடிப்பும் அருமை. ஒரு கட்டத்தில் ரஜினியின் உத்தரவுக்கு இணங்க, அவரது மனைவி ரம்யா கிருஷ்ணனிடம் பவ்யமாக பிச்சை எடுக்கும் காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார்.

ரஜினியின் மனைவி விஜியாக வரும் ரம்யா கிருஷ்ணன், மகன் அர்ஜுனாக வரும் வசந்த் ரவி, பேரனாக வரும் மாஸ்டர் ரித்விக் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். மருமகளாக வரும் மிர்னா மேனன் நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் அவரது கதாபாத்திரத்தை கொஞ்சம் மாற்றி வடிவமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது கதைக்கு விறுவிறுப்பைக் கூட்டாவிட்டாலும், பார்வையாளர்களுக்கு சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது. அவர்கள் வரும் காட்சிகள் குறைவு என்றாலும், அவர்களது கதாபாத்திரங்கள் மனதில் நிற்கும் அளவுக்கு அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள்.

”காவாலா…” பாடலுக்கு குத்தாட்டம் போடும் தமன்னா, கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார். அவருக்கும் சுனிலுக்குமான காட்சிகள் படத்தின் இரண்டாம் பாதியில் பார்வையாளர்கள் சிரிக்க பயன்பட்டுள்ளன.

படத்தின் முதல் பாதி முழுவதுமே இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அதகளம் செய்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தின் அவுட்லைன் அடிக்கடி நினைவுக்கு வந்தாலும், காட்சிகளை மாற்றிப்போட்டு அதை மறக்கடித்து விடுகிறார் இயக்குனர். படம் தொடங்கியதுமே சிலை திருடும் கும்பல், கொடூர வில்லன், அவரைப் பிடிக்க தீவிரம் காட்டும் காவல்துறை அதிகாரி என பரபரக்கிறது திரைக்கதை. இடைவேளைக் காட்சி அனலாக இருக்கிறது. இப்படியாக முதல் பாதி சூப்பராக, எதிர்பார்ப்புக்கும் மேலாக பார்வையாளர்களுக்கு நிறைவைக் கொடுக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியின் முதல் பகுதி எங்கெங்கோ சுற்றி விறுவிறுப்பையும், சுவாரஸ்யத்தையும் குறைத்துவிடுகிறது. அதன்பின்னர் இரண்டாம் பாதியின் பின்பகுதி, சிவாஜி கணேசன் நடித்த ‘தங்கப்பதக்கம்’ படத்தை நினைவூட்டும் வகையில் பயணிக்கத் தொடங்கியவுடன் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் சேர்ந்துகொள்கின்றன. யாருமே எதிர்பார்க்காத இறுதிக்காட்சி திகைக்கவும், திடுக்கிடவும் வைக்கிறது. அந்த வகையில் ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, ஏனைய சினிமா ரசிகர்களுக்கும் பிடித்த படமாக ‘ஜெயிலர்’ படத்தை படைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். பாராட்டுக்கள்.

 விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு அருமை. ரஜினியின் அழகை, நடையை, ஸ்டைலை, ஆவேசத்தை எந்தெந்த கோணங்களில் எப்படியெல்லாம் காட்ட முடியுமோ அப்படியெல்லாம் ரசித்து ரசித்து படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே பட்டிதொட்டி வரை பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. அதோடு அட்டகாசமான பின்னணி இசையைக் கொடுத்து அதிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

‘ஜெயிலர்’ – ரஜினியின் வெற்றிமகுடத்தில் மற்றுமொரு ரத்தினக்கல்!