”குரைக்காத நாயும் இல்லை; குறை சொல்லாத வாயும் இல்லை”: ‘ஜெயிலர்’ படவிழாவில் ரஜினி பேச்சு!

’சன் டிவி நெட்ஒர்க்’ சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் என மூன்று மொழி சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் ‘ஜெயிலர்’ ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி நேற்று சென்னையில் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

0a1a

இவ்விழாவில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், இயக்குநர் நெல்சன், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அனிருத், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விக்னேஷ் சிவன், அருண்ராஜா, VTV கணேஷ், சூப்பர் சுப்பு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ரஜினி குறித்தும் ‘ஜெயிலர்’ படம் குறித்தும் பேசினார்கள்.

ரசிகர்களின் ஆரவாரத்தோடு நடைபெற்ற இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

மூன்று வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்திக்கிறேன். சரியான கதையும் இயக்குனரும் அமையவில்லை. அதனால்தான் அண்ணாத்தக்குப் பிறகு இவ்வளவு இடைவெளி ஏற்பட்டுவிட்டது.

நெல்சனை கதை சொல்ல 10 மணிக்கு வரச் சொன்னேன். அவர் 11:30 மணிக்கு வரவா என்றார். ஆனால், 12 மணி வரை ஆபிஸ் பக்கமே வரவில்லை. அதன்பிறகு, வந்தவர் உடனே நல்லதாக ஒரு காபி கொடுங்கனு கேட்டார். குடிச்சிட்டு கதையோட ஒன்லைன் சொன்னார். சொல்லச் சொல்ல என்னை அப்படியே உத்து பார்த்தாரு. ‘இவன் ஹீரோவா எப்டி?’ ன்னு அவர் மனசுல நினைச்சது எனக்கு கேட்டுடிச்சு.

ஆனாலும் அந்த ஒன்லைன் எனக்கு பிடிச்சிருந்தது. பீஸ்ட்ட முடிச்சிட்டு வரேன்னு கிளம்பிட்டாரு. அப்புறம் அந்தப் படத்த முடிச்சிட்டு வந்து முழுக்கதையையும் சொன்னாரு. முதல்முறை கேட்டதை விட அது 100 மடங்கு சூப்பரா இருந்துச்சு.

‘ஜெயிலர்’ அறிவிப்புக்குப் பிறகுதான் பீஸ்ட் வெளியானது. நிறைய பேர் என்னிடம் நெல்சனுக்குதான் படம் கொடுக்க வேண்டுமா என யோசிக்க சொன்னார்கள். ஆனால், எப்போதுமே ஒரு இயக்குனர் தோற்பதில்லை. அவர் எடுக்கும் சப்ஜெக்ட்டுகள்தான் தோற்கிறது.

அடுத்து நெல்சன், ‘கதை தான் முடிவு பண்ணியாச்சு; உங்களை சார்ஜ் ஏத்தணும்’ என்று சொன்னார். அதுக்காக நம்ம லவ் ஸ்டோரி சொல்லணுமா ?’ என்று கேட்டேன்.

நெல்சன் நல்ல நகைச்சுவையாகப் பேசுவார். ஆனால், டைரக்சன் என்று வந்துவிட்டால் ஹிட்லராக மாறிவிடுவார். என்ன வேண்டுமோ அதை வாங்காமல் விடமாட்டார்.

படத்துல பிளாக் காமெடி எல்லாம் இருக்கு. அதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. சீரியஸான சீன்ல எல்லாம் காமெடி பண்ணுவார் நெல்சன்.

‘காவாலா’ சாங்ல எனக்கு நிறைய ஸ்டெப்ஸ் இருக்குனு பில்டப் கொடுத்து கூட்டிட்டு போனாங்க. ஆனா, ரெண்டே ஸ்டெப் கொடுத்துட்டு போதும்னு சொல்லிட்டாங்க. அன்னைக்கு ஃபுல்லா நான் தமன்னாகிட்ட பேசவே இல்ல!

குரைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. நம்ம வேலையப் பார்த்துட்டு போய்க்கிட்டே இருக்கணும்.

குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருந்திருப்பேன். ‘குடிப்பழக்கம்’ எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம். தயவு செய்து குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். நீங்க குடிக்கிறதால அம்மா, பொண்டாட்டினு குடும்பத்துல இருக்குற எல்லோருடைய வாழ்க்கையும் பாதிக்கப்படுது.

காட்டுல சின்ன மிருகங்க எப்பவும் பெரிய மிருகங்கள தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கும். உதாரணத்துக்கு காக்கா எப்பவும் கழுகை சீண்டிக்கிட்டே இருக்கும். ஆனா, கழுகு எப்பவுமே அமைதியா இருக்கும். பறக்கும்போது கழுக பார்த்து காக்கா உயரமா பறக்க நினைக்கும். இருந்தாலும் காக்காவால அது முடியாது. ஆனா, கழுகு இறக்கையை கூட ஆட்டாம எட்ட முடியாத உயரத்துல பறந்துக்கிட்டே இருக்கும். உலகின் உன்னதமான மொழி ‘மெளனம்’தான்!

சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பிரச்சனை இப்ப இல்ல, 1977-லயே ஆரம்பிச்சிருச்சு. அப்ப எனக்கு ஒரு படத்துல சூப்பர் ஸ்டார்னு டைட்டில் போட்டப்ப நானே வேணாம்னு சொன்னேன். ஏன்னா, அப்ப கமல் ரொம்ப பெரிய உயரத்துல இருந்தாரு. சிவாஜியும் ஹீரோவா நடிச்சிட்டு இருந்தாரு. அதனால சூப்பர் ஸ்டார் பட்டம் வேணாம்னு சொன்னேன். ஆனா, ரஜினி பயந்துட்டாருன்னு சொன்னாங்க. நாம பயப்படுறது ரெண்டே பேருக்குதான். ஒன்னு, அந்த பரம்பொருள் கடவுளுக்கு; இன்னொன்னு, நல்லவங்களுக்கு. மற்றபடி யாருக்கும் பயப்படுறதில்ல.

இவ்வாறு ரஜினி பேசினார்.

இவ்விழாவில் நடிகர் விடிவி கணேஷ் பேசுகையில், “நடிகர் விஜயைப் போல ரஜினியும் காலையிலேயே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். கேரவனுக்கு செல்ல மாட்டார். வெயிலாக இருக்கிறதே என கூறினால் இங்கதான் உட்காரணும், இதுதான் நேச்சுரல் லைட் என்பார்” என பேசினார்.

இயக்குனர் நெல்சன் பேசுகையில், “ரஜினியை போய் பாருங்க. அவரு நிச்சயம் படம் நடிப்பார் என விஜய் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார்” என்றார்.

தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பேசுகையில், “நடிகர் விஜய் கூறியது போல ரஜினிக்கு அவரேதான் போட்டி” என்றார்.