’ஜகமே தந்திரம்’ தயாரிப்பாள ருக்கும் தனுஷுக்கும் இடையே மனவருத்தம்?
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், சில காட்சிகளை ராஜஸ்தான், மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளிலும் படமாக்கியுள்ளனர்.
இந்நிலையில், ‘ஜகமே தந்திரம்’ நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் பெரும் விலை கொடுத்து வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னும் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றாலும், அனைத்துமே பேசப்பட்டு முடிவாகவிட்டதாக தெரிகிறது.
எப்போதுமே தனுஷ் திரையரங்க வெளியீட்டுக்கு முன்னுரிமைக் கொடுப்பவர். ‘மாஸ்டர்’ படம் திரையரங்கில் வெளியாகும்போது, அந்தப் படத்துக்குப் பாராட்டு தெரிவித்து முதல் ஆளாக ட்வீட் செய்தவர் தனுஷ் என்பது நினைவு கூரத்தக்கது. தற்போது ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ஓடிடி வெளியீட்டு முடிவால், தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் சசிகாந்த் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் தனுஷின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பின் தொடர்வதை நிறுத்திவிட்டார் தயாரிப்பாளர் சசிகாந்த். இதனை முன்வைத்து இருவருக்கும் இடையேயான பிரச்சினை பெரிதாகியுள்ளது உறுதியாகிறது. மேலும், ‘கர்ணன்’ திரையரங்க வெளியீட்டு முடிவுக்கு தாணுவுக்கு நன்றி தெரிவித்து தனுஷ் அறிக்கை கொடுத்ததும் இதன் பின்னணியில் தான் எனவும் கூறப்படுகிறது.
இன்னும் ‘ஜகமே தந்திரம்’ வெளியீடு தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதனால் இந்தப் படம் தொடர்பாக வெவ்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.