ஜாக்பாட் – விமர்சனம்

கடந்த ஆண்டு வெளிவந்த குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாணின் அடுத்த படம் இது.

முந்தைய படத்தில் இருந்த நடிகர்கள் பலரும் இந்தப் படத்திலும் இருக்கிறார்கள் என்பதால் சற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ஜாக்பாட்.

ரேவதியும் ஜோதிகாவும் சின்னச் சின்னத் திருட்டில் ஈடுபடுபவர்கள். ஒரு முறை சிறைக்குச் செல்லும்போது அள்ளஅள்ளக் குறையாத அட்சயபாத்திரம் ஒன்று இருப்பதும், அது தாதாவான ஆனந்த்ராஜ் வீட்டில் புதைக்கப்பட்டிருப்பதும் தெரியவருகிறது.

அதனால், அந்த பாத்திரத்தைக் கைப்பற்ற முயல்கிறார்கள் இருவரும். அதைக் கைப்பற்றுவதில் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சனைகளை மீறி பாத்திரத்தைக் கைப்பற்றுகிறார்களா என்பது மீதிக் கதை.

குலேபகாவலி படத்தைப் பார்த்தவர்களுக்கு, ஜாக்பாட் படம் குலேபகாவலியின் இரண்டாவது பாகமோ என்று தோன்றக்கூடும். அந்தப் படத்தில் இருந்த பலரும் இந்தப் படத்திலும் இருக்கிறார்கள்.

அந்தப் படத்தில் வைரப் புதையலைத் தேடுவார்கள் என்றால் இந்தப் படத்தில் அட்சயபாத்திரம்.

குலேபகாவலியில் வந்ததைப் போலவே இந்தப் படத்திலும் மாஷா என்ற பெயருடனேயே வருகிறார் ரேவதி. அதில் ஹன்சிகா மோத்வானி. இதில் ஜோதிகா. அவ்வளவுதான் வித்தியாசம்.

ஆனால், குலேபகாவலியில் இருந்த கச்சிதமும் நகைச்சுவையும் பெரிய அளவில் இதில் இல்லை. பல நகைச்சுவைக் காட்சிகள் புன்னகையைக்கூட ஏற்படுத்தாமல் கடந்து செல்கின்றன.

திடீர் திடீரென உள்ளே நுழையும் பாடல்கள், மனதில் ஒட்டாத சில காட்சிகள், கதாபாத்திரங்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டேயிருப்பது போன்ற முந்தைய படத்தில் இருந்த பிரச்சனைகள் இந்தப் படத்திலும் இருக்கின்றன.

ஆனால், படத்தின் முக்கியமான பிரச்சனை திரைக்கதைதான். பல காட்சிகள் பொறுமையைச் சோதிக்கின்றன

இந்தப் படத்தின் ஒரே பலம், ஆனந்த்ராஜ். மனிதர் தலைகாட்டும் காட்சிகளில் எல்லாம் அசத்துகிறார்.

யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் என பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் அவர்களையெல்லாம் தாண்டிச் செல்கிறார் ஆனந்த்ராஜ்.

குறிப்பாக, ஒரு புற்றுக் கோவிலைத் தேடிச் செல்லும்போது தப்புத்தப்பாக எழுதப்பட்ட பெயர்ப் பலகைகளை படித்து, விளக்கம் தரும் காட்சிகள். துவக்கத்திலிருந்து படம் முடியும்வரை, இவர் வரும் காட்சிகள் மட்டுமே ஆர்வத்தைத் தக்கவைக்கின்றன.

நாயகியாக வரும் ஜோதிகா பறந்து பறந்து சண்டை போடுகிறார். பல காட்சிகளில் தேவைக்கு அதிகமாக நடிக்கிறார்.

ஆனால், நகைச்சுவையுடன் கூடிய இந்த திருடி பாத்திரம் அவருக்குச் சரியாகப் பொருந்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

யோகி பாபு பல காட்சிகளில் சிரிப்பை ஏற்படுத்துகிறார் என்றாலும் அவர் வரும் காட்சிகள் கதையுடன் பொருந்தாமல் தனித்துத் தெரிகின்றன.

ஒரு புதையல், அதைத் தேடும் ஒரு சிறு திருட்டுக் கும்பல், அதைத் தடுக்கும் வில்லன் என ஒரு சுவாரஸ்யமான ஒற்றை வரியைத் தேர்வுசெய்திருக்கும் கல்யாண், அதை சுவாரஸ்யமான திரைக்கதையாக்குவதில் சற்று சறுக்கியிருக்கிறார். ஆனந்த்ராஜுக்காக பார்த்துவைக்கலாம்.