ஜே.பேபி – விமர்சனம்

நடிப்பு: ஊர்வசி, தினேஷ், மாறன், சேகர் நாராயணன், மெலடி டார்கஸ், தாட்சாயிணி, இஸ்மத் பானு, சபீதா ராய், மாயாஸ்ரீ மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: சுரேஷ் மாரி

ஒளிப்பதிவு: ஜெயந்த் சேதுமாதவன்

படத்தொகுப்பு: சண்முகம் வேலுச்சாமி

இசை: டோனி பிரிட்டோ

தயாரிப்பு: நீலம் புரொடக்‌ஷன்ஸ், நீலம் ஸ்டூடியோஸ், விஸ்டாஸ் மீடியா

தயாரிப்பாளர்கள்: பா.இரஞ்சித், அபயானந்த் சிங், பியூஷ் சிங். சௌரப் குப்தா, அதிதி ஆனந்த், அஷ்வினி சௌத்ரி

வெளியீடு: ’சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ சக்திவேலன்

பத்திரிகை தொடர்பு: குணா

தமிழ்த் திரையுலகம் இதுவரை கண்டிராத புத்தம்புது கதையமைப்பையும், கதாபாத்திர வடிவமைப்பையும் கொண்ட அருமையான படம் இது என்று, வீட்டின் மொட்டை மாடியில் ஏறி நின்று, ஊர் உலகத்துக்குக் கேட்கும் விதத்தில் உரக்கக் கூவலாம். அப்படிப்பட்ட சிறப்பான படைப்பு இது.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது; என்றாலும், ஆவணப் படத்துக்கான கூறுகள் எங்கும் எதிலும் எட்டிப் பார்த்துவிடக் கூடாது என்ற கவனத்துடன், கலைநயம் மற்றும் சுவாரஸ்யம் சேர்த்து, நேர்த்தியான புனைவுப் படைப்பாக இதை உருவாக்கியிருக்கிறார்கள்.

தாய்வழிச் சமூகத்தை தோற்றுவாயாகக் கொண்ட தமிழ்ச் சமூகத்தில், தாய் இன்றும் போற்றுதலுக்கு உரியவர். அதனால் தான் தாயன்பு, தாயின் தியாகம் ஆகியவற்றை சொல்லாத, கொண்டாடாத தமிழ் திரைப்படங்களே இல்லை என்று அடித்துச் சொல்லலாம். அதிரடி ஆக் ஷன் படங்களில் கூட தாய்மையை உயர்த்திப்பிடிக்கும் ஒருசில காட்சிகளாவது நிச்சயம் இடம் பெறும். தாய் சென்டிமெண்ட்டை ஒரு வணிக உத்தியாகவே தமிழ் சினிமாக்காரர்கள் – குறிப்பாக நட்சத்திர நடிகர்கள் – பயன்படுத்தி வருகிறார்கள் என்பது கண்கூடு. ஆனால் இவை எல்லாம் தாய் பற்றிய சித்திரத்தின் ஒரு பக்கம்; அவ்வளவே.

தாய்க்கு வேதனையான இன்னொரு பக்கம் இருக்கிறது. அது பற்றி – பெற்ற பிள்ளைகள் உட்பட – யாரும் கண்டுகொள்வதில்லை. சிந்திப்பதும் இல்லை. ஒருவேளை தெரிந்திருந்தாலும், அதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. அது தான் தாயின் முதுமைப் பருவத் துயர். வயோதிகம் கூடக் கூட, உடல் நலிவுறுவது போலவே தாயின் மனமும் நலிவுறுகிறது; பேதலிக்கிறது. தாறுமாறான நடத்தைக்கு வழிவகுக்கும் இந்த அகச்சிக்கலை அவர் மட்டுமல்ல, அவரது அருகிலுள்ள மற்றவர்களும் கையாள முடியாமல் தவிக்கிறார்கள்; கோபிக்கிறார்கள். இதனால் பலப் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தமிழ்ச்சினிமா இதுவரை பேசாத இந்த பொருள் பற்றி பேசும் மிக முக்கியமான படமாக உருவாகி வெளிவந்திருக்கிறது ‘ஜே.பேபி’.

0a1m

கதை சென்னை அயனாவரம் அன்னை சத்யா நகர் பகுதியில் தொடங்குகிறது. இங்கு வீடுகளுக்கு வண்ணம் பூசும் பெயிண்டர் வேலை பார்க்கும் செந்தில் (மாறன்) வசித்து வருகிறார். இவர் பெரிய மதுப்பிரியர். இவரது தம்பி சங்கர் (தினேஷ்) ஷேர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இவர் மிகவும் பொறுப்பானவர் என பெயர் எடுத்தவர். தனித் தனியே குடித்தனம் நடத்தும் இந்த அண்ணன் தம்பி இருவரும், மனத்தாங்கல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகப் பேசிக்கொள்வதில்லை.

ஒருநாள். போலீஸ் நிலையத்துக்கு உடனே வருமாறு இந்த இருவருக்கும் சம்மன் வருகிறது. ‘நாம் என்ன தப்பு செய்தோம்? எதுக்கு நம்மை வரச் சொல்லியிருக்கிறார்கள்?’ என்ற குழப்பத்துடன் இருவரும் போலீஸ் நிலையம் செல்கிறார்கள். “ஜே.பேபி உங்க அம்மாவா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்க, இவர்கள் “ஆம்” என்கிறார்கள். “எங்கே உங்க அம்மா?” என்று கேட்க, செந்தில் “என் வீட்டில் இல்லை. இவன் வீட்டில்” என்று சங்கரை கை காட்ட, சங்கர், “என் வீட்டில் இல்லை. பெரிய அக்கா வீட்டில் அல்லது சின்ன அக்கா வீட்டில் இருப்பாங்க” என்று சொல்ல, இவற்றை மறுக்கும் இன்ஸ்பெக்டர் பெரிய குண்டைத் தூக்கிப் போடுகிறார்: “உங்க அம்மா மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுல ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல இருக்காங்க. அங்க இருந்து எங்களுக்கு தகவல் வந்திருக்கு” என்றவுடன் தூக்கி வாரிப் போடுகிறது சகோதரர்களுக்கு. “இது தான் வயசான உங்க அம்மாவை நீங்க பாத்துக்கிற லட்சணமா?” என்று திட்டிவிட்டு, கறாரான அறிவுரைகள் கூறி, “முதல்ல கொல்கத்தாவுக்குப் போய் உங்கம்மாவை பத்திரமா கூட்டிட்டு வாங்க” என்று சொல்லி இவர்களை அனுப்புகிறார் இன்ஸ்பெக்டர்.

இருவரும் கிளம்பி ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில், அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் போகிறார்கள். வங்காள மொழி இவர்களுக்குத் தெரியாது என்பது ஒரு பிரச்சனை. அதோடு இவர்கள் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லை என்பது இன்னொரு பிரச்சனை.

படாத பாடு பட்டு ஹவுரா போய் சேருகிறார்கள். அங்கு ராணுவத்தில் பணிபுரியும் மூர்த்தி என்பவர் இவர்களுக்கு உடனிருந்து உதவ முன்வருகிறார். அம்மா இருப்பதாக சொல்லப்பட்ட போலீஸ் நிலையத்துக்குப் போகிறார்கள். அங்கே அம்மா இல்லை. அவரை ஹோமுக்கு அனுப்பிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஹோமுக்குப் போகிறார்கள். அங்கும் அம்மா இல்லை. அவர் தப்பி ஓடிவிட்டார் என்றும், எங்கே போனார் என தெரியவில்லை என்றும் கை விரிக்கிறார்கள். சகோதரர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.

அதன்பின் என்ன நடந்தது? செந்திலும், சங்கரும் அம்மாவைக் கண்டுபிடித்தார்களா? அவரை சென்னைக்கு அழைத்து வந்தார்களா? அம்மா சென்னையை விட்டு வெளியேறி கொல்கத்தாவுக்குச் செல்ல என்ன காரணம்? பேச்சுவார்த்தை அற்றுப்போகும் அளவுக்கு அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் என்ன பிரச்சனை? அவர்களுக்கு கொல்கத்தா பயணம் கற்றுக்கொடுத்த பாடம் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு எமோஷனும், நகைச்சுவையும் கலந்து சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘ஜே.பேபி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இரண்டு மகள்களையும், மூன்று மகன்களையும் பெற்று வளர்த்து ஆளாக்கி, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்ப வாழ்க்கை அமைத்துக் கொடுத்து அழகு பார்த்த அம்மாவாக, ஜே.பேபி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஊர்வசி. அவர் நடித்திருக்கிறார் என்பதை விட வயோதிகத் தாயாகவே அச்சு அசலாக வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். மனநலிவு காரணமாக அவர், அடுத்தவர் வீட்டுக்கதவுகளை மூடி பூட்டுப் போட்டு அவர்களைக் கதறவிடுவது, அவர்களுக்கு வந்த தபால்களை கேட் பாக்ஸிலிருந்து எடுத்து வைத்துக்கொண்டு போஸ்ட் ஆபீஸை திணறடிப்பது, வீட்டிலிருந்து பணத்தை எடுத்து முந்தானையில் முடிந்துகொண்டுபோய், பூக்காரப் பெண் போன்ற ஏழைபாழைகளுக்குத் தானம் பண்ணுவது, ஆட்டோவிலிருந்த பள்ளிக்குழந்தையை யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்றுவிட, குழந்தையைக் காணோம் என்று ஊரே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்க, குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்து கூட்டிவருவது,  போலீஸ், மருத்துவர், நீதிபதி போன்ற எவரையும் மதிக்காமல், “நான் யார் தெரியுமா? இந்திராகாந்தி ஃபிரண்டு” என்று ஒரு இடத்திலும், “ஜெயலலிதா ஃபிரண்டு” என்று இன்னொரு இடத்திலும், “எனக்கு ஸ்டாலினைத் தெரியும். பாக்குறியா?” என்று வேறொரு இடத்திலும் உதார் காட்டுவது போன்ற அலப்பரைகள் மொத்த திரையரங்கையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. அதேநேரத்தில், தனது தாறுமாறான நடத்தை தன் பிள்ளைகளுக்குத் தொந்தரவாக இருக்கிறது என்பதை உணரும்போதெல்லாம், “நான் உங்களுக்கு பாரமாயிட்டேனா நைனா?” என உருக்கமாகக் கேட்டு பார்வையாளர்களைக் கண் கலங்க வைத்து விடுகிறார். ஊர்வசியின் சிறந்த நடிப்பு பற்றி இதுபோல் இன்னும் பல பக்கங்கள் எழுதிக்கொண்டே போகலாம். சுருக்கமாக சொல்வதென்றால், ஊர்வசி பல படங்களில் நடிப்பின் உச்சம் தொட்டிருந்தாலும், அவற்றுக்கெல்லாம் மாஸ்டர் பீஸ் இந்த ஜே.பேபி.

ஷேர் ஆட்டோ டிரைவராக, ஜே.பேபியின் மகனாக சங்கர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தினேஷ். அவர் தன் கதாபாத்திரத்துக்காக உடலை வருத்தி நிறைய மெனக்கெடுபவர் என்பது தெரிந்தது தான். அதுபோல இந்த படத்துக்காக அவர் சற்று தொந்தி துருத்தும் அளவுக்கு கொஞ்சம் சதை போட்டு, ஆளே வித்தியாசமாக வருகிறார். நிறைமாதக் கர்ப்பிணி மனைவி பற்றிய பதட்டமான சிந்தனை ஒருபக்கம், பாசத்துக்குரிய அம்மா தன் விசித்திரமான நடத்தையால் இழுத்துவரும் பிரச்சனைகள் மறுபக்கம், தன்னைத் திட்டி அடித்த பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துகொண்டானே என்ற கோபத்தில் முறைத்துத் திரியும் அண்ணன் இன்னொரு பக்கம் என்று சுற்றிச் சுற்றி சுழன்றடிக்கும் கவலைகளைத் தாங்கி வாழ்க்கையை நகர்த்தும் கீழ்நடுத்தர வர்க்கக் குடும்ப மனிதராக பிரமாதமாக நடித்திருக்கிறார் தினேஷ்.

பெயிண்டராக, ஜே.பேபியின் மூத்த மகனாக, மதுப்பிரியராக செந்தில் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மாறன். வழக்கமாக காமெடிக் கும்பலில் ஒருவராக வந்து, ஒன்லைன் காமெடிகளை உதிர்த்து, அடுத்தவரை கலாய்த்துவிட்டுப் போகும் பாத்திரத்தில் வரும் மாறனுக்கு இந்த படத்தில் படம் முழுக்க வரும் அழுத்தமான கதாபாத்திரம். கிடைத்த வாய்ப்பை சரியாகப் புரிந்துகொண்டு, சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார். போகிற போக்கில் அவர் அடிக்கும் ஜோக்குகளுக்கு திரையரங்கமே வெடித்துச் சிரிக்கிறது. உதாரணமாக, தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் கல்யாணத்தன்று தன் காதலனுடன் ஓடிவிட, கவலையுடன் இருக்கும் மாறனிடம், “இவ போனதுக்கு கவலைப்படாதே. நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு அம்மா சொல்லி இருக்கு இல்ல..?” என்று தினேஷ் ஆறுதல் கூற, “இந்தப் பொண்ணையும் நல்ல பொண்ணுன்னுதான் அம்மா சொல்லுச்சு..” என்று மாறன் சொல்ல, அதைக்கேட்டு வயிறு வலிக்க சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அதுபோல் ஹவுரா எக்ஸ்பிரஸ் அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்து, ஒவ்வொருவரையும் “டேய் நவுர்ரா… நவுர்ரா..” என்று தள்ளிக்கொண்டே வெளியே வந்து “இதுக்கு ’ஹவுரா எக்ஸ்பிரஸ்’னு பேர் வச்சதுக்கு பதிலா ’நவுர்ரா எக்ஸ்பிரஸ்’னு பேர் வச்சிருக்கலாம்.. என்று மாறன் அடிக்கும் பஞ்ச் பார்வையாளர்களைக் குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைக்கிறது. நகைச்சுவை நடிப்பில் மட்டும் அல்லாமல், அம்மாவைத் தொலைத்துவிட்ட பதட்டத்தில் இருப்பது, தம்பியை முறைத்துக்கொண்டே திரிவது, இறுதியில் உடைந்து அழவது என்ற குணச்சித்திர நடிப்பிலும் மாறன் ஸ்கோர் செய்திருக்கிறார்.

நிஜ வாழ்க்கைக் கதையில் சகோதரர்களுக்கு கல்கத்தாவில் உதவிய நிஜ மூர்த்தி, இந்த படத்தில் அதே பெயரில், அதே கதாபாத்திரத்தில் வந்து மனம் நெகிழ வைக்கிறார். கெட்டவர்கள் மலிந்த இந்த கேடுகெட்ட மனித உயிரினத்தில், ‘வணக்கத்துக்குரிய மூர்த்தி’களும் இருப்பது ஆறுதலான விஷயம். சல்யூட் மூர்த்தி சார்!

இவர்களுடன் சங்கரின் மனைவியாக வரும் இஸ்மத் பானு, செந்திலின் மனைவியாக வரும் சபீதா ராய், செல்வியாக வரும் மெலடி டார்கஸ், சக்தியாக வரும் சேகர் நாராயணன், இவரது மனைவியாக வரும் மாயா ஸ்ரீ, ரமணியாக வரும் தாட்சாயிணி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரமாக மாறி, அதற்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஒரு தாயின் முதுமைத் துயரும், வலியும் எப்படிப்பட்டவை என்பதை உண்மைக்கதையை அடியொற்றிச் சென்று, அருமையாக கதை சமைத்து, எமோஷனும், காமெடியும் கலந்து திரைக்கதை அமைத்து, கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிப்புக் கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களை சிறப்பாக வேலை வாங்கி, அனைத்துத் தரப்பினரும் ரசிக்கத்தக்க படமாக இதை படைத்தளித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி. பாராட்டுகள். அவருக்கும், இந்த படத்துக்கும் விருதுகள் நிச்சயம் குவியும்.

ஜெயந்த் சேதுமாதவனின் ஒளிப்பதிவும், டோனி பிரிட்டோவின் இசையும் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘ஜெ.பேபி’ – அவசியம் குடும்பம் குடும்பமாக வந்து பார்த்து ரசிக்கலாம்! பாடமும் கற்கலாம்!