இவன் தந்திரன் – விமர்சனம்

“மூணாம் வகுப்பு பாஸாகாதவன் கூட மந்திரியாகி, 500 கோடி, 1000 கோடி என கோடி கோடியாய் சம்பாதிக்கிறான். ஆனால் கஷ்டப்பட்டு பி.இ., எம்.இ. படித்தவன் எல்லாம், வெறும் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு, தன் படிப்புக்கு சம்பந்தமே இல்லாத ஹோட்டல் வேலை போன்ற உப்புச்சப்பில்லாத வேலை பார்த்து கஷ்டப்படுகிறான்” என்ற இன்றைய நிலவரத்தை, சமூக அவலத்தை, நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி, விறுவிறுப்பான ‘தொழில்நுட்ப புனைவுக்கதை’யாய் சொல்லுகிற படம் தான் ‘இவன் தந்திரன்’.
நாயகன் சக்தி (கௌதம் காத்திக்), அவரது நண்பர் பாலாஜி (ஆர்ஜே பாலாஜி) ஆகிய இருவரும் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, சென்னை ரிச்சி தெருவில் மொபைல், லேப்டாப் போன்ற மின்னணு சாதனப் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார்கள்.
வில்லனான மத்திய மனிதவளத் துறை அமைச்சர் தேவராஜ், “போதுமான வசதிகள் செய்யப்படவில்லை” என்று குற்றம் சாட்டி, 50க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூட உத்தரவிடுகிறார். அதன்பின், பொறியியல் கல்லூரி நிர்வாகங்களிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு, அவர்களது கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்குகிறார்.
அமைச்சர் தேவராஜின் வீட்டில் சிசிடிவி பொருத்துவதற்காக நாயகன் சக்தியும், அவரது நண்பர் பாலாஜியும் அழைக்கப்படுகிறார்கள். அந்த வேலையை முடித்த பிறகு அதற்கான கூலியான 23 ஆயிரம் ரூபாயை கொடுக்காமல் அவர்களை இழுத்தடிக்கிறது அமைச்சர் வகையறா.
செய்த வேலைக்கு கூலி கிடைக்காததோடு அவமானத்துக்கும் ஆளாகும் நாயகன் சக்தி, அமைச்சர் வசம் பெட்டி பெட்டியாய் 500 கோடி ரூபாய் லஞ்சப் பணம் இருப்பதை, தனது கம்ப்யூட்டர் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி ரகசியமாக படம் பிடித்து, தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல், சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்.
இதனால் அமைச்சர் பதவியை இழக்கும் வில்லன் தேவராஜ், தனது பதவிக்கு ஆப்பு வைத்த அந்த மர்ம நபரை தேட ஆரம்பிக்கிறார். அவரிடம் நாயகன் சிக்கினாரா? இருவருக்கும் இடையிலான இந்த மோதலில் இறுதியில் வெற்றி பெற்றது யார்? என்பது மீதிக்கதை.
நாயகன் கௌதம் கார்த்திக்குக்கு இது ஆறாவது படம். நடிப்பில் தேர்ச்சி தெரிகிறது. இதற்குமுன் வெளிவந்த ‘ரங்கூன்’ படம் போல் இதிலும் கதாபாத்திரத்துக்குள் தன்னை சாமர்த்தியமாக பொருத்திக்கொண்டு போதுமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’ போல கதை தேர்வில் தொடர்ந்து கவனம் செலுத்தினால், தமிழ் திரையுலகில் நிலையான கதாநாயகனாக அவர் வலம் வரலாம்.
நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் அழகாக இருக்கிறார். அளவாய் நடித்திருக்கிறார். ஆனால், கௌதம் கார்த்திக்கை விட வயதில் மூத்தவர் போல இருக்கிறார். அவருக்கும் நாயகனுக்கும் இடையே வழக்கமான மோதலாய் தொடங்கும் சந்திப்புகள், பின்னர் தனித்துவமான காதலாய் மலருகையில், ரசனையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை நினைவூட்டும் தோற்றத்தில், ‘மத்திய மனிதவளத் துறை அமைச்சர் தேவராஜ்’ என்ற கதாபாத்திரத்தில் வரும் சூப்பர் சுப்பராயன் மிகச் சரியான தேர்வு. வில்லனாக மிரட்டியிருக்கிறார்.
நாயகனின் நண்பராக வரும் ஆர்ஜே. பாலாஜியின் காமெடி வசனங்கள் படம் முழுக்க விரவியிருப்பது பெரிய பிளஸ். சமகால அரசியல் உட்பட சமகால நிகழ்வுகளை அவர் கலாய்க்கும் போதெல்லாம் திரையரங்கில் க்ளாப்ஸ் பறக்கிறது. மனிதர் கூவத்தூர் ரிசார்ட் விவகாரத்தைக்கூட விட்டு வைக்கவில்லை!
இன்றைய கல்வி எப்படி வியாபாரமாகி சமுதாயத்தை சீரழித்துக்கொண்டிருக்கிறது என்பதை, எவ்வித சமரசமும் இல்லாமல், அதே நேரத்தில் காமெடி, ஆக்ஷன், காதல் போன்ற ஜனரஞ்சக அம்சங்களை அளவாய் கலந்து, விறுவிறுப்பான 120 நிமிட பொழுதுபோக்கு படமாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கண்ணன். சற்று சறுக்கினாலும் வறண்டு போரடித்துவிடக் கூடிய ஒரு கதையை, அலுப்பு ஏற்பட்டுவிடாமல் படுசுவாரஸ்யமாய் நகர்த்திச் செல்வதில் இயக்குனர் வெற்றி பெற்றுள்ளார்.
ரூபாய் நோட்டுக்குள் பொருத்தப்படும் நுண்ணிய கருவி, அந்த நோட்டு பயணிக்கும் பாதைகளையெல்லாம் நாயகனின் கம்ப்யூட்டர் திரையில் காட்டுவது, சாலையில் பொருத்தப்படும் நுண்ணிய கருவி, அதை கடந்து செல்லும் வாகனங்களையெல்லாம் ஸ்கேன் செய்வதாக காட்டுவது… போன்ற ‘தொழில்நுட்ப புனைவு’கள் மிகைப்படுத்தப்பட்ட கற்பனை தான் என்றாலும், நம்பும்படியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
எஸ்.எஸ்.தமன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். எனினும், பின்னணி இசை கதையோட்டத்துக்கு வலு சேர்க்கும் வண்ணம் ரசிக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது.
‘இவன் தந்திரன்’ – பெருமைக்குரியவன்! அவசியமானவன்!!