இறுதி பக்கம் – விமர்சனம்
நடிப்பு: அம்ருதா ஸ்ரீநிவாசன், ராஜேஷ், விக்னேஷ் சண்முகம், மிதுன்
இயக்கம்: மனோ வெ.கண்ணதாசன்
ஒளிப்பதிவு: பிரவின் பாலு
இசை: ஜோன்ஸ் ரூபர்டு
நாயகி அம்ருதா ஸ்ரீநிவாசன் வீட்டில் தனியாக இருக்கும் போது, மர்ம நபர் ஒருவர், கொலை செய்து விடுகிறார். இதை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலசந்திரன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். பல கட்ட விசாரணையில் கொலை செய்த நபரை கைது செய்கிறார். அதன்பின் கொலை செய்ய சொன்னது வேறொரு மர்ம நபர் என்று தெரிந்தவுடன் அவரை தேடி அலைகிறார். இறுதியில் அம்ருதாவை கொலை செய்தவரை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்டுபிடித்தாரா? எதற்காக கொலை செய்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அம்ருதா ஸ்ரீநிவாசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இயல் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். காமமா… காதலா… என்று பரிதவிக்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
காதலனாக வரும் விக்னேஷ் சண்முகம், காதலிக்கும்போதும், காதலை வெறுக்கும்போதும், நடிப்பில் வித்தியாசம் காண்பித்து கவர்ந்திருக்கிறார். மற்றொரு நாயகனாக வரும் மிதுன் கொடுத்த வேலையை சிறப்பாகவே நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் ராஜேஷின் நடிப்பு படத்திற்கு பலம்.
கொலை, கொலையின் பின்னணி, காதல், காமம், புத்தகம் என வித்தியாசமான திரைக்கதை மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இயக்குனர் மனோ வெ.கண்ணாதாசன். ஆரம்பத்திலேயே கதைக்குள் அழைத்து செல்லும் திரைக்கதை, இறுதி வரை விடாமல் பார்ப்பவர்களை கட்டி வைத்திருப்பது சிறப்பு. காட்சியமைப்பில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார் இயக்குனர் மனோ செ.கண்ணதாசன். காதலையும், காமத்தையும் அதிகம் மிகைப்படுத்தாமல் சொல்லியிருப்பது அருமை. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
பிரவின் பாலுவின் ஒளிப்பதிவும், ஜோன்ஸ் ரூபர்டின் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
‘இறுதி பக்கம்’ – படுசுவாரஸ்யம்.