கொடைக்கானல்: காதலரை மணந்தார் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா!
இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா கொடைகானலில் இன்று (ஆகஸ்ட் 17) பதிவுத் திருமணம் செய்து கொண்டார். அயர்லாந்தைச் சேர்ந்த தனது நீண்ட நாள் காதலரான தேஸ் மாண்ட் ஹட்டின்ஹோவை இரோம் ஷர்மிளா திருமணம் செய்து கொண்டார்.
சமூக உரிமைப் போராளி இரோம் ஷர்மிளா, மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த அவர். சில மாதங்களாக கொடைக்கானலில் தங்கியுள்ளார். அயர்லாந்து நாட்டை சேர்ந்த அவரது காதலர் தேஸ் மாண்ட் ஹட்டின்ஹோவும் உடன் தங்கியுள்ளார்.
“கொடைக்கானல் எனக்கு மிகுந்த மன அமைதியைத் தருகிறது. இங்கேயே திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன்” என்று ஷர்மிளா தெரிவித்திருந்தார்.
கடந்த (ஜூலை) மாதமே ஷர்மிளாவின் திருமணம் நடைபெற இருந்தது, எனினும் பதிவுத் திருமணம் செய்துகொள்ள சட்டப்படி சில விதிகள் உள்ளதாகவும் அதன்படி 30 நாட்கள் கழித்து ஷர்மிளாவின் பதிவுத்திருமணம் அனுமதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட து.
இந்த நிலையில் ஷர்மிளாவின் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. ஷர்மிளாவின் திருமணத்தில் ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குனர் திவ்ய பாரதியும் உடனிருந்தார்.
மணிப்பூரில் ராணுவத்தினரின் அடக்குமுறையை எதிர்த்து, இனி புதிய வழியில் போராடப் போவதாக ஷர்மிளா தெரிவித்துள்ளார்.