இறைவி – விமர்சனம்
“இந்த திரைப்படத்தை விமர்சிக்கும்போது, படத்தின் கதையை வெளியிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் இக்கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.”
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஊடகவியலாளர்களிடம் மிகுந்த நம்பிக்கையுடன் இப்படியொரு கோரிக்கையை வைத்தபின், அதை புறந்தள்ள முடியுமா? என்றாலும், கதையை தெரிந்துகொள்ள துடியாய் துடிக்கும் வாசகர்கள் ஏமாற்றத்தை தவிர்க்க ஒரு சின்ன க்ளூ:- பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ஜன்னல் மலர்’ என்ற கதை தான் இப்படத்தின் மூலக்கதை.
பெண்கள் சரிநிகர் சமானமாய் வாழ வேண்டும் என்றால், “ஆண்மை அழிய வேண்டும்” என்றார் பெரியார் ஈவேரா. ஆண் குறியின் விறைப்புதான் ஆண்மை என்ற அரைவேக்காட்டுப் புரிதலுடன் இருந்த பெரியாரின் எதிரிகள், “ஆண் குறிகளை அறுத்தெறிந்துவிட்டால் பெண்கள் நல்வாழ்வு வாழ்ந்து விடுவார்களா?” என்று ஏளனம் செய்தார்கள். “ஆண்மை” என்று பெரியார் சொன்னது ஆண் குறியை அல்ல. “ஆண்” என்ற அகந்தையை; “நான் ஆம்பள” என்ற திமிரை; “இப்படியிப்படி எல்லாம் இருந்தால்தான் நான் ஆண்” என்ற ஆணவப் பெருமிதத்தை! ‘இறைவி’ படம் சொல்லும் சேதியும் இதுதான்.
அழித்தொழிக்கப்பட வேண்டிய இந்த “ஆண்மை”யின் கொடுங்கோன்மையையும், அதன் அட்டகாசத்துக்குள் சிக்கி சின்னாபின்னமாகும் பெண்களின் பரிதாபகரமான வாழ்க்கையையும், நம் நெஞ்சம் பதறி படபடக்கும் வகையில், மிகுந்த விசனத்துடன், மிகுந்த பொறுப்புணர்வுடன் சித்தரிக்கிறது ‘இறைவி’.
இது முழுக்க முழுக்க இயக்குனரின் படம். இதை தெளிவாக உள்வாங்கியிருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இது எந்த ஜானர் படம் என்றெல்லாம் சிந்திக்காமல், இதில் எந்தெந்த மசாலா அம்சங்களை எங்கெங்கே சேர்க்க வேண்டும் என்றெல்லாம் குழப்பிக்கொள்ளாமல், இது யாருக்கு பிடிக்கும், யாருக்குப் பிடிக்காது என்றெல்லாம் தட்டுத் தடுமாறாமல், தான் சொல்ல நினைத்ததை, பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் கச்சிதமாக, ஆனால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரொம்ப நிதானமாக சொல்லிச் செல்வதில் நூறு சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறார். தமிழ் சினிமாவின் ‘புதிய அலை’ இயக்குனர் என்ற கவுரவத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். ‘அவள் அப்படித்தான்’ இயக்குனர் ருத்ரய்யாவின் அடுத்த கட்ட பரிணாமமாய் விசுவரூபம் எடுத்திருக்கிறார்.
பரம்பரைத் தொழிலான சிற்பம் செதுக்கும் தொழிலைச் செய்யும் தாஸாக ராதாரவி, கோமாவில் கிடக்கும் அவரது மனைவி மீனாட்சியாக வடிவுக்கரசி…
தாஸ் – மீனாட்சி தம்பதியரின் மூத்தமகன், திரைப்பட இயக்குனர், குடியடிமை அருளாக வரும் எஸ்.ஜே.சூர்யா, இக்குடியடிமையிடம் அல்லல்படும் மனைவி யாழினியாக வரும் கமாலினி முகர்ஜி…
எஸ்.ஜே.சூர்யாவின் தம்பி, மாணவன், பணத்தேவைக்கு இறைவி (அம்மன்) சிலைகளை கடத்துபவன் என்ற ஜெகன் கதாபாத்திரத்தில் வரும் பாபி சிம்ஹா…
எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா ஆகியோரின் உடன்பிறவா சகோதரன் மைக்கேலாக வரும் விஜய் சேதுபதி, தன் காதல் கணவன் காலமாகிவிட்டதால், அவனை நேசித்துக்கொண்டே தன் செக்ஸ் தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்காக விஜய் சேதுபதியை செக்ஸ் பார்ட்னராக வைத்துக்கொள்ளும் மலராக வரும் பூஜா தேவரியா, தல – தளபதியை கலந்து செய்த ஒருவன் கணவனாக வருவான் என்ற எதிர்பார்ப்புடன் இருந்து, விஜய் சேதுபதியை கரம் பிடித்து, கணவன் அடிக்கடி சிறை செல்ல நேர்வதால் செய்வதறியாது துயருறும் பொன்னியாக வரும் அஞ்சலி…
என அனைவரும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, தங்கள் கதாபாத்திரங்களாகவே பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்துவிடுகிறார்கள். பார்வையாளர்களுக்கு எஸ்.ஜே.சூர்யா தனது நடிப்பாற்றல் மூலம் மிகப் பெரிய சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
சந்தோஷ் நாராயணனின் இசையும், சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவும், விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பும் இயக்குனருக்கு பக்கபலமாய் அமைந்து, இப்படத்துக்கு சிறப்பு சேர்த்திருக்கின்றன.
அத்தி பூத்தாற்போல… குறிஞ்சி மலர்ந்தது போல… என்றெல்லாம் சொல்வார்களே… அதுபோல, ‘இறைவி’யின் வருகை மூலம் தமிழ் சினிமாவில் அதிசயமாய் அத்தி பூத்திருக்கிறது. குறிஞ்சி மலர்ந்திருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
‘இறைவி’ – பெண்கள தங்கள் வாழ்க்கையை தாங்களே பார்த்துக் கொள்வதற்கான நிலைக்கண்ணாடி! ஆண்கள் தங்களது அசிங்கமான அகந்தையை தாங்களே பார்த்து அலறுவதற்கான பூதக்கண்ணாடி!