“ஓட்டுக்காக எங்களுக்குள் பகைமையை உண்டாக்காதீர்கள் என்பதை ’இறைவன் மிகப் பெரியவன்’ படம் அழுத்தமாக சொல்லும்!” – அமீர்
ஒன்பது ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் அமீர் இயக்கும் புதிய திரைப்படம் “இறைவன் மிகப்பெரியவன்”. இப்படத்தின் கதையை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். JSM Pictures சார்பில் ஜாஃபர் இப்படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, சென்னை வடபழனி கமலா திரையரங்கில், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் பேசியோர் பேச்சு விவரம்:-
இயக்குநர் அமீர்:
இது என்னுடைய விழா. பொதுவா ஒரு படத்துக்கு வெறும் ஸ்கிரிப்டை வைத்து பூஜை போடுவோம். இந்த விழா அப்படியில்லை. இது ஒரு படத்தின் அறிமுக விழா.
ஒரு புதிய தயாரிப்பாளர், இந்த காலத்தில் படம் செய்வதே கடினம் அதிலும் என்னை மாதிரி இயக்குநரை வைத்து படமெடுப்பது இன்னும் கடினம். அவருக்காக தான், அவரை அறிமுகப்படுத்தும் நோக்கம் தான் இந்தவிழா.
பாரதிராஜா சார் படம் செய்யும்போதே நிறைய கதைகளை வெளியில் வாங்கி செய்வார். ஆனால் எல்லோரும் அவர் கதை என நினைப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேறொருவரின் கதையை செய்தால் கொஞ்சம் சினிமாவில் ஒரு மாதிரியாக பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அதை மாற்றலாம் என நானே துவங்கியது தான் இது.
நானும் வெற்றியும் சேர்ந்து தினமும் ஒரு புராஜக்ட் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். நான் வேறு படங்கள் செய்யும் நிலையிலிருந்தபோது, இந்தப்படத்தை, இந்தகதையை செய்யலாம் என தோன்றியது. நான் வெற்றியிடம் ’இறைவன் மிகப் பெரியவன்’ செய்யலாமா என கேட்டேன். கண்டிப்பாக செய்யலாம் என்றார்.
இப்படத்தை பொறுத்தவரை கரு பழனியப்பன் நடிக்கிறார். இப்போதைக்கு இது மட்டும் தான் முடிவாகியுள்ளது. எனக்கு இப்படி சுதந்திரமாக வேலை செய்வது தான் பிடிக்கும்.
வெற்றி முதலில் சொன்னபோதே இதை நாம் செய்திருக்கலாமே என்று தோன்றியது. இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் மதத்தை தீவிரவாத மதமாக கட்டமைக்கும் பழக்கம் இருக்கிறது. இன்றைக்கு புதிதாக வருபவர்கள் தங்கள் சாதி அடையாளங்களை தான் முன்னிறுத்துகிறார்கள், இன்றைய காலகட்டத்தில் இது மோசமான விசயமாக இருக்கிறது. அதற்காக இதை செய்ய வேண்டும் என தோன்றியது.
இந்தப்படம் எங்களுக்குள் இருக்கும் அழகான உறவை தான் சொல்ல வருகிறது. நீங்கள் பார்க்காத புதிய விசயம் எதையும் சொல்லப் போவதில்லை. நீங்கள் பார்த்த விசயங்களை, நினைவுகளை தான் இந்தப்படம் சொல்லும்.
ஓட்டுக்காக எங்களுக்குள் பகைமையை உண்டாக்காதீர்கள் என்பதை இந்தப்படம் அழுத்தமாக சொல்லும். நன்றி.
தயாரிப்பாளர் ஜாஃபர்:
நான் மேடைக்குப் புதிதானவன். இந்த திரைப்பட பயணம் சிறப்பாக அமையும் என நம்பிக்கை உள்ளது. உங்கள் ஆதரவு தேவை. எல்லோருக்கும் நன்றி.
கதாசிரியர் தங்கம்:
பிரமிள் எழுதிய மெய் இயற் கவிதையின் மானுடம் சார்ந்த பார்வைதான் இந்த ’இறைவன் மிகப்பெரியவன்’ படம். இந்த பார்வை முதலில் வெற்றிமாறன் இடத்திலிருந்து ஆரம்பித்தது. மானுடம் சார்ந்த பிரமிளின் பார்வையை தான் அமீர் திரையில் கொண்டுவரவுள்ளார். உலகம் சார்ந்த பார்வை வெற்றிமாறன் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் வந்து சேர்ந்தபோதே இருந்தது. அவருக்கு இயல்பிலேயே சாதி, மதத்தின் மீது பற்று கிடையாது. தன்னியல்பாகவே அவரிடம் மானுடம் இருந்தது. கலைஞனாக இருக்கும் அத்தனை பேருக்கும் இன்றைய தேவையாக இது இருக்கிறது. அந்த தேவையை, மானுடப்பார்வையை இந்தப்படம் சொல்லும்.
இந்தப்படத்தை முதலில் வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தது. ஆனால் கோவிட் வந்ததால் நின்றுவிட்டது. பின்னர் இதனை எடுக்கலாமா என ஆரம்பித்தபோது இந்தப்படத்தை அமீர் எடுத்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தோம். இப்போது இந்தப்படம் நடப்பது மகிழ்ச்சி.
ஒளிப்பதிவாளர் ராம்ஜி:
15 வருடங்களுக்குப் பிறகு அமீருடன் இணைந்து நான் வேலை செய்யும் படமிது. இந்தபடத்தில் வெற்றிமாறன், தங்கம் கதை எழுதுவது படத்திற்கு பலம். படம் நன்றாக வருமென நம்புகிறேன். நன்றி.
இயக்குநர் கரு பழனியப்பன்:
பிரமிள் எழுதிய ஒரு வரி இந்தக்கதைக்குப் போதுமானதாக இருந்துள்ளது. எழுத்தாளர்கள் கொண்டாடும் எழுத்தாளராக பிரமிள் இருந்தார். ’சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராப் பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதி செல்கிறது’ எனும் பிரமிளின் வரி மட்டும் தான் நமக்கு புரியும். மற்ற கவிதை புரியாது.
இந்தப்படத்தை எடுப்பதாக சொன்னபோது, அமீர் தான் இதற்கு பொருத்தமானவர் என தோன்றியது. நான் ஒரு பக்கம் ’ஆண்டவர்’ என படமெடுக்கிறேன். நீங்கள் ’இறைவன் மிகப்பெரியவன்’ என எடுக்கிறீர்கள். இரண்டுக்கும் யுவன் சங்கர் ராஜா இசை என்றால் எல்லோரும் நம்மை தான் பேசுவார்கள் என்றேன். இருக்கட்டும் என்றார்.
இறைவன் பொதுவானவனா என தெரியாது ஆனால் மனிதன் அனைவருக்கும் பொதுவானவன் என்பதை ஒரு கலைஞன் சொல்ல வேண்டிய காலம் இது, அதை இந்தப்படம் செய்யும்.
இந்த டைட்டிலேயே ஏன் அமீரின் இறைவன் மிகப்பெரியவன் என்று சொல்கிறீர்கள் என பிரச்சனை செய்வார்கள். இந்தக்காலத்தில் எதையுமே தவறாக புரிந்துகொள்ளும் பழக்கம் தான் அதிகம் இருக்கிறது. வெற்றிமாறனை விட இப்படத்தை அமீர் செய்வது தான் சரி.
எங்களை போல் மியூசிக் தெரியாவர்கள் படத்தில் யுவன் அழகான இசை தர காரணம் நம்பிக்கையும் புரிதலும் தான்.
படமெடுக்க முடிவெடுத்துவிட்டால் இயக்குநரை நம்ப வேண்டும். அமீரை நம்புங்கள், படம் கண்டிப்பாக நன்றாக வரும். எந்த ஒரு வேலையை செய்தாலும் நேர்மையாக ஒழுங்காக தனித்தன்மையுடன் வேலை செய்ய வேண்டுமென நினைப்பவர் அமீர்.
இந்த விழா போலவே அமீர் உற்சாகமுடன் இயக்கும், ’இறைவன் மிகப் பெரியவன்’ படம் வெற்றி பெறும். ரசிகர்களுக்கும் உற்சாகம் தரும். நன்றி.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா:
இந்தப்படத்தின் கதை எனக்குத் தெரியாது. நேற்று தான் அமீர் வந்து சொன்னார். நாளைக்கு வந்து விடுங்கள் என்றார், அவர் மீது முழு நம்பிக்கை இருந்தது. கரு பழனியப்பன் சொன்னது போல், அமீர் மீது நம்பிக்கை வைத்ததால் தான் இங்கு வந்தேன். அமீர் மீது எப்போதுமே எனக்கு நம்பிக்கை உள்ளது, இந்தப்படம் நன்றாக வரும். அனைவருக்கும் நன்றி
இயக்குநர் வெற்றிமாறன்:
ரொம்ப நாள் முன்னாடி தங்கம் இந்த கதையை சொன்னார். அதற்கப்புறம் ரெண்டு பேரும் வெவ்வேறு வேலைகள் செய்ய ஆரம்பித்து விட்டோம். அப்புறம் ஒரு சமயத்தில் இந்தக்கதை எடுக்கலாம் என தோன்றியது.
வழக்கமாக நான் எழுதவே மாட்டேன். ஆனால் இந்தப்படத்திற்கு திரைக்கதை எழுதி முடித்துவிட்டேன். ஆனால் அப்போது செய்ய முடியவில்லை. கதை எழுதும்போதே அமீரிடம் விவாதிப்பேன். கதையில் நான் சில மாற்றங்களை இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றினேன். நான் எடுக்கவில்லை என்ற நிலை வந்தபோது அமீர் ’நான் எடுக்கவா’ என்றார். அவர் எடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவர் திரைக்கதையில் சில மாற்றங்களை அவர் வாழ்வியலில் இருந்து எடுத்து வந்துள்ளார்.
இன்றைய காலகட்ட பிரச்சனையை, சரியான விசயங்களை, சொல்ல வேண்டும் என்பது தான் நாங்கள் இணைந்து வேலை செய்ய காரணம். நன்றி.