இந்த கிரைம் தப்பில்ல – விமர்சனம்

நடிப்பு: ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், முத்துக்காளை, வெங்கல் ராவ், கிரேசி கோபால், காயத்ரி மற்றும்பலர்

இயக்கம்: தேவகுமார்

ஒளிப்பதிவு: ஏஎம்எம்.கார்த்திகேயன்

படத்தொகுப்பு: ராஜேஷ் கண்ணன், அஜித்குமார்

இசை: பரிமளவாசன்

தயாரிப்பு: ‘மதுரியா புரொடக்‌ஷன்ஸ்’ மனோஜ் கிருஷ்ணசாமி

பத்திரிகை தொடர்பு: சதீஷ் – சிவா (டீம் எய்ம்)

கிராமத்துப் பெண்ணான நாயகி மேக்னா ஏலன், நகரத்துக்கு வந்து, நவநாகரிக மார்டன் பெண்ணாக மாறி, இங்குள்ள செல்போன் கடை ஒன்றில் வேலை பார்க்கிறார். அந்த கடைக்கு வரும் மூன்று வாலிபர்களோடு வேறு வேறு பெயர்களைச் சொல்லி தனித்தனியாக அறிமுகமாகிக்கொண்டு, அவர்களைக் காதலிப்பது போல் நடிக்கிறார். அவரது நடிப்பை உண்மையென நம்பும் வாலிபர்கள் காதலுடன் அவரை சுற்றிச் சுற்றி வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, ஆடுகளம் நரேன் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், மாமேதை அம்பேத்கார் போன்றோர் மீது அபிமானம் கொண்டவர். அவர் மிக மிக ரகசியமாக தாக்குதல் ஒன்றுக்கு திட்டம் தீட்டுகிறார். இந்த திட்டத்தை, அநீதி கண்டு பொங்கும் கோபக்கார இளைஞரான நாயகன் பாண்டி கமலை வைத்து நிறைவேற்ற முடிவு செய்கிறார்.

மேக்னா ஏலன் எதற்காக மூன்று வாலிபர்களைக் காதலிப்பது போல் நடித்து, அவர்களைத் தன் பின்னால் சுற்ற வைக்கிறார்? ஆடுகளம் நரேன் யார் மீது தாக்குதல் நடத்த ரகசியமாக திட்டம் தீட்டுகிறார்? மேற்கண்ட இரண்டு டிராக்குகளும் எப்போது, எப்படி ஒரே டிராக்காக இணைகின்றன? விளைவு என்ன? என்பதே ‘இந்த கிரைம் தப்பில்ல’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நம் காலத்தில், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் கொடூர நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இக்கொடுமைகளைச் செய்யும் காமுகர்களை, தனி நபர்கள் சட்டத்துக்குப் புறம்பாக நேரடியாக கடுமையாக தண்டித்தால், அது கிரைம் என்றாலும் கூட தப்பில்லை என்றொரு நிலைப்பாடு எடுத்து, கதை எழுதி, திரைக்கதை அமைத்து, இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் தேவகுமார். அவரது நிலைப்பாடு சர்ச்சைக்கு உரியது; என்றபோதிலும், சமகால பிரச்சனையை திரைக்கு கொண்டு வந்ததற்காக இயக்குனரை பாராட்டலாம்.

நாயகி மேக்னா எலன் அழகாக இருக்கிறார். கிராமத்து உடையில் மட்டுமல்ல, மாடர்ன் உடையிலும் கவர்கிறார். தனது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகன் பாண்டி கமல், அநீதி கண்டு பொங்கும் கோபக்கார இளைஞர் என்ற கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக படம் முழுக்க அறச்சீற்றத்துடன் வருகிறார்.

ஆடுகளம் நரேன் வழக்கம் போல் தனது அனுபவ நடிப்பை, குறை சொல்ல முடியாதபடி நிறைவாக வழங்கியிருக்கிறார்.

முத்துக்காளை, வெங்கல் ராவ், கிரேசி கோபால், காயத்ரி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

பரிமளவாசனின் பாடலிசை ஓ.கே ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.

ஏ.எம்.எம்.கார்த்திகேயனின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.

‘இந்த கிரைம் தப்பில்ல’ – ஒருமுறை பார்க்கலாம்!