இந்தியன் 2 – விமர்சனம்

நடிப்பு: கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷி காந்த், நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, குல்ஷன் குரோவர், மனோபாலா, ரேணுகா, தம்பி ராமையா, சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர்

இயக்கம்: ஷங்கர்

ஒளிப்பதிவு: ரவி வர்மன்

படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத்

இசை: அனிருத்

தயாரிப்பு: ‘லைக்கா புரொடக்‌ஷன்ஸ்’ சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)

தமிழ்த் திரையுலக வரலாற்றில், 1996ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ திரைப்படத்துக்கு தனித்துவமான தனியிடம் உண்டு. அதன் சமூகப் பொறுப்பு மிக்க உள்ளடக்கமும், பிரமாண்டங்கள் நிறைந்த உருவமும் ஒன்றை ஒன்று மெருகேற்றி, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி திக்குமுக்காடச் செய்தன. அன்று 42 வயது கமல்ஹாசன் 70 வயது நாயகனாக, ‘இந்தியன் தாத்தா’ என்ற சேனாபதியாக உருமாறி திரையில் செய்த மாயாஜாலங்கள், அவரை அப்படி உருமாற்றிய – தமிழுக்குப் புதிதான – அதிநவீன ’ப்ராஸ்தெட்டிக்’ மேக்கப், காட்சிகளையும் வசனங்களையும் புதுசாகக் கொடுத்து தெறிக்கவிட்ட எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்து வல்லமை, காட்சிக்குக் காட்சி தொழில்நுட்ப ரீதியில் பிரமாண்டம் கொடுத்து மூச்சடைக்கச் செய்த இயக்குநர் ஷங்கரின் மேக்கிங், எப்போது கேட்டாலும் சிலிர்ப்பூட்டும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என படத்தின் ஒவ்வொரு அம்சமும் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது; கொண்டாடித் தீர்க்கும் காவியத் தகுதி பெற்றது; இமாலய வெற்றி அடைந்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகமாக, 28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ‘இந்தியன் 2’ திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த இரண்டாம் பாகம், முதல் பாகத்தின் சிறப்பான காவியத் தகுதியைத் தக்க வைக்கிறதா? பார்ப்போம்…

நேர்மைக்கும், வீரத்துக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தவர் ’இந்தியன் தாத்தா’ என்ற சேனாபதி (கமல்ஹாசன்). இந்தியா ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்தபோது, சுதந்திரப்போர் புரிய, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆரம்பித்த இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ) சிப்பாயாகச் சேர்ந்து சமர் புரிந்தவர். நாடு விடுதலை பெற்ற பிறகு ஊழல் பெருகுவது கண்டு சகிக்க முடியாமல், தான் கற்ற வர்மக்கலையைப் பயன்படுத்தி ஊழல்வாதிகளை தீர்த்துக் கட்டியவர். ஊழல் செய்வது அல்லது ஊழலுக்குத் துணை போவது தன் சொந்த மகனாக இருந்தாலும், அவனுக்கு எந்த சலுகையும் தராமல், அவனையும் தீர்த்துக்கட்டிவிட்டு, காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, “திருந்துங்கடா; இல்லேனா திரும்பி வருவேன்” என்று எச்சரித்துவிட்டு, வெளிநாடு தப்பிச் சென்றுவிடுகிறார் ‘இந்தியன் தாத்தா’ என்ற சேனாபதி. இது தான் 1996-ல் வெளியான ‘இந்தியன் 1’-ன் கதைச் சுருக்கம்.

அப்போது சில லட்சங்களாக இருந்த லஞ்சமும், ஊழலும் இப்போது – ‘இந்தியன் 2’ படம் துவங்கும்போது – கோடிக்கணக்கில் பல்கிப் பெருகி, அங்கிங்கெனாதபடி எங்கும் தாண்டவமாடுகிறது. இந்த இழிநிலையைப் போக்க உறுதி ஏற்கும் இளைஞர்களான சித்ரா அரவிந்தன் (சித்தார்த்), தம்பேஷ் (ஜெகன்), ஆர்த்தி (பிரியா பவானி சங்கர்), ஹரீஷ் (ரிஷிகாந்த்) ஆகிய நண்பர்கள், ஊழல்வாதிகளை ரகசியமாக வீடியோ எடுத்து, தங்களது ’Barking dogs’ என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து, ஊழல்வாதிகளை அம்பலப்படுத்தி, அவர்களுக்கு தண்டனை வாங்கித் தர முயற்சிக்கிறார்கள். ஆனால், இது எதிர்பார்த்த பலனைத் தராததால், ‘இந்தியன் தாத்தா’ என்ற சேனாபதி இங்கு திரும்பி வந்தால் தான் விமோசனம் பிறக்கும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இதற்காக சமூக வலைத்தளங்களில் ‘கம் பேக் இந்தியன்’ என்று ஹேஷ்டேக் போட்டு, ’இந்தியன் தாத்தா’வை அழைக்கிறார்கள்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பயணித்த விமானம் விபத்துக்குள்ளான தைவான் நாட்டில், அவரது ஆதரவாளரான ‘இந்தியன் தாத்தா’ என்ற சேனாபதி ‘வர்மக்கலை பயிற்சிப்பள்ளி’ ஒன்றை நடத்தி வருகிறார். அவர் சித்ரா அரவிந்தன் அண்ட் ஃபிரண்ட்ஸ் சமூக வலைத்தளங்களில் ‘கம் பேக் இந்தியன்’ என்று தனக்கு அழைப்பு விடுப்பதைப் பார்க்கிறார். இந்தியாவில் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து, நண்பர் ஒருவரின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து, மாறுவேடத்தில் சென்னை விமான நிலையம் வந்து சேருகிறார். தேடப்படும் குற்றவாளியான அவர் வரும் தகவல் அறிந்து, அவரைப் பிடித்து சிறையில் அடைக்க தயாராக இருக்கிறார் சிபிஐ அதிகாரி (பாபி சிம்ஹா).

சிபிஐ விரித்த வலையில் ’இந்தியன் தாத்தா’ சிக்கினாரா? அல்லது தப்பித்துப்போய் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் தொடங்கினாரா? விளைவு என்ன? என்பதைச் சொல்லுகிறது ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, ’இந்தியன் தாத்தா’ என்ற சேனாபதியாக கமல்ஹாசன் நடித்திருக்கிறார். உண்மையில் முதியவரான அவருக்கு, மேலும் வயோதிகத்தைக் கூட்டிக் காட்டக்கூடிய சிரமமான மேக்கப் போட்டபோதிலும், அதை காட்டிக்கொள்ளாமல் இளமை பொங்க, சுறுசுறுப்பாக திரையை ஆக்கிரமித்திருக்கிறார். அவரது கச்சிதமான உச்சரிப்பும், உடல்மொழியும், ஊழலுக்கு எதிராக பேசும் வசனங்களும் பார்வையாளர்களை கைதட்ட வைப்பதோடு, ரசிகர்களை விசிலடிக்கவும் வைக்கின்றன. கமல்ஹாசன் போட்டுள்ள அதிகபட்ச உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. பாராட்டுகள்.

’Barking dogs’ என்ற யூடியூப் சேனல் நடத்தும் சித்ரா அரவிந்தனாக சித்தார்த், தம்பேஷாக ஜெகன், ஆர்த்தியாக பிரியா பவானி சங்கர், ஹரீஷாக ரிஷிகாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஊழலுக்கு எதிராக கொதிப்பது, ‘கம் பேக் இந்தியன்’ என முதலில் அழைப்பது, பின்னர் ‘கோ பேக் இந்தியன்’ என விரட்டுவது என தங்கள் கதாபாத்திரங்களை நன்கு உணர்ந்து நிறைவாக செய்து உயிரூட்டியிருக்கிறார்கள்.

ஷங்கரின் ‘அன்னியன்’ படத்தில் சிபிஐ அதிகாரிகளாக வரும் பிரகாஷ்ராஜ் – விவேக் கூட்டணி போல, இதில் பாபி சிம்ஹா – விவேக் கூட்டணி வருகிறது என்பதாலோ, என்னவோ, இவர்கள் வரும் காட்சிகளில் எல்லாம் சலிப்பு தான் ஏற்படுகிறது.

தங்கநகை ஸ்டாண்டு போல உடல் முழுக்க ஆபரணங்களை அணிந்துகொண்டு கோமாளித்தனமாக வரும் எஸ்.ஜே.சூர்யா குறைவான காட்சிகளே வந்தாலும், ‘இந்தியன் 3’-ல் பிரமாதப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

நெடுமுடி வேணு, சமுத்திரகனி, குல்ஷன் குரோவர், மனோபாலா, ரேணுகா, தம்பி ராமையா, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை குறைவின்றி செய்திருக்கிறார்கள்.

படத்தின் நாயகி என்று கூறப்பட்ட ரகுல் ப்ரீத் சிங் தான் பாவம்; அவரது பாத்திரம் வலிமையாக எழுதப்படாததால், படத்தில் இவர் எதற்கு என முகம் சுழிக்க வைத்துவிடுகிறார்.

‘இந்தியன் 1’ படத்தை இயக்கி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்திய ஷங்கர் இந்த ‘இந்தியன் 2’ படத்தை இயக்கியிருக்கிறார். இதிலும் ‘இயக்குநர் ஷங்கரின் டச்’ என்று குறிப்பிட்டுச் சொல்லத் தக்க விஷயங்கள் நிறையவே இருக்கின்றன…

’ஊழல்வாதிகளை நாட்டில் தட்டிக் கேட்பதற்கு முன்பு வீட்டில் தட்டிக் கேட்க வேண்டும்’ என்ற கருத்தை ‘இந்தியன் 2’ படத்தின் கதைக்கருவாக ஷங்கர் கையில் எடுத்திருப்பது சிறப்பு. அப்படி வீட்டில் களை எடுக்க இளைஞர்கள் முன்வந்தால் அதன் விளைவுகளும், பாதிப்புகளும் எப்படி இருக்கும் என்பதையும் யதார்த்தம் கெடாமல் சொல்லியிருப்பது அருமை.

கார்ட்டூன் உருவ ‘காமன் மேன்’ ஐடியா, ஜீரோ க்ரேவிட்டி இடத்தில் மிதந்தபடி கொலை செய்யும் ஐடியா – யாருமே யோசிக்காத புதுமைகள்!

முதல் தேசியக்கொடி பின்னணியில் இருப்பதைப் பார்த்து “இந்தியன் தாத்தா மியூசியத்திலிருந்து தான் பேசுகிறார்” என்பதை கண்டுபிடிப்பது, பிராஸ்தெட்டிக் மேக்கப் காரணமாக அடைபட்ட வியர்வை ஓரிடத்தில் தேங்கி வீக்கமாகக் காட்டிவிடும் என்ற தகவல் போன்றவை இயக்குநர் ஷங்கரின் புத்திசாலித்தனத்துக்கு சில சான்றுகள்.

ஒவ்வொரு படத்திலும் யாரும் காட்டாத லொக்கேஷனில் பாடல் காட்சியை எடுத்து தன் ரசிகர்களை பிரமிக்க வைப்பது ஷங்கரின் வழக்கம். அந்த வழக்கப்படி, காலண்டர் பாடல் லொக்கேஷன் புதிதாகவும், கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கிறது… அருமை.

நிறைகளைப் போலவே இந்த படத்தில் குறைகளும் நிறைய இருக்கின்றன. நேர்மை பற்றி வாய்கிழியப் பேசும் இந்தியன் தாத்தா, தைவானிலிருந்து வேறொருவரின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி, ஆள்மாறாட்டம் செய்து, மாறுவேடத்தில் முறைகேடாக இந்தியா வருகிறார் என்பதிலிருந்து, குற்றங்களைத் துளியளவும் சகிக்க முடியாத – ’ஸீரோ டாலரன்ஸ்’ பேர்வழியான அவர், கிளைமாக்ஸில் தான் கைது செய்யப்படாமலும், தண்டிக்கப்படாமலும் இருக்க, மாஜிஸ்ட்ரேட் முன் முறைகேடாக பேரம் பேசி சாதித்துக் கொள்கிறார் என்பது வரை எக்கச்சக்கமான குறைகள்; ஏகப்பட்ட அபத்தங்கள். அவற்றை பட்டியலிட்டால் பல பக்கங்களைத் தாண்டும். கிரியேட்டிவிட்டி உள்ள நல்ல எழுத்தாளர்கள் சகிதம் ஷங்கர் ஸ்கிரிப்டில் அதிக கவனம்  செலுத்தி, கூடுதலாக மெனக்கெட்டிருந்தால் இந்த குறைகளுக்கும், அபத்தங்களுக்கும் இடம் இல்லாமல் போயிருக்கும்.

பலவீனமான ஸ்கிரிப்ட் போலவே, சொதப்பலான எடிட்டிங். படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், காட்சிகளின் நீளத்தையும், நேரத்தையும் குறைத்து விறுவிறுப்பை கூட்டத் தவறியதால், ‘எப்படா படம் முடியும்’ என்று அலுப்புடன் முணுமுணுக்க நேரிடுகிறது.

அனிருத் இசையில் பாடல்கள் ஓ.கே.ரகம். பின்னணி இசை ’வழவழ கொழகொழா’ என திரைக்கதைகேற்ப பயணிக்கிறது. ஆங்காங்கே ஏ.ஆர்.ரஹ்மானின் ‘இந்தியன் 1’ பின்னணி இசை பயன்படுத்தப்பட்டிருப்பது பெரிய ஆறுதல்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும், கலை இயக்குநர் முத்துராஜும், சண்டைப் பயிற்சியாளர்களும் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

‘இந்தியன் 2’ – பெரிய எதிர்பார்ப்பு காரணமாக அதிக ஏமாற்றத்தைக் கொடுத்திருப்பது உண்மை. எனினும், படத்தின் முடிவில் வரும் ‘இந்தியன் 3’ முன்னோட்டம் மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.

ஷங்கர், உங்களால் இன்னும் முடியும்…! கம் பேக் ஷங்கர்…!