இந்திய ஒன்றிய அரசின் விருதுகள் – தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், இமான், நாக விஷாலுக்கு!
2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான இந்திய ஒன்றிய அரசின் விருதுகள் இன்று (22-03-2021) புதுடெல்லியில் அறிவிக்கப்பட்டன.
’அசுரன்’ படத்தில் சிறப்பாக நடித்த தனுஷ் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்விருதை ’போஸ்லே’ இந்தி திரைப்படத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாயுடன் தனுஷ் பகிர்ந்து கொள்கிறார். தனுஷ் ஏற்கெனவே ’ஆடுகளம்’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஒன்றிய விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிறந்த தமிழ்த் திரைப்படமாகவும் ’அசுரன்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
’சூப்பர் டீலக்ஸ்” படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்த விஜய் சேதுபதி சிறந்த உறுதுணை நடிகருக்கான விருது பெறுகிறார்.
’கேடி (எ) கருப்புதுரை’ திரைப்படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்த்திபன் இயக்கத்தில் உருவான ’ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் படத்தின் ஒலியமைப்புக்காக ரசுல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலியமைப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.
அஜித் நடித்த ’விஸ்வாசம்’ படத்துக்கு இசையமைத்த டி.இமானுக்கு சிறந்த பாடலிசை அமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.