போர் மேகம் சூழ்ந்தது: எல்லை தாண்டி இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!

இன்று அதிகாலை, கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை தாண்டிச்சென்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் திடீர் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே பாகிஸ்தான் ஆதரவுடன் காஷ்மீர் தீவிரவாதிகள் முகாம்கள் அமைத்திருப்பதாக கிடைத்த தகவலை ஒட்டி, அதிகாலை 12.30 மணி தொடங்கி 4.30 மணி வரை இந்திய ராணுவம் இத்தாக்குதல் நடத்தியதாக ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் ரன்பீர் சிங் கூறியுள்ளார். மேலும், இந்த தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டிருந்த தகவல் கிடைத்திருப்பதாகவும், இந்தியா நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகளின் பல முகாம்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவ தரப்பிலும் பெருத்த சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்த நேரத்திலும் முழுமையான போர் மூளும் என்ற அபாயம் ஏற்பட்டிருப்பதால், கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டோர இந்திய கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.