“ஜெயலலிதா கண் திறந்து பார்த்தார்; பேசினார்!”
தமிழக முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 22–ந் தேதி இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கு இடையே, கடந்த மாதம் 30–ந் தேதி லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும் சென்னை வந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்டார். தொடர்ந்து, டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவும் அவருடன் வந்து இணைந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது.
டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பை நீக்கவும், சீரான சுவாசம் மேற்கொள்ளவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஊட்டச்சத்து, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் அவருக்கு வழங்கப்படுகிறது.
நீண்ட நாட்களாக அவர் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், நேற்று 18–வது நாளாக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடல் நிலையை தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றனர். அவர்களைத் தொடர்ந்து, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும் நேற்று காலை புறப்பட்டு சென்றார். அவர் இன்னும் ஒரு சில தினங்களில் மீண்டும் சென்னை வந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையை தொடருவார் என தெரிகிறது.
அதே நேரத்தில், டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி டாக்டர்களில் ஒருவரான கில்நானி நேற்று இரவு 9 மணிக்கு சென்னை வந்தார். அவர் தொடர்ந்து, ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்.
இந்த நிலையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும்,. அவர் கண் திறந்து ஒரு சில வார்த்தைகள் பேசியதாகவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.
Courtesy: dailythanthi.com