கலை கொண்டு வீசப்படும் அரசியல் வலையிலிருந்து தப்பிப்பது எப்படி?
இப்படித்தான்…
கமல்ஹாசனின் ரசிகனாக நான் இருந்தேன். கிரிக்கெட் விளையாட்டின் ரசிகனாக இருந்தேன். ரெஸ்லிங் விளையாட்டின் ரசிகனாக இருந்தேன்.
பள்ளி வயதுகளில் trump card என ஒரு விளையாட்டு உண்டு. ரெஸ்லிங் வீரர்களை வைத்து விளையாடுவோம். எனது கணக்கு நோட்டின் பின் அட்டையில் முறுக்கி நிற்கும் ஹல்க் ஹோகனின் படம் ஒட்டி வைத்திருக்கிறேன். அப்பா, அம்மா வீட்டில் இல்லையெனில் ரெஸ்லிங்தான் டிவியில் ஓடும். அதில் வரும் சண்டை உண்மை என பால்ய கால நண்பர்கள் வாதிட்டுக் கொள்வோம். கோபம் அடைந்து கொள்வோம். அடுத்த விளையாட்டில் பிடித்த வீரர் ஜெயிக்க வேண்டுமென பிரார்த்திப்பேன். வயதாக ஆக, ரெஸ்லிங் விளையாட்டு மேடையில் இருப்பது பலகை என புரிந்தது. அவர்கள் யாவரும் போலியாகவே குத்துவது போலவும் குத்துப் படுவது போலவும் விளையாடுகின்றனர் எனப் புரிந்தது. எல்லாமும் பணத்துக்கு மட்டுமே எனத் தெரிந்த பிறகு ரெஸ்லிங் விளையாட்டு பக்கம் போவதே இல்லை.
ராபின் சிங் காலத்து கிரிக்கெட் ரசிகன் நான். பாகிஸ்தானை நானும் திட்டியிருக்கிறேன். பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றால் மனமுடைந்து பட்டினி கிடந்திருக்கிறேன். அசாருதீன், ஜடேஜா, ராபின்சிங், ட்ராவிட் போன்றோர் பிடித்த வீரர்கள். தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் பிடித்த அணிகள். தெண்டுல்கரின் விளையாட்டு பெரிதாய் பிடிக்காது. ஆனால் match fixing என்கிற ஒரு குற்றச்சாட்டு அச்சமயத்தில் எழுந்தது. பலரின் பெயர்கள் அடிபட்டன. அடிப்படையில் நாம் உணர்வெழுச்சியில் பார்க்கும் விளையாட்டு தீர்மானிக்கப்பட்டு பொய்யாக விளையாடப்படுகிறது எனத் தெரிந்ததும் எல்லாம் சரிந்தது. முட்டாளாக்கி இருக்கின்றனர் என்கிற கோபத்தில் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தினேன்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்துகளால் வசீகரிக்கப்பட்டவன் நான். அவரின் எல்லா எழுத்துகளையும் படித்திருக்கிறேன். படங்கள் பார்த்திருக்கிறேன். உரைகளைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இடதுசாரிய தொடக்கத்திலிருந்து கிளம்பி, காங்கிரஸை நோக்கி நகர்ந்து, பிறகு ‘ஜய ஜய சங்கரா’ என வீழ்ந்தபோது ஏற்க முடியாமல் திணறியிருக்கிறேன். எனினும் பிடித்த ஆளுமை என்பதால் அவரின் அரசியல் நிலைப்பாட்டை ஆதரித்து விடக் கூடாது என தீர்மானித்துக் கொண்டேன். இன்றும் அவரின் எழுத்துகளை மீள்வாசிப்பது உண்டு. ஆனால் எங்கும் அவர் அரசியலை என்னுள் நுழைய விட்டதில்லை.
கமல்ஹாசனின் சினிமா மிகவும் பிடிக்கும். அவரின் நடிப்பு, இயக்கம், எடுக்கும் கதை என பல விஷயங்களில் என்னை நுழைத்துக் கொண்டேன். பேசுகிற தன்மையிலிருந்து பல விதங்களில் கமல்ஹாசனின் தாக்கத்தை நானும் என் நண்பர்களும் எங்களுக்குள் நுழைத்துக் கொண்ட காலம் ஒன்று இருந்தது. என் அப்பா கூட கமலிடம் வெளிப்படும் பார்ப்பனியத்தை விமர்சிப்பார். அவர் விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்ளாமல் கம்பெல்லாம் சுற்றியிருக்கிறேன்.
பிறகு அரசியலுக்கு வருவதாக கமல் அறிவித்தார். அவர் அரசியலுக்கான சித்தாந்தம் என்னவென எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஏற்ப ‘மய்யம்’ என்றார். அரசியல் பிரவேசம் என்றதுமே ‘எதற்கு இவருக்கு இந்த வேலை’ என்றுதான் இருந்தது.
அச்சமயத்தில் ஒரு குழுவிடம் சிக்கினேன். கமலைக் கொண்டாடி நான் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அந்த எழுத்துகளை ரசித்த சில இளைஞர்கள் வாட்சப் குழுவில் என்னை இணைத்தனர். சில நாட்கள் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. கமலின் அரசியல் சார்ந்த கருத்துகள் மெல்ல வெளிவரத் தொடங்கின. எனக்கு கமலின் அரசியலில் உவப்பில்லை என்றேன். அவ்வளவுதான். ‘இந்தப் பெரியாரிஸ்ட்டுகளே இப்படித்தான்’, ‘உங்க பிணராயி விஜயனே கமலைதான் ஆதரிக்கிறார் தெரியுமா’, ‘இத்தனை ஆண்டுகளாக திராவிட ஆட்சி என்ன செய்தது’ என பிதற்றிக் கொண்டிருந்தனர். நானும் இன்னொரு நண்பரும் வாதிட்டு வாதிட்டு ஓய்ந்து போனோம்.
கமலின் ரசிகர்கள் அறிவாளிகள் என்ற மூட நம்பிக்கை உடைந்தது. வாட்சப் குழுவிலிருந்து வெளியேறினோம். கமல் அரசியலில் வந்த பிறகு சுத்தமோ சுத்தம். விமர்சனங்களை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் கமலின் படங்களை இன்றும் நான் ரசிப்பதுண்டு. அது ஒருவகை பால்யகால நினைவை மீட்டுருவாக்கும் மன அமைவாக அமைந்துவிட்டது. எனினும் அதற்கு இணையாக அவரது அரசியல் அபத்தங்களை விமர்சிக்கும் போக்கையும் வரித்துக் கொண்டிருக்கிறேன்.
சமீபத்தில் பாருங்கள், காசி தமிழ்ச் சங்கமாம். அதற்கு முதல் நாள் இரவு கூட இணையரும் நானும் நண்பர்களுடன் விடிய விடிய இளையராஜா பாடல்களைக் கேட்டு பாடி சிலாகித்துக் கொண்டுதான் இருந்தோம். அடுத்த நாளே நிலைமை வேறானது.
எப்போதுமே இப்படித்தான்…
அரசியலும் பொருளாதாரமும் நாம் மதிக்கும் எவரையும் கொண்டு போய் நமக்கு எதிராக நிறுத்தி விடுகிறது.
கிரிக்கெட் பார்க்க மறுப்பதால், இறுக்கம் நிறைந்தவன் என சொல்வார்கள். ரெஸ்லிங் பார்க்க மறுப்பதால் விளையாட்டுத்தனம் இல்லாதவன் என்பார்கள். ஜெயகாந்தனிடம் இருக்கும் சிக்கலைப் பேசினால் திட்டுபவர்கள் இருக்கிறார்கள். கமல்ஹாசனை விமர்சிப்பதால் தி.க.காரன், கம்யூனிஸ்ட் எனக் கூறுபவர்கள் இருக்கிறார்கள். இளையாராஜாவை விமர்சிப்பதாலும் பல பட்டங்கள் கிடைக்கலாம்.
ஆனால் ஒன்று. அரசியலையும் ரசனையையும் பிரித்து வைக்கக் கற்றுக் கொண்டால், கலை கொண்டு வீசப்படும் அரசியல் வலையிலிருந்து தப்பித்து விடலாம்.
அவர்கள் இளையராஜாவை நம்மிடமிருந்து எடுத்துவிடலாம். அவரது இசையை நம்மிடமிருந்து எடுத்துவிட முடியாது.
RAJASANGEETHAN