அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு வானளாவப் புகழும் இளையராஜா!

புத்தக முன்னுரை ஒன்றில் அண்ணல் அம்பேத்கருடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு வானளாவப் புகழ்ந்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. ‘பிரதமர் மோடியின் ஆட்சியைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்’ என்று இளையராஜா அதில் குறிப்பிட்டுள்ளார்.

ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ’சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும்’ என்ற தலைப்பில் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அந்த முன்னுரையில், “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று இளையராஜா குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது இளையராஜாவின் இந்தக் கருத்து சர்ச்சையைத் தூண்டியிருக்கிறது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது, முரணானது என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு கூறுகையில்,“அண்ணல் அம்பேத்கரோடு மோடியை ஒப்பிடுவதை அருவருப்பான ஒன்றாகத்தான் நான் பார்க்கிறேன். நன்மதிப்புள்ள ஒருவரின் மூலம் அவர்களின் சித்தாந்தத்தைத் திணிக்கும் முயற்சியை எப்போதுமே பாஜக செய்வது வழக்கம். தற்போது சனாதனத்தையும், இந்துத்துவக் கொள்கைகளையும் இளையராஜா மூலம் கொண்டுவரச் செய்யப்பட்ட முயற்சிதான் இது. இந்த ஒப்பீடு மிகவும் தவறானது.

சனாதனத்தைக் கொண்டுவர வேண்டும் என்று போராடும் ஒருவருக்கும், சனாதனத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற கருத்தியல் கொண்ட ஒருவருக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. அம்பேத்கர், தன் வாழ்நாள் முழுவதையும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று போராடியவர். ஜனநாயக இந்தியாவை அமைக்கப் போராடிய ஒருவரை, சாவர்க்கரின் வாரிசாக இருக்கும் மோடியோடு ஒப்பிடுவது அநீதி. கண்டிப்பாக இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இசைப் புலமைகொண்ட இசைமேதை இளையராஜாவையும், இசையே தெரியாத ஒருவருடன் ஒன்றாக ஒப்பிட முடியுமா… இதனை இளையராஜா புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.