சுபர்ணயெளதேயனும், காளிதாசனும், பின்னே இளையராஜாவும்!

“நீங்கள் அஸ்வகோஷைப் பின்பற்றி. அவர் சென்ற பாதையிலே செல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை.”

“ஆனால் நான் வெறும் கவிஞன். அஸ்வகோஷ் கவிஞன் மட்டுமல்ல, மகாத்மாவும் கூட. அவருக்கு இந்த உலகத்தின் சுகங்களெல்லாம் துச்சம். எனக்கோ விக்ரமாதித்யனின் அந்தப்புரவாசிகளைப் போல் அழகிகள் வேண்டும். செந்நிற திராட்சை மது வேண்டும், பெரிய மாளிகை வேண்டும். எண்ணற்ற ஏவலாளர்கள் வேண்டும். இத்தனை ஆசைகளையும் வைத்துக் கொண்டு நான் எப்படி அஸ்வகோஷாக முடியும்? ‘ரகு’ வம்சத்திலே குப்தர்களைத்தான் ரகு வம்சத்தினர் எனப் புகழ்ந்து பாடினேன். அதிலே மகிழ்ந்து போன விக்கிரமாதித்யன், இந்தப் பெரிய மாளிகையையும் காஞ்சனாமாலாவையும் எனக்கு அளித்தான். இப்போது ‘குமாரசம்பவ’த்தைத் தொடங்கி இருக்கிறேன். இது என்னென்னப் பரிசுகளை எனக்கு கொண்டு வந்து சேர்க்குமென பார்!”

“எனக்குப் புரியவில்லை. நீங்கள் ரகு வம்சத்தையும் குமார சம்பவத்தையும் எழுதாமல் புத்த சரிதத்தையும் செளந்தர்யானந்தத்தையும் எழுதியிருந்தால் பட்டினியால் மடிந்து போய் இருப்பீர்களா? உலக சுகங்களிலிருந்து ஒதுக்கப்பட்டிருப்பீர்களா? அரசர்களின் புகழ் பாடி இருக்காவிட்டால், உங்கள் வாழ்க்கை சுகமற்றதாய் இருக்குமென நீங்கள் கருதுவது வெறும் மயக்கம். நீங்கள் வருங்காலக் கவிஞர்களுக்கு ஒரு தவறானப் பாதையைக் காட்டிச் செல்கிறீர்கள். எல்லாரும் காளிதாஸரின் மறைவிலே தங்கள் குற்றங்களை மறைத்துக் கொள்ள முயலுவார்கள்.”

“அந்த மாதிரிக் காவியங்களையும் எழுத முயல்வேன் சுபர்ணா!”

“ஆனால் இந்த குப்தர்களின் பாவச்செயல்களின் மீது சவுக்கடி விழும்படி ஒன்று கூட எழுத மாட்டீர்களா?”

“அது என்னால் முடியாது. நான் அதிக சுகவாசியாகி விட்டேன்.”

-’வால்காவிலிருந்து கங்கை வரை’ புத்தகத்தில் ‘சுபர்ணயெளதேயன்’ அத்தியாயத்தில் பிராமணர்களுடன் சேர்ந்து குப்த அரசர்களுக்குக் காவடி தூக்கிய காளிதாசனை ராகுல் சாங்கிருத்யாயன் வறுத்து எடுத்த வரிகள் இவை.

இத்தனை காலம் கடந்து இந்த எழுத்து இளையராஜாவுக்கும் பொருந்துவதுதான் வருண அதிகாரக் கோட்பாடு!

இத்தனை காலம் கடந்தும் நிலை நின்று பிராமண தந்திரம் வெற்றி பெறுவதுதான் இந்தியத் துணைக்கண்ட அரசியல்!

காளிதாசனோ இளையராஜாவோ, பார்ப்பன பீடத்துக்குக் கவிபாடி, ராகம் போடும் அனைவரும் மானுட விரோதிகளே!

RAJASANGEETHAN