“இளவரசன் வழக்கு: காப்பி – பேஸ்ட் செய்வதற்கு சிபிசிஐடி போலீசார் எதற்கு?”
இளவரசன் கொலையா? தற்கொலையா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் சிபிசிஐடி போலீசாரின் குற்றப்பத்திரிக்கை முழுமையானதாக இல்லை.
தர்மபுரி போலீசாரின் விசாரணை போக்கு பாகுபாடாக இருக்கிறது என்பதற்காகத் தான் சிபிசிஐடி விசாரணை கேட்கப்பட்டது. ஆனால் சிபிசிஐடி போலீசார், ஏற்கனவே தர்மபுரி போலீசார் விசாரணை செய்ததை காப்பி, பேஸ்ட் செய்து ஒட்டியது போன்று அறிக்கையை தாக்கல் செய்திருக்கின்றனர்.
உண்மையை கண்டுபிடிப்பதற்கு சாட்சிகள், ஆதாரங்கள், ஆவணங்கள் போன்றவை முக்கியமானவை. இது போன்ற பணியில் இருக்கக்கூடிய போலீசார் உண்மைக்கு மாறாக பாகுபாட்டுடன் செயல்படும்போது, சிபிசிஐடி போலீசாருக்கு இரண்டு விதமான வேலைகள் முன்னிறுத்தப்படுகிறது. ஒன்று அவ்வழக்கின் உண்மைகளை விசாரணை செய்வது, இரண்டு பாகுபாடுகளுடன் இருக்கக்கூடிய போலீசாரின் குறுக்கீடை தடை செய்வது.
ஆனால், இளவரசன் வழக்கில் சிபிசிஐடி போலீஸ், தர்மபுரி போலீசாருடன் கைகோர்த்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இது போன்ற வழக்குகளுக்கு சிபிசிஐடி விசாரணை என்பதை விட தமிழகம் சாராத சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்வது தான் சரியாக இருக்கும்.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்படுகிற அனைத்து குற்றப்பத்திரிக்கைகளுமே பலவீனமாகத்தான் இருக்கின்றன. இந்த சாபக்கேட்டினை ஒழிக்க வேண்டுமென்றால் விசாரணை முறைகளை, கட்டமைப்புகளை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு உச்சநீதிமன்றமும் சிபிஐயும் இணைந்து ஆய்வு மேற்கொள்வது மிக அவசியமான அவசரமான நடவடிக்கையாக கருதுகிறேன்.
எவிடன்ஸ் கதிர்