ஜெயமோகனை கையாளுவது போல் வெற்றிமாறனை கையாண்டு எதிர்முகாமில் நிறுத்துவது பெரும் தவறு!
ஒடுக்கப்பட்ட மக்களின் வெவ்வேறு காலகட்ட வலியை புனைவு கதையாக கோர்த்து தமிழ் சினிமா போன்ற பெரும் வணிக உலகத்தில் இன்றைய பாசிச விழுதுகளின் அழுத்தங்களை தாண்டி ஒரு படைப்பாளி கொடுப்பது என்பது கிட்டத்தட்ட அசாத்தியம். அந்த அசாத்தியத்தை மீறி அதை சாத்தியப்படுத்த ஓர் அரசியல் நிலைப்பாடு வேண்டும். அதில் உறுதியாக இருக்கவும் வேண்டும். அத்தகையவொரு அரசியல் நிலைப்பாட்டை வெற்றிமாறன் தொடர்ச்சியாக தனது படங்களிலும் தன் தயாரிப்புப் படங்களிலும் வெளிப்படுத்தி வருகிறார்.
மாற்றுக்கருத்து இருந்தால் கண்டிப்பாக அதைப் பேச அனைவருக்கும் உரிமை இருக்கிறது. யாரும் அப்பழுக்கற்றவரும் இல்லை. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரும் இல்லை. Critical Analysis இல்லாமல் நாமும் இல்லை. அதை பேசுவதற்கான வெளி, தோழர் வெற்றிமாறனிடமும் உண்டு என்று கண்டிப்பாக நம்புகிறேன். ‘வடசென்னை’ படம் வந்த பின் அது குறித்து வந்த விமர்சனக் கருத்துகளை பொறுப்பாகவே கையாண்டார். புகழில் இருக்கும் ஒருவர் ‘நம் பீடத்தில் ஒன்றும் இல்லை. விமர்சனக் கருத்துகளை உள்வாங்க வேண்டும்’ எனக் கருதுவதும், Critical ஆக தன்னைத் தானேப் பார்க்க வேண்டும் என்கிற சிந்தனையும் இடது அரசியல் நிலைப்பாட்டில் இருந்துதானே வர முடியும்?
தோழர் வெற்றிமாறனின் அரசியல் திரையரங்குடன் முடிந்து விடுகிறதா? தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினையான காவிரி உரிமைப் போராட்டத்தில் களத்தில் போராடி போலீசிடம் அடிவாங்கி இன்றும் சமரசமின்றி தன் அரசியல் நிலைப்பாட்டில் தன்னை நிறுத்திக் கொள்பவர்.
நம் எல்லோருக்கும் எல்லாவற்றைப் பற்றியும் பிசிறில்லாமல் எப்போதுமே தெளிவு இருந்திடுமா என்ன? அரசியல் என்பது ஒவ்வொரு முறையும் சரி செய்து திருத்திக் கொண்டு மேம்படுத்திக்கொள்ள வேண்டிய தளம். அப்படியான ஒரு சித்தாந்த மேம்படுத்தலுக்கான முயற்சிகளை தொடர்ச்சியாக செய்துகொண்டிருப்பவர் தோழர் வெற்றிமாறன்.
அவருடன் ஏற்படும் மாற்றுக்கருத்தை நாகரீகமாக வைக்காமல் வன்மத்துடன் ‘பட்டம்’ சூட்டுவதற்கான அவசியம் என்ன?
என்ன மாற்றுக் கருத்தானாலும் ஏதோ ஜெயமோகனை கையாளுவது போல் வெற்றிமாறனை கையாண்டு எதிர் முகாமில் நிறுத்துவது பெரும் தவறு. அப்படி செய்வதில் தோழர் வெற்றிமாறன் அங்கு போய்விட போவதில்லை. ஆனால் சந்தேகமே இல்லாமல் நீங்கள் அங்கு சென்று விடுகிறீர்கள்.
‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ’RRR’ எனும் அதீத வெறுப்பு, பொய், மதவெறி ஆதரவு படங்கள் எடுத்தவர்களை சங்கிகள் தூக்கி சுமந்து லாபி செய்து ஆஸ்கர் வரை எடுத்துச் செல்கிறார்கள். ஆமாம் அவர்கள் சங்கிகள் தான். ஆனால் நாம் யார்?
ஒடுக்கப்படும் மக்களுக்காக களத்திலும் போராடும் நாம், இதுவரை எட்ட நாதி இல்லாத சினிமாத்துறையிலும் அந்தக் குரலை பிரதிபலிக்கும் ஒரு தோழரை நேச முரணுடன் அணுகுவதை விடுத்துவிட்டு இப்படி பகை முரணையும் தாண்டிய வன்மத்துடன் அடிப்பது எல்லாம் எவ்வளவு சீர்கேடான போக்கு? பிறகு எப்படி நீங்க எல்லாம் மதச்சார்பற்ற சக்திகள வேற ஒருங்கிணைப்பீங்க?
And இந்த ‘வெற்றிமாறன்-விடுதலை’ வன்மப் போஸ்டுகளை போடுபவர்களையும், அதில் வரிந்து கட்டிப் போய் ஹார்ட்டையும் லைக்கையும் அள்ளி வீசுபவர்களையும் நேரடியாகவே நான் அறிவேன். நீங்கள் இயங்கும் தளத்தில் பயணிக்கும் தோழர்களை நசுக்கி எறிந்து அவர்கள் மீதேறி மேல் நகரும் உங்கள் அயோக்கிய தன்னகங்காரத்தையும் மிஞ்சியவர் தோழர் வெற்றிமாறன். அதையும் நேரடியாகவே அறிவேன்.
இதைப் படித்ததும் உங்களுக்குள் என் மேல் ஆத்திரம் ‘சுள்’ளென ஏறுமானால் (ஏறும் தான்!) you are nothing but an ego centric jingoistic counter revolutionary force!