அண்டார்டிகா பனிப்பாறையில் பிளவு: விஞ்ஞானிகள் அதிர்ச்சி
அண்டார்டிகாவில் பெரிய பனிப்பாறை ஒன்றில் நீளவாக்கில் பிளவு ஏற்பட்டுள்ளது. இது பற்றிய புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.
அமெரிக்காவின் மான்ஹட்டன் நகரைப் போல் 20 மடங்கு பெரிய பனிப்பாறை இது என்பதால், இதன் மீதான பிளவு சர்வதேச அளவில் சூழலியல் ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
காலநிலை மாற்றம் காரணமாக உலக அளவில் பருவ நிலைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடும் பனிப்பொழிவு, வெள்ளம், அதீத மழை, கடுமையான காட்டுத் தீ, வறட்சி, அதிதீவிர புயல்கள் போன்றவற்றை உலக நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன.
மற்றொரு பக்கம், அண்டார்டிகா, ஆர்டிக் போன்ற பனிப் பிரேதசங்களில் கால நிலை மாற்றம் காரணமாக பனிப்பறைகள் உருகி வருகின்றன.
இந்த நிலையில் அண்டார்டிகாவில் மீண்டும் பனிப்பாறை ஒன்றில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே வெளியிட்ட அறிக்கையில், “அண்டார்டிகாவில் வெட்டல் பகுதியில் அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரைப்போல 20 மடங்கு அளவுள்ள பெரிய பனிப்பாறையில் நீளவாக்கில் பிளவு ஏற்பட்டுள்ளது. கடந்த முப்பது வருடங்களில் இம்மாதிரியாக மூன்று முறை பனிப்பாறைகளில் பிளவு ஏற்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், விஞ்ஞானிகள் தரப்பில், “நாங்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தொடர் செயல்பாடுகள், பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்துவது, பேரிடர்களுக்கான தயார்நிலை, பேரிடர் மேலாண்மையில் கவனம் செலுத்துவதன் மூலம் பாதிப்புகளைக் குறைக்கலாம் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் உலக நாடுகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.