”நானும் தமிழன் தான்”: ராகுல் காந்தி அதிரடி

நாடாளுமன்றத்தில் ஒன்றிய பொது பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ”இது ஒன்றுமில்லாத பூஜ்ஜிய பட்ஜெட்” என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சாடினார்.

இந்த நிலையில் நேற்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி ஒன்றிய பாஜக அரசை கடுமையாக குற்றம் சாட்டினார். ”ஒன்றிய, மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்பில் மட்டுமே இந்தியாவை நடத்த முடியும்”. ”பாஜக மாநிலங்களின் குரலை ஒடுக்க முடியும் என நினைப்பது ஒருபோதும் நடக்காது” என்று விளாசினார்.

”நீங்கள் இரண்டு இந்தியாவை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். பணக்காரர்களுக்கான இந்தியா, ஏழைகளுக்கான இந்தியா என்று பிரித்து வைத்திருக்கிறீர்கள்” என்று குற்றம்சாட்டினார். மேலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவது பற்றி பேசிய ராகுல் காந்தி, ”இந்தியா என்பது கூட்டாட்சி, பேரரசு இல்லை . தமிழகத்தில் நீட் குறித்த விவகாரத்துக்கு நீங்கள் செவி கொடுக்கவில்லை. உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஒருபோதும் நீங்கள் தமிழக மக்களை ஆட்சி செய்ய முடியாது” என்று கடுமையாக பேசினார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு தமிழக எம்.பி.க்கள் பலத்த வரவேற்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தைவிட்டுவெளியே செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நிருபர் ஒருவர் ராகுல்காந்தியிடம் ”நீங்கள் தமிழ்நாடு பத்தி அதிகமா பேசறீங்க” என்று ஹந்தியில் கூற, அதற்கு ராகுல் காந்தி ”நானும் ஒரு தமிழன் தானே” என்று ஹிந்தியில் பதில் கூறியபடியே நடந்து சென்றார்.