ஹாஸ்டல் – விமர்சனம்

நடிப்பு: அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ், நாசர், முனீஷ்காந்த், யோகி, கிரிஷ், நிஷா மற்றும் பலர்

இயக்கம்: சுமந்த் ராதாகிருஷ்ணன்

தயாரிப்பு: ‘ட்ரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ்’ ஆர்.ரவீந்திரன்

இசை: போபோ சசி

ஒளிப்பதிவு: பிரவீன் குமார்

மக்கள் தொடர்பு: சதீஷ்

கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் கெடுபிடி மிகுந்த ஆண்கள் விடுதி ஒன்றுக்குள் ஒரு பெண் திருட்டுத்தனமாக நுழைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்ற கற்பனையைக் கதைக்கருவாக வைத்து, அதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடிக்கதையாக வளர்த்தெடுத்தால், அதுவே ‘ஹாஸ்டல்’ திரைப்படம்.

கல்லூரியில் படிக்கும் நாயகன் அசோக் செல்வனும், அவரது நண்பர்கள் சதீஷ், யோகி, கிரிஷ் ஆகியோரும் பாய்ஸ் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறார்கள். அந்த ஹாஸ்டலின் கிறிஸ்துவ வார்டனாக நாசரும், காவலாளியாக முனீஷ்காந்தும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மாணவர்களிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்கிறார்கள்.

இந்நிலையில், சக மாணவன் ஒருவன் வாங்கிய கடனுக்கு ஸ்யூரிட்டி கையெழுத்துப் போட்டதால் மாட்டிக்கொள்ளும் அசோக் செல்வனுக்கு, இந்த சிக்கலிலிருந்து விடுபட 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. அப்போது அவரை சந்திக்கும் நாயகி பிரியா பவானி சங்கர், “யாருக்கும் தெரியாமல் என்னை உங்க பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் அழைத்துச் சென்றால், 50 ஆயிரம் ரூபாய் தருகிறேன்” என்கிறார்.

இதற்கு சம்மதம் தெரிவிக்கும் அசோக் செல்வன், எவர் கண்ணிலும் படாமல் பிரியா பவானி சங்கரை, பாய்ஸ் ஹாஸ்டலில் உள்ள தன் அறைக்கு அழைத்துச் செல்கிறார். எனினும், ஒரு பெண் உள்ளே நுழைந்திருப்பதை மோப்பம் பிடித்துவிடுகிறார் காவலாளி முனீஷ்காந்த்.

அவருக்குத் தெரியாமல் பிரியா பவானி சங்கரை வெளியே அனுப்பிவிட அசோக் செல்வனும், அவரது நண்பர்களும் பெருமுயற்சி செய்கிறார்கள். அவர்களது முயற்சி வெற்றி பெற்றதா? பிரியா பவானி சங்கர் எதற்காக பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்தார்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது மீதிக்கதை.

0a1i

முதல்முறையாக முழுநீள காமெடிப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன், தன்னால் இயன்ற அளவு காமெடி பண்ணியிருக்கிறார். அவரது நண்பர்களாக வரும் சதீஷ், யோகி, கிரிஷ் ஆகியோர் காமெடியில் அசோக் செல்வனுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

பிரியா பவானி சங்கர் அழகாய் வந்து, தன் பாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். அத்துடன் தன் பங்குக்கு காமெடி செய்ய வேண்டும் என்பதற்காக இரட்டை அர்த்த வசனங்கள் எல்லாம் பேசி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

கிறிஸ்துவ வார்டனாக வரும் நாசரும், காவலாளியாக வரும் முனீஷ்காந்தும் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். இந்த இருவரது காம்பினேஷன் காட்சிகள் அருமை. போதாக்குறைக்கு ஆவியாக வரும் நிஷா, முனீஷ்காந்துடன் சாந்திமுகூர்த்தம் செய்ய அலைவது கலக்கல்.

பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், லாஜிக் எதுவும் பார்க்காமல், படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன். அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஒரே லொக்கேஷனில் ஏறக்குறைய முழுக்கதையும் நிகழ்வது ஒளிப்பதிவாளருக்கு பெரிய சவால். இந்த சவாலை ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார் திறம்பட சமாளித்திருக்கிறார்.

போபோ சசியின் பின்னணி இசை காமெடிக்கு கை கொடுத்திருக்கிறது.

‘ஹாஸ்டல்’ – கோடை விடுமுறைக்கு ஏற்ற ஜாலியான படம்!