”தமிழ் ரசிகர்கள் வெளிப்படுத்தும் அன்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை!” – நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி

நடிகர் நானி நடிப்பில், இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில், வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட் -தி தேர்ட் கேஸ்’ எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது.

தற்போது படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் வினோத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில், ”கே ஜி எஃப் ஒன்’ , ‘கே ஜி எப் 2’, ‘கோப்ரா’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். அப்படங்களை விளம்பரப்படுத்தும்போது தமிழக ரசிகர்களையும் சந்தித்து இருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் வெளிப்படுத்தும் அன்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
ஹிட்- 3 நான் நடித்திருக்கும் முதலாவது தெலுங்கு படம்.‌ இரண்டரை ஆண்டுகள் காத்திருந்து தெலுங்கில் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறேன். இயக்குநர் சைலேஷ் கொலானு அற்புதமாக படத்தை இயக்கியிருக்கிறார். அனைவருக்கும் பிடித்த ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ‘கே ஜி எஃப் 2 ‘ படம் 2022-ல் வெளியானது. அதன்பிறகு என்னை நினைவு வைத்துக்கொண்டு இயக்குநர் சைலேஷ் கொலானு- நானி ஆகிய இருவரும் இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தேர்ந்தெடுத்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன். இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை சொல்கிறேன்.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது நானியின் ரசிகையாக இருந்தேன். அவருடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமா என காத்திருந்தேன். என் கனவு நனவாகி இருக்கிறது. ஆனால் இந்த ஜானரிலான படத்தில் இணைந்து நடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. உண்மையிலேயே இது சந்தோஷத்தை அளிக்கிறது.‌

இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். மே முதல் தேதியன்று திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.