பாபர் மசூதியை இடித்த பார்ப்பனிய கடப்பாரைகளின் அடுத்த இலக்கு – தாஜ்மகால்?
“ராமர் பிறந்த இடம்” என பொய் பிரச்சாரம் செய்து, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய பார்ப்பனிய கடப்பாரைகளின் அடுத்த இலக்கு, அதே உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ் பெற்ற தாஜ்மகால் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
உலகின் ஏழு அதிசயங்களில் அழகிய தாஜ்மகாலும் ஒன்று. இதை இஸ்லாமியரான முகலாயப் பேரரசர் ஷாஜகான், தனது மனைவி மும்தாஜின் நினைவாக வெள்ளை சலவை கற்களைக் கொண்டு கட்டினார். உலகிலேயே காதலுக்காக கட்டப்பட்ட மிகப் பெரிய மாளிகை என்ற சிறப்பு பெற்றுள்ள தாஜ்மகால், ஆண்டுதோறும் 60 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் இடமாகவும் திகழ்கிறது.
உலகமே வியந்து பார்க்கும் இந்த தாஜ்மகாலை வெறுப்புடன் பார்க்கிறது பார்ப்பனியம். காரணம், இஸ்லாமிய கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் ஓர் இஸ்லாமியரால் இது கட்டப்பட்டது என்பது தான். இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பரசியலில் உயிர் வாழும் ஆர்.எஸ்.எஸ். கும்பல், தாஜ்மகாலை இடித்து தரைமட்டமாக்கும் ரகசிய திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தான், “முன்னர் சிவன் கோயில் இருந்தது; அதை இடித்துவிட்டுத் தான் அங்கே தாஜ்மகால் கட்டப்பட்டது” என்ற கட்டுக்கதையை அது அவ்வப்போது கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.
‘யோகி’ என்ற சொல்லுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாத, வெறுப்பு அரசியல்வாதியான ஆதித்யநாத், உத்தரபிரதேச முதல்வர் ஆவதற்கு முன்பாகவே, அதாவது கடந்த ஜூன் மாதமே, “நமது இந்திய கலாச்சாரத்துக்கு உட்பட்டது ராமாயணமும், பகவத் கீதையும் தான்; தாஜ்மகால் அல்ல” என வெறுப்பை கக்கியிருந்தார்.
அத்தகைய ஆதித்யநாத் தற்போது அம்மாநில முதல்வர் ஆகிவிட்டதால், அவரது அரசு, முக்கிய சுற்றுலா மையங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியுள்ளது. “இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி தாஜ்மகால் கட்டப்படவில்லை” என இதற்கு விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஆதித்யநாத். அவரது. அரசின் இந்த நடவடிக்கை, நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது..
முக்கிய சுற்றுலா மையங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கிவிட்டு, புதுப் பட்டியலை உ.பி. அரசு வெளியிட்டுள்ளது. அதில், பார்ப்பனியர்கள் போற்றிப் புகழும் காசி நகரத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணன் பிறந்த இடம் என பார்ப்பனியர்களால் நம்பப்படும் மதுராவுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஆதித்யநாத்தின் கோரக்பூர் மடத்திற்கு நான்காவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சுற்றுலா மையமாக இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கும் தாஜ்மகாலின் கதி…? இச்செய்தியின் முதல் பத்தியை மீண்டும் வாசித்துக்கொள்க…!
அமரகீதன்