இந்துத்துவ அடையாளங்களுடன் புதிய ரூபாய் நோட்டுகள்: மோடியின் மோசடி நாடகம் அம்பலம்!
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவே “500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது” என ‘21ஆம் நூற்றாண்டின் முகமது பின் துக்ளக்’ மோடி திடீரென அறிவித்ததாக கூறப்பட்டது.
உண்மையிலேயே கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு தான் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருந்தால், புதிய 500 ரூபாய் நோட்டுகளை ஏன் அறிமுகப்படுத்த வேண்டும்? என்ற கேள்வி எழுந்தது. அதுபோல், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்துவிட்டு, அதைவிட பெரிய பணமான 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்துக்கு விடுவதன் மூலம் கருப்பு பண உருவாக்கத்தை எப்படி தடுக்க முடியும்? அது அதிகரிக்கத் தானே செய்யும்? என்ற சந்தேகமும் எழுந்தது.
இந்நிலையில், அனைவரும் தலைமுடியை பிய்த்துக் கொள்ளும்படியான ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், மத்திய மோடி அரசின் பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ். “1000 ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது” என்பது தான் அந்த அறிவிப்பு.
ஆக, பழைய ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்துவிட்டு புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்துவது கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக அல்ல என்பது மட்டும் உறுதியாக தெரிந்துவிட்டது. எனில், உண்மையான காரணம் தான் என்ன? இந்த கேள்விக்கு இன்று புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வெளியானவுடன் விடை கிடைத்துவிட்டது.
ஆம், சமஸ்கிருதம், காவி கொடி, கோல்வாக்கரின் கண்ணாடி ஆகிய இந்துத்துவ அடையாளங்களை ரூபாய் நோட்டுகளில் திணிப்பதற்காகவே இந்த “செல்லாது” என்ற மோசடி நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது மோடி அரசு. சந்தேகம் இருந்தால் கீழே உள்ள படங்களை பாருங்கள்…
ஆக, கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக அல்ல, புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை அகற்றிவிட்டு, அவற்றுக்கு பதிலாக இந்துத்துவ அடையாளங்களுடன் புதிய வடிவத்தில், புதிய வண்ணத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் ரகசிய திட்டத்தின் (hidden agenda) முதல் கட்டமாக இன்று இந்துத்துவ 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
இதன் அடுத்த கட்டமாக, இந்துத்துவ வண்ணத்தில், வடிவமைப்பில் 1000, 100, 50 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. மோடி அரசு குறி வைத்திருப்பது ரூபாய் நோட்டுக்களின் வண்ணத்தையும் வடிவத்தையும் மாற்றுவதற்கு தானே தவிர, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு அல்ல.
“புதிய 1,000, 100, 50 ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்த இருப்பதாக பொருளாதார விவகாரங்களுக்கான துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சக்திகாந்த தாஸ், “புதிய வடிவத்தில், புதிய வண்ணத்தில் இன்னும் சில மாதங்களில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும். அனைத்து ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை இனி தேவைக்கு ஏற்ப மாற்ற திட்டமிட்டுள்ளோம். எனவே, இன்னும் சில மாதங்களில் புதிய வடிவங்களில் ரூபாய் நோட்டுகளை காணலாம்” என்ற tamil.thehindu.com செய்தியையும், இன்று வெளியாகியுள்ள இந்துத்துவ 500, 2000 ரூபாய் நோட்டுகளையும் இணைத்துப் பார்த்தால் மோடி அரசின் இந்துத்துவ சதி புரியும்.
பாரத் ஆத்தா கீ ஜே!!!
– அமரகீதன்