இந்துத்துவத்தின் இராமனும், புதுமைப்பித்தனின் ‘சாபவிமோசன’மும்!
(‘இலக்கியங்களில் ஊடகங்களுக்கான கதைகள்’ என்ற தலைப்பில் சென்னை லொயோலா கல்லூரியின் முதுகலை ஊடகக்லைகள் துறை 10-01-2014 அன்று நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் நான் பங்கேற்று வழங்கிய கட்டுரை இது. அதே தலைப்பில் சக்தி பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ள நூலிலும் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்த பாரதிய ஜனதாக்கட்சி, தனிப்பெரும்பான்மை பலத்துடன் மத்திய ஆட்சியைக் கைப்பற்றிவிடும் என்ற அபாயகரச் சூழல் தெரியத் தொடங்கியபோது நான் எழுதிய இந்த கட்டுரை, ‘ராம ராஜ்ஜிய ரத யாத்திரை’ என்ற பெயரில் ஆரியத்துவ ஆண்டைகளும், ஆரியத்துவ அடியாட்களும் தமிழகத்துக்குள் புகுந்து கலவரம் ஏற்படுத்த முயலும் இன்றைய சூழலில் இங்கே வெளியிடப்படுகிறது. – பி.ஜே.ராஜய்யா)
# # #
ஒவ்வொரு கலைப்படைப்பும் அரசியல் பேசுகிறது. அது ஆட்சியதிகார அரசியலா? மேல்கீழ் படிவரிசைச் சமூக அரசியலா? என்பதில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு கலைப்படைப்பும் அரசியல் பேசுகிறது. எனவே, தமிழ் இலக்கிய வகைகளிலிருந்து எடுத்தாளப்பட வேண்டிய திரைப்படங்களுக்கான கதைக்கருக்கள், ஏதோவொரு அரசியலைப் பேசுபவையாகத்தான் இருக்கும்; இருக்க முடியும்.
இன்றைய இந்திய அரசியல் மிகவும் அபாயகரமான கட்டத்தை வந்தடைந்திருக்கிறது. பன்மைத் தன்மை கொண்ட இந்திய சமூகத்தைக் கட்டியாளும் இந்திய அரசை, ஒற்றைத் தன்மை கொண்ட இந்துமத அரசாக, “துவிஜர்”களின் (“இரு பிறப்பாளர்”களின்) நிரந்தர ஆதிக்கத்துக்குட்பட்ட பேயரசாக மாற்றியமைக்க வேண்டும் என்ற படுபயங்கர பிற்போக்குத் திட்டத்துடன் களம் இறங்கியிருக்கிறது இந்துத்துவம்.
மதச்சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர், முன்னாள் சூத்திரர்கள், பெண்கள் ஆகியோருக்கு எதிரான தன் பாசிஸத் திட்டத்தை நிறைவேற்ற, இந்துத்துவம் முதலில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும். இதற்கு வெகுமக்களின் பெருவாரியான வாக்குகளை அது பெற வேண்டும். வெகுமக்களின் பெருவாரியான வாக்குகளை வென்றெடுக்கவும், அவர்களை தன்பால் ஈர்த்து பெரிய அளவில் அணி திரட்டவும் அது ஏந்தியிருக்கும் வலிமையான ஆயுதங்களில் ஒன்று – இராமன்!
இராமன் ஒரு பழங்கதையின் கற்பனைநாயகன்; வரலாற்று நாயகன் அல்ல. அவன் ஒரு வரலாற்று நாயகன் என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்களோ, தொல்லியல் சான்றுகளோ எங்கும் எவராலும் முன்வைக்கப்படவில்லை. இருந்தும், அவன் வரலாற்று நாயகனாகவும், கடவுள் அவதாரமாகவும் ஆதிக்க சக்திகளால் கற்பனையாகக் கட்டமைக்கப்பட்டு, இந்துமதக் கடவுளர்களில் ஒருவனாக ஆக்கப்பட்டிருக்கிறான். அவனது கதை, மொழிக்கு மொழி, பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபட்டிருப்பினும், காலங்காலமாக, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. தற்காலத்தில் அக்கதை எழுத்து, இசை, கூத்து, நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி நெடுந்தொடர் போன்ற வெகுமக்களின் அனைத்து வகை ஊடகங்கள் வாயிலாக மீண்டும் மீண்டும் கூறப்பட்டுக் கொண்டே இருப்பதால், அது இந்தியா முழுக்க பிரசித்தம். அதனால்தான், எல்லோருக்கும் தெரிந்த கதாபாத்திரமான இராமனை ‘இந்துத்துவத்தின் இராமனாக’ கட்டமைத்து, அவனை வெகுமக்கள்முன் நிறுத்தி, அவர்களை தன் பக்கம் அணி திரட்ட இந்துத்துவம் தீவிரமாய் முனைகிறது.
“பழங்காலத்தில் வருணாசிரம தர்மப்படி இராமன் ஆட்சி செய்த காலம் பொற்காலம். அந்த பொற்காலத்தை, இராமனின் ஆட்சியை, இராம ராஜ்ஜியத்தை இந்தியாவில் மீண்டும் கொண்டு வருவோம்” என்று நச்சுப் பரப்புரை செய்கிறது இந்துத்துவம். “அயோத்தியில், இந்த இடம்தான் இராமன் பிறந்த இடம். இந்த இடத்தில் இஸ்லாமியர்களின் பாபர் மசூதி இருப்பது இந்துக்களுக்கு அவமானம்” என்று சொல்லிச் சொல்லி, வெறியேற்றி, அணி திரட்டி, அம்மசூதியை வெற்றிகரமாக இடித்துத் தள்ளியது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான கலவரங்களும், படுகொலைகளும், கொள்ளைகளும் நாடு முழுக்க நடந்தேறச் செய்து, அதில் இரத்தப்பசி தீர்த்தது. இப்போது, “பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமனுக்குக் கோயில் கட்டியே தீருவோம்; வாருங்கள்” என்று கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருக்கிறது. இராமேஸ்வரத்துக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலுள்ள 36 மைல்நீள கடலுக்குள் குவிந்து கிடக்கும் மணல்திட்டை “இராமன் கட்டிய பாலம்” என்று பொய்யுரைத்து, “அதை சிதைக்க விட மாட்டோம்” என்று சூளுரைத்து, நீதிமன்றம் போய், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தையே முடக்கிப் போட்டுள்ளது. கர்நாடகத்தில், ‘இராமன் சேனை’ என்ற பெயரில் ஓர் அடாவடி அமைப்பைத் தொடங்கி, பப்புக்குள் புகுந்து, அச்சம் சிறிதுமின்றி, ஒளிப்பதிவுக் கருவிகளுக்கு முன்னாலேயே, நவநாகரிக இளம்பெண்களின் ஆடைகளை இழுத்து, அலங்கோலப்படுத்தி, அவர்களை ஓடஓட விரட்டியடித்தது. காதலர் தினம் கொண்டாடுபவர்களை ஆண்டுதோறும் இந்த ‘இராமன் சேனை’ அடித்து, உதைத்து, அவமானப்படுத்தி, கட்டாயத் திருமணம் செய்து வைக்கிறது.
இந்துத்துவத்தின் இத்தகைய கொடுமைகளெல்லாம், கடவுள் அவதாரமாய் கட்டமைக்கப்பட்டுள்ள இராமன் என்ற கதாபாத்திரத்தின் பெயராலேயே அரங்கேறி வருவதால், அந்த கதாபாத்திரத்தை நம் காலத்திய கேள்விகளுக்கு உட்படுத்தி, விமர்சனப்பூர்வமாய் கட்டுடைத்து, கரைத்தழிக்க வேண்டியது இன்றுள்ள சமூகப் பொறுப்புமிக்க கலைஞர்கள் மற்றும் முற்போக்குச் சிந்தனையாளர்களின் அவசர அவசியக் கடமை ஆகும்.
இக்கடமையை நிறைவேற்றக் கூடிய ஒரு திரைப்படம் எடுப்பதற்குத் தேவையான கதைக்கரு, நம் சமகால தமிழ் இலக்கியத்திலேயே இருக்கிறது. ‘இராமன் அவதார நாயகனோ, இல்லையோ… பெண்ணிய நோக்கில் அவன் சராசரி ஆணுக்கும் கீழானவன்’ என்ற கடுமையான சாடலை உள்ளடக்கியுள்ள கதைக்கரு அது. தமிழக அரசினால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, நாட்டுமக்கள் அனைவருக்கும் சொந்தமாக்கப்பட்டுள்ள புதுமைப்பித்தனின் படைப்புகளில் ஒன்றில் அக்கதைக்கரு இருக்கிறது. அந்த படைப்பு… ‘சாப விமோசனம்’.
கற்புநெறி தவறியதாக கணவனால் குற்றம்சாட்டப்பட்டு, சபிக்கப்பட்டு, கல்லாகக் கிடந்த தன்னை, சாபத்திலிருந்து விடுவித்து உயிர்ப்பித்த அதே இராமன், தன் மனைவி சீதையின் கற்பில் சந்தேகப்பட்டு, அவளை அக்கினிப் பிரவேசம் செய்ய வைத்தான் என்பதை அறிந்து, அதிர்ந்து, மனம் இறுகி, மீண்டும் கல் ஆனாள் அகலிகை என்பதுதான் ‘சாப விமோசன’த்தின் கதைக்கரு.
“ராமாயணப் பரிச்சயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபடாமல் (பிடிக்காமல்கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை” என்ற அதிரடி அறிவிப்புடன் ‘சாப விமோசனம்’ கதையைத் தொடங்குகிறார் புதுமைப்பித்தன். கம்பராமாயணம் சொல்லும் அகலிகை கதையைத் தழுவி, தன் கதையின் முதல் பகுதியை அமைக்கிறார். அதன் சுருக்கம்:
….. ஒரு மண்சாலையோரம் கல்லாய் இறுகிக் கிடக்கிறாள் அகலிகை. அவள் கண்களில் சொல்லில் அடைபடாத சோகம். சற்றுத் தூரத்தில், அவளது கணவன் கோதம முனிவன், தன்னைச் சுற்றி கரையான் புற்றுக் கட்டியிருப்பதுகூடத் தெரியாமல், சுயநினைவு அகற்றி, சோகம் மறந்து, கடுந்தவத்தில் ஆழ்ந்திருக்கிறான். இப்படியே பல ஆண்டுகள் உருண்டோடுகின்றன. ஒருநாள். அந்த மண்சாலை வழியே, குமரப்பருவம் எய்திய இராமனும், இலட்சுமணனும் ஓடிப்பிடித்து விளையாடியபடி வருகிறார்கள். இராமனின் ஓட்டம் மண்சாலைப் புழுதியைக் கிளப்புகிறது. அந்தப் புழுதி, கல்லாய் உறைந்து கிடக்கும் அகலிகைமீது படிகிறது. உடனே அவள் கல்லுரு நீங்கி உயிர் பெறுகிறாள். தன்னை உயிர்ப்பித்த இராமன்மீது அவளுக்கு எல்லையற்ற மரியாதை ஏற்படுகிறது. அவனது காலில் விழுந்து வணங்குகிறாள். இது எதுவும் புரியாத இராமன், தன்னுடன் வந்திருக்கும் விசுவாமித்திர முனிவனை ஆச்சரியத்துடன் பார்க்கிறான். அவனுக்கு அகலிகையின் முன்கதையைக் கூறுகிறான் விசுவாமித்திரன். முன்பு, அகலிகைமீது மோகம் கொண்ட இந்திரன், இவளது கணவன் கோதமன் இல்லாத சமயத்தில், அவனைப் போல் வடிவம் எடுத்து வந்து, இவளை அணுகியது; அவன் இந்திரன் என்றறியாத பேதை, கணவன் மீதிருந்த அளவுக்குள் அடங்காத பாசத்தால் ஏமாந்து, உடம்பைக் கொடுத்து, மாசுபடுத்திக் கொண்டது; தன் மனைவி தெரிந்தே கற்புநெறி தவறியிருக்கிறாள் என்று சந்தேகிக்கும் கணவன் கோதமன், கோபாவேசம் கொண்டு, இவளை “விலைமகள்” என்று திட்டி, “நீ கல்லாகக் கடவாய்” என்று சபித்தது; இவள் நடுநடுங்கி, “அறியாமல் நான் செய்த இப்பிழையை பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்று கெஞ்சியது; கோதமன் பின்னர் கோபம் தணிந்து, “தசரதனின் மகன் இராமன் இங்கு வரும்போது, அவனது பாதத் துகள் பட்டு, நீ கல்லுருவம் நீங்கி பெண் ஆவாய்” என்று சாப விமோசனம் அருளியது – இவ்வளவையும் ராமனிடம் சொல்லுகிறான் விசுவாமித்திரன். அப்போது, கரையான் புற்றுக்கு நடுவே இருக்கும் கோதமன், தவம் கலைந்து எழுகிறான். தன் மனைவி கல்லுருவம் நீங்கி, பெண்ணாக நிற்பதைப் பார்க்கிறான். தயங்கித் தயங்கி வருகிறான். அவனிடம், “மனமறியப் பிழை செய்யாத உன் மனைவியை நீ ஏற்றுக் கொள்வதுதான் சரியாக இருக்கும்” என்கிறான் விசுவாமித்திரன். கோதமன் சம்மதிக்கிறான். இராமனையும், இலட்சுமணனையும் அழைத்துக் கொண்டு விசுவாமித்திரன் கிளம்பிப் போகிறான்…..
கம்பராமாயணம் சொல்லும் அகலிகை கதை இங்கே முடிந்து விடுகிறது. இராமனின் பாத மகிமையைச் சொல்லியதோடு கம்பர் திருப்தி அடைந்து விடுகிறார். ஆனால், புதுமைப்பித்தனுக்கு அந்த திருப்தி ஏற்படவில்லை. அவருக்கு இங்கே ஒரு கேள்வி எழுகிறது. ‘இத்தனை துன்ப நிகழ்வுகளுக்குப் பின்னர் ஒன்று சேர்ந்திருக்கும் அகலிகை – கோதமன் தம்பதியரின் மனப் போராட்டமும், வாழ்க்கைப் போராட்டமும் அதன்பிறகு எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்?’ விடை தேடி, கற்பனைச் சிறகு விரிக்கிறார். அந்த விடையை ‘சாப விமோசனம்’ கதையின் இரண்டாம் பகுதியாக அமைக்கிறார். அதன் சுருக்கம்:
….. அகலிகையிடம் முன்புபோல் இயல்பாகப் பேச முடியாமல் கோதமன் தவிக்கிறான். அன்று அவளை “விலைமகள்” என்று திட்டியது தன் நாக்கையே பொசுக்கி விட்டதுபோல் இருக்கிறது அவனுக்கு. ‘அகலிகை மாசற்றவள். நான் தான் மாசுடையவன். சாபத் தீயை எழுப்பிய கோபம் என்னை மாசுபடுத்தி விட்டது. அகலிகையின் கணவனாக இருக்க நான் அருகதையற்றவன்’ என குற்றவுணர்வு கொள்கிறான். அகலிகை அவனை அன்பால் தழைக்க வைக்கிறாள். ஆனால், அவள் மனதில் ஏறிய கல் அகலவில்லை. முற்காலத்தில் அவளிடமிருந்த பேச்சும் விளையாட்டும் அடியோடு மறைந்து விட்டன. எந்த ஆண்மகனைப் பார்த்தாலும் பயம் தொற்றிக் கொள்கிறது. குடிசைக்குள் ஓடி ஒளிந்து கொள்கிறாள். எல்லா ஆண்களுமே அவளுக்கு இந்திரன்களாகத் தென்படுகிறார்கள். முன்பு கோபத்தில் சபித்தவன் கணவன் என்பதால், அவன் இப்பொழுது சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகளுக்குக்கூட உள்ளர்த்தம் இருக்குமோ என்று பதைக்கிறாள். கோதமன் இச்சையுடன் தன்னை அணுகினால், அவன் கணவன் தானா, அல்லது கணவன் உருவம் தாங்கிய இந்திரனா என்பதை எப்படி அறிவது எனத் தெரியாமல் கலங்குகிறாள். வாழ்வே அவளுக்கு நரக வேதனையாக இருக்கிறது. கோதமனின் குற்றவுணர்வு, அகலிகையின் அச்சம் – இவற்றின் காரணமாக அவர்கள் காமம் தொலைத்த வறண்ட வாழ்க்கை வாழ்கிறார்கள். புதுமணத் தம்பதியரான சீதையும் இராமனும் அவ்வப்போது உல்லாசமாக இங்கு வந்து போகிறார்கள். அகலிகைக்கு சாப விமோசனம் தந்த தெய்வப் பிறவியான இராமனை, இலட்சிய வாலிபனாக உருவகித்து மகிழ்கிறான் கோதமன். அகலிகைக்கு, தன் மனச்சுமை நீக்க வந்த மாடப்புறாவாக சீதை தெரிகிறாள். அவளது பேச்சும் சிரிப்பும் அகலிகையின் மனதைக் கொள்ளை கொள்கின்றன. சீதை வரும்போதுதான் அகலிகையின் உதடுகளில் புன்னகை நெளியும். சீதையும் இராமனும் இங்கு இருக்கும்போதுதான் அகலிகைக்கும் கோதமனுக்கும் இடையில் பழைய கலகலப்பு கொஞ்சம் எட்டிப் பார்க்கும். அவர்கள் போன பிறகு மீண்டும் வெறுமை வாட்டும். தெய்வத் தம்பதியர் அடுத்து எப்போது வருவார்கள் என்ற ஏக்கம் வழி பார்த்துக் காத்திருக்கும். இப்படியிருக்கையில், அயோத்தி அரண்மனையில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பங்கள் அகலிகை – கோதமன் தம்பதியர்மேல் இடியென இறங்குகிறது. கூனியின் சதி, கைகேயியின் பிடிவாதம், தசரதனின் திடீர் மரணம், பதினான்கு ஆண்டுகால வனவாசம் அனுபவிக்க இராமன் காட்டுக்குப் புறப்பட்டது, “இராமன் இருக்கும் இடம்தான் எனக்கு அயோத்தி” என்று சீதையும் உடன் சென்றது என எல்லாத் துயர நிகழ்வுகளும் நடந்தேறியதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்கள். அவர்களுக்கு இனி நிம்மதி என்பதே இல்லை. எல்லாம் சூனியமே…..
இப்படி அகலிகை – கோதமன் தம்பதியரின் மனப் போராட்டத்தையும், வாழ்க்கைப் போராட்டத்தையும் உணர்ச்சிப்பூர்வமாய் சித்தரித்த பிறகு, புதுமைப்பித்தனுக்கு இன்னொரு கேள்வி எழுகிறது. ‘வனவாசத்தின்போது இராவணனால் கடத்தப்பட்டு, சிறை வைக்கப்பட்ட சீதை, அவனோடு கூடிக் குலாவி கற்பிழந்திருப்பாள் என சந்தேகப்பட்டு, அவளைத் திட்டித் தீர்க்கும் இராமன், அவள் தன் கற்பை நிரூபிக்க அக்கினிப் பிரவேசம் செய்யச் சொன்னானே… இது அகலிகைக்குத் தெரிய நேர்ந்தால், என்ன நடந்திருக்கும்?’ இந்த கேள்விக்கான விடையை தன் கதையின் இறுதிப் பகுதியாக அமைக்கிறார் புதுமைப்பித்தன். அதன் சுருக்கம்:
….. பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, வனவாசம் முடிந்து, சீதையும் இராமனும் அகலிகை – கோதமன் தம்பதியரைப் பார்க்க வருகிறார்கள். முகம் மலர அவர்களை வரவேற்கிறாள் அகலிகை. பின்னர் இராமனை அழைத்துக் கொண்டு, கோதமன் வெளியே உலவச் செல்கிறான். சீதையைப் பரிவுடன் அழைத்துக் கொண்டு, அகலிகை குடிசைக்குள் வருகிறாள். இருவரும் புன்சிரிப்புடன் அமர்ந்திருக்கிறார்கள். காட்டில் இராவணன் தன்னை தூக்கிச் சென்றது, அசோகவனத்தில் தான் பட்ட துன்பம், பின்னர் மீட்கப்பட்டது என அனைத்தையும் அகலிகையிடம் விவரிக்கிறாள் சீதை. பின்னர், அக்கினிப் பிரவேசத்தைச் சொல்கிறாள். துடித்துப் போகிறாள் அகலிகை. “அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்?” என்று கேட்கிறாள். “அவர் கேட்டார்; நான் செய்தேன்” என்கிறாள் சீதை அமைதியாக. அகலிகையின் உள்ளத்தில் உயர்ந்த இடத்தில் இருந்த இராமன், சரிந்து கீழே விழுகிறான். “அவன் கேட்டானா?” என்று கத்துகிறாள். அவள் மனதில் கண்ணகிவெறி தாண்டவமாடுகிறது. “எனக்கொரு நீதி, உனக்கொரு நீதியா? எல்லாம் ஏமாற்றா? கோதமனின் சந்தேகமும், சாபமும் குடலோடு பிறந்த நியாயமா?” என கொந்தளிக்கிறாள். “உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா?” என கூறி மெதுவாகச் சிரிக்கிறாள் சீதை. “உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?” என்கிறாள்
அகலிகை. வார்த்தை வறண்டு விடுகிறது. குடிசைக்கு வெளியே பேச்சுக் குரல் கேட்கிறது. இராமனும் கோதமனும் திரும்பி விட்டார்கள். அரண்மனைக்குப் போவதற்காக சீதை வெளியே வருகிறாள். அகலிகை வரவில்லை. தன்னை வழியனுப்ப அகலிகை வருவாள் என இராமன் எதிர்பார்க்கிறான். ஆனால், அவள் வெளியே வரவில்லை. இராமன் மன உறுத்தலுடன் சீதையை அழைத்துக் கொண்டு போய் விடுகிறான். பிடிப்பற்று வாழும் அகலிகையை மாற்ற என்ன செய்யலாம் என கோதமன் யோசிக்கிறான். ஒரு குழந்தை பிறந்தால், அதன் பிஞ்சுவிரல்கள், அவளது மனச்சுமையை இறக்கி, பழைய பந்தத்தைக் கொண்டு வந்துவிடும் என்று நம்புகிறான். குடிசைக்குள் நுழைகிறான். அகலிகையைத் தொடுகிறான். அதிர்ச்சி அடைகிறான். அகலிகை மீண்டும் கல்லாகிக் கிடக்கிறாள். சில நாட்களுக்குப்பின், ஓர் ஒற்றை மனித உருவம், பாலைவனத்தின் வழியே, கைலாயம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இல்லம் துறந்து, இல்லறம் துறந்து, துறவியாகிவிட்ட கோதமனின் உருவம் அது…..
பெண்ணிய நோக்கில், இராமன் என்பவன் சராசரி ஆணுக்கும் கீழானவன் எனச் சாடும் புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ தரும் இந்த பிரமாண்டமான சட்டகத்துக்குள், இராமன் கதை மற்றும் கதாபாத்திரம் பற்றி வால்மீகிராமாயணம் உட்பட பல்வேறு இராமாயணங்கள் தரும் வெவ்வேறு சித்தரிப்புகளையும், அவை தொடர்பாக, முற்போக்கு ஆய்வாளர்களான ரொமிலா தாப்பர் (‘த பெங்குவின் ஹிஸ்டரி ஆஃப் ஏர்லி இண்டியா’), எச்.டி.சங்காலியா (‘இராமாயணம்: கற்பனையா? உண்மையா?’), டி.அமிர்தலிங்க அய்யர் (‘இராமாயண விமர்சா’), டி.பரமசிவ அய்யர் (‘இராமாயணமும் இலங்கையும்’), கே.முத்தையா (‘இராமயணம்: ஓர் ஆய்வு’) முன்வைக்கும் நம் காலத்திய கேள்விகளையும் கவனமாகத் தேர்ந்தெடுத்து, அவற்றை கலைநயத்துடன் காட்சிப்படுத்தி, திரைக்கதையில் உள்ளிணைத்தால், மிகச் சிறந்த எதிர்காவியம் ஒன்று, அற்புதமாய் திரையில் மலரும்.
புதுமைப்பித்தன் தொடாத பல செய்திகளை, கேள்விகளை இப்படி உள்ளிணைப்பது, அவரது கலைப் படைப்புக்குச் செய்யும் துரோகம் ஆகாதா என்ற கேள்வி எழலாம். துரோகம் ஆகாது என்பதுதான் இதற்கு பதில். ஏனென்றால்… புதுமைப்பித்தனின் சொற்களிலேயே சொல்வதென்றால்… “பழைய கதைகளை எடுத்துக் கொண்டு, அதை இஷ்டமான கோணங்களில் எல்லாம் நின்று கொண்டு பார்க்க எங்களுக்கு உரிமையுண்டு…!”
பி.ஜே.ராஜய்யா
எழுத்தாளர், ஊடகவியலாளர்
நன்றி: சக்தி பப்ளிஷிங் ஹவுஸ்