’இந்து ராஷ்டிரா’ அரசியலமைப்பு வரைவு வெளியீடு: ”முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு வாக்குரிமை இல்லை!”
கடந்த பிப்ரவரியில், உபி- பிரயாக்ராஜில் நடந்த தர்ம சன்சத்தில் இந்தியாவை “இந்து ராஷ்டிரா” ஆக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது அனைவருக்கும் நினைவு இருக்கும்.
அப்போது முன்மொழியப்பட்ட “இந்து ராஷ்டிரா அரசியலமைப்பு” சட்டத்தின் முதல் வரைவு அறிக்கையை ஜீயர்கள்/ சாமியார்கள் மற்றும் இந்துத்துவா அறிவாளிகள் இறுதி செய்து வருகிறார்கள்.
32 பக்க வரைவு, 2023-ல் பிரயாக்ராஜில் நடைபெறும் மஹா மேளாவின்போது கூடும் அடுத்த தர்ம சன்சத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்து ராஷ்டிராவின் அரசியலமைப்பை உருவாக்கும் குழுவில் சங்கராச்சாரியா பரிசத் தலைவர் சுவாமி ஆனந்த் ஸ்வரூப், இந்து ராஷ்டிர நிர்மான் சமிதி தலைவர் கமலேஷ்வர் உபாத்யாய்; மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பி.என்.ரெட்டி; பாதுகாப்பு துறை நிபுணர் ஆனந்த் வர்தன்; சனாதன தர்ம அறிஞர் சந்திரமணி மிஸ்ரா, உலக இந்து கூட்டமைப்பின் தலைவர் அஜய் சிங் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.
“இந்து ராஷ்ட்ரா அரசியலமைப்பு சட்டம் 750 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும், அதன் வடிவம் இப்போது விரிவாக விவாதிக்கப்படும். சமய அறிஞர்கள் மற்றும் பல்வேறு துறை வல்லுனர்களுடன் கலந்துரையாடல் மற்றும் விவாதங்கள் நடத்தப்படும். இதன் அடிப்படையில், பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள மஹா மேளா-2023ல் பாதி அரசியலமைப்பு (சுமார் 300 பக்கங்கள்) வெளியிடப்படும், அதற்காக ‘தரம் சன்சத்’ நடத்தப்படும்,” என்கிறார் சுவாமி ஆனந்த் ஸ்வரூப்.
இந்த வரைவின்படி, முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லை; ஆனால், ஒரு பொதுவான குடிமகனின் அனைத்து உரிமைகளையும் அனுபவிப்பார்கள். அவர்கள் தங்கள் வணிகங்களைச் செய்வதற்கும், வேலை பெறுவதற்கும், கல்வியைப் பெறுவதற்கும், எந்தவொரு சாதாரண குடிமகனும் அனுபவிக்கும் அனைத்து வசதிகளுக்கும் நாட்டில் வரவேற்கப்படுவார்கள், ஆனால் அவர்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த ஆவணம் கல்வி, பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, வாக்களிக்கும் முறை போன்ற துறைகளில் உள்ள விதிகளையும், அரசமைப்பின் தலைவர்களின் உரிமைகளையும் விவரிக்கிறது. இந்து ராஷ்ட்ரா அரசியலமைப்பின் படி, வாரணாசி நாட்டின் தலைநகராக இருக்கும். புது தில்லி இல்லை.
இது தவிர, காசியில் (வாரணாசி) “மதங்களின் பாராளுமன்றம்” என்ற கட்டுமானத்தை நிர்மாணிக்கும் திட்டம் உள்ளது. ‘மதங்களின் பாராளுமன்றத்திற்கு’ மொத்தம் 543 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். புதிய ஆட்சி முறை, ஆங்கிலேயர் காலத்து விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை ஒழித்து, அனைத்தும் ‘வர்ணதர்ம’/ வர்ணாசிரம முறையின் அடிப்படையில் நடத்தப்படும்.
இந்து ராஷ்ட்ராவில் கல்வி மற்றும் நீதித்துறை செயல்முறைகளில் புதிய அணுகுமுறை இருக்கும்; திரேதா யுகம் மற்றும் துவாபர யுகங்களின் நீதி முறைமையின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும். குருகுல முறை புத்துயிர் பெறும்; பண்டைய சம்ஸ்கிருத வழிபட்ட ஆயுர்வேதம், வேத கணிதம், ஜோதிடம் போன்றவற்றில் கல்வி கற்பிக்கப்படும்.
மொத்தத்தில், மோலோர்- கீழோர் : புனிதம்- தீண்டாமை அடிப்படையில் ஒரு சனாதன சாம்ராஜ்யம் கட்டமைக்கப்படும்.
இந்த இந்து ராஷ்ட்ரம் ஒன்றும் புதிய முன்வைப்பு இல்லை. ஆர்எஸ்எஸ் சங்கப் பரிவாரத்தின் கோட்பாடு தான்! நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ‘இந்து ராஷ்டிரம்’ என்ற இந்துத்துவத்தை அரசியலின் மையத்திற்குக் கொண்டுவரும் முயற்சியில் விநாயக் தாமோதர் சாவர்க்கர் ‘இந்துத்துவா’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். 1923இல் வெளியிடப்பட்ட ‘எசென்ஷியல்ஸ் ஆஃப் ஹிந்துத்வா’ என்ற புத்தகத்தில் முதன்முறையாக ‘இரு தேசியம்’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் அடிப்படையில் வேறுபட்டவர்கள் என்பதை அவர் நிரூபிக்க முயன்றார்.
இந்தியா இந்துக்களின் தாய்நாடு மற்றும் புண்ணிய பூமி என்று சாவர்க்கர் கூறினார். இந்தியா முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் புண்ணிய பூமி அல்ல, ஏனெனில் அவர்களின் புனித யாத்திரை தலங்கள் இந்தியாவுக்கு வெளியே உள்ளன என்றும் அவர் கூறினார்.
அவரது ‘இந்து ராஷ்ட்ர தர்ஷன்’ மேலும் விரிவாக விளக்குகிறது. இதை தான் தற்போது சாமியார்களும், பார்ப்பன அறிவாளிகளும் ‘இந்து ராஷ்ட்ரா அரசியலமைப்புச் சட்டம்’ என வளர்த்து எடுத்து வருகிறார்கள்.
¶சாவர்க்கர், ஹெட்கேவர் போன்ற ஆர்எஸ்எஸ் பெருந்தலைவர்கள் விதைத்த விஷச்செடி பேராபத்தாக வளர்ந்து நிற்கிறது; இந்து ராஷ்ட்ரா கருத்துக்கோப்பு துவக்க நிலையிலேயே முறியடிக்கப்பட வேண்டும்.
¶இந்தியாவின் பன்மைத்துவம், பல்வேறு மத நம்பிக்கைகள், இனங்கள், மொழிகள், பண்பாடுகள் இடையே சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும்.
Chandra Mohan