”சூர்யா நடிப்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள ‘கங்குவா’ திரைப்படத்தை வெளியிட தடை இல்லை!” – உயர்நீதிமன்றம்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’கங்குவா’ திரைப்படம் இம்மாதம் (நவம்பர்) 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். ’ஸ்டுடியோ க்ரீன்’ நிறுவனத்தின் சார்பில் ஞானவேல்ராஜா பிரமாண்டமாகத் தயாரித்திருக்கிறார்.

3டி தொழில்நுட்பத்தில் பீரியட் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், நட்டி நட்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் தொடர்பான பணிகள் அனைத்தும் முடிவடைந்து, யு/ஏ சான்றிதழ் பெற்று வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் நிலையில், ப்ரமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி மும்பை, புதுடெல்லி, ஐதராபாத், கேரளா ஆகிய பகுதிகளில் ப்ரோமோஷன் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.

இதற்கிடையில், இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ’தங்கலான்’ உள்ளிட்ட படங்களைத் தயாரிக்கும் பணிகளுக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 99 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்றிருந்தார். அதில் பாதி தொகையை மட்டும் செலுத்திவிட்டு மீதித் தொகையை செலுத்தாத காரணத்தால் அவர் தயாரித்திருக்கும் ’கங்குவா’ திரைப்படத்தை திரைக்கு கொண்டுவர தடை விதிக்க்க் கோரி ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கு நேற்று (நவம்பர் 7) விசாரணைக்கு வந்த நிலையில், இன்றைக்குள் (நவம்பர் 8) மீதித் தொகையை செலுத்தி விடுவோம் என ஞானவேல்ராஜா தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அதன்படி மீதித் தொகையை ஞானவேல்ராஜா இன்று செலுத்தி விட்டதால், ’கங்குவா’ திரைப்படத்தை வெளியிட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தகவல் படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.