மூன்று தென் மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு
மருது சகோதரர்கள் குருபூஜை, தேவர் குருபூஜை போன்ற நிகழ்வுகள் இருப்பதால் மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 3 தென் மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் விஜயதசமி நாளான அக்டோபர் 22-ல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், “மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அக்டோபர் 27-ல் மருது சகோதரர்களின் குருபூஜை, 30-ம் தேதி தேவர் குரு பூஜை நடைபெறுகிறது. இதற்காக அக்டோபர் 24 முதல் பாதுகாப்பு பணியில் 7,000 போலீஸார் ஈடுபடுத்தப்படுவர்.
கடந்த ஆண்டு தேவர் குருபூஜையின்போது 188 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு காரணமாக குற்றங்கள் குறைந்து வருகிறது. இதனால் அக்டோபர் 30-க்கு பிறகு ஊர்வலத்துக்கு அனுமதி கொடுப்பது குறித்து பரிசீலிக்கலாம்” என்று வாதிட்டிருந்தார்.
அப்போது, ஆர்எஸ்எஸ் தரப்பில், “சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில், காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஊர்வலம் நடத்தப்படும். ஆர்எஸ்எஸ் தொண்டர்களைக் கொண்டு பேரணியை ஒழுங்கப்படுத்தவும், காவல்துறை அனுமதி அளிக்கும் வழித்தடத்தில் ஊர்வலம் நடத்தப்படும். எனவே, ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு மீதான தீர்ப்பை புதன்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி இளங்கோவன் புதன்கிழமை பிறப்பித்த தீர்ப்பில், ‘மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்தில் மருது சகோதரர்கள் குருபூஜை, தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற இருப்பதால், விஜயதசமி நாளான அக்.21-ல் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க முடியாது. அதேநேரம், ஊர்வலத்துக்கு அனுமதி கோரியுள்ள பிற மாவட்டங்களில் ஊர்வலம் நடத்தலாம். சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினர் விதிக்கும் நிபந்தனைகளைப் பின்பற்றி ஊர்வலத்தை நடத்த வேண்டும்.
தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ள மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மருது சகோதரர்கள் குருபூஜை, தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் முடிந்த பிறகு, ஊர்வலம் நடத்த அனுமதி கோரி காவல் துறையிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை போலீஸார் பரிசீலித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’ என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.