“நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?”: உயர் நீதிமன்றம் கேள்வி
“நயன்தாரா போன்ற பிரபல நடிகைகள் காணாமல் போனால் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா? சாதாரண மக்கள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்காதா?” என்று சென்னை உயர் நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவரின் மகள் கவுசல்யா (வயது 19). இவர் கடந்த பிப்ரவரி மாதம் காணாமல் போனதாக திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது இதுவரை காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே தனது மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி, காணாமல் போன பெண்ணின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று (13-06-2019) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் கூறுகையில், ‘புகார் கொடுத்து 3 மாதங்களை கடந்த பின்னரும், ஏன் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை?. நயன்தாரா போன்ற பிரபல நடிகைகள் காணாமல் போனால்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?. சாதாரண மக்கள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்காதா?.
மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் அதற்கான வேலையை சரியாக செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் காணாமல் போய் விட்டால் இப்படிதான் அலட்சியம் காட்டுவீர்களா?’ என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பான அறிக்கையை வரும் திங்கட்கிழமை காவல் துறை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.