ஹெல்மெட்: சென்னை போலீஸ் அராஜகம்! 2 மாணவர்கள் உயிர் ஊசல்! பொதுமக்கள் தர்ம அடி!
சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி மாணவர்கள் மோஹித் (வயது 19), பவன் குப்தா (18). இவர்கள் இருவரும் இன்று காலை பெசன்ட் நகரிலிருந்து ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்தார்கள்.
கலங்கரை விளக்கம் அருகே அவர்கள் வந்தபோது, வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்த போலீஸ்காரர்களில் ஒருவரான சாமுவேல் (33), காலை நீட்டி வாகனத்தை நிறுத்த முயன்றார். திடீரென மறித்ததால் வாகனத்தை கட்டுப்படுத்த இயலாமல் மாணவர்கள் இருவரும் வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் வாகனத்தை ஓட்டிவந்த மோஹித்துக்கு தலை, கை, கால்களில் பலமாக அடிப்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். உடன் வந்த புவனுக்கு கண், கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. காலை நீட்டி வண்டியை நிறுத்த முயன்ற போலீஸ்காரர் சாமுவேலுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த புதுப்பேட்டையை சேர்ந்த அலாவுதீன் கூறும்போது, “நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலங்கரை விளக்கம் பகுதியில் ஹெல்மெட் அணியாத காரணத்துக்காக எனது இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்து கொண்டனர். அவசர வேலை இருந்ததால் நான் சென்றுவிட்டேன். மாலை, போலீஸாரிடம் எனது வாகனம் குறித்து கேட்டேன். ஆனால், திங்கள்கிழமை காலை வந்து ஆர்.ஐ-யை சந்திக்குமாறு சொல்லி அனுப்பிவிட்டனர். ஆர்.ஐ. பாண்டியனை சந்திப்பதற்காக காலை 8 மணியளவில் கலங்கரை விளக்கம் பகுதியில் ஆல் இந்தியா வானொலி நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தேன்.
அப்போது பைக்கில் இரண்டு இளைஞர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. போலீஸார் வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்த இடத்தின் அருகே அவர்கள் வாகனம் வந்தபோது, போலீஸ்காரர் ஒருவர் காலை நீட்டி வாகனத்தை நிறுத்த முயன்றார். திடீரென வாகனத்தை மறித்ததால் அந்த இளைஞரால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் வாகனத்தை ஓட்டிய மோஹித் என்ற இளைஞருக்கு தலை, கை, கால்களில் அடிப்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். மற்றொரு இளைஞர் புவனுக்கு கண், கை, கால்களில் காயம் ஏற்பட்டது. காலை நீட்டி வண்டியை நிறுத்த முயன்ற போலீஸ்காரருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது.
வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்த வேண்டும் என முடிவு செய்த போலீஸார் தடுப்பு வேலியை வைத்திருந்தால் அதைப் பார்த்துவிட்டு தூரத்திலேயே வாகனத்தின் வேகத்தை அவர்கள் கட்டுப்படுத்தியிருப்பார்கள். அதை விடுத்து மிக அருகில் வாகனம் வந்தபோது காலை நீட்டி வாகனத்தை மறித்ததால்தான் விபத்து நேர்ந்தது” என்றார்.
இந்த சம்பவத்தைப் பார்த்த இதர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் ஆவேசமடைந்து, போலீசின் அராஜகத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், பொதுமக்களை கலைந்து செல்லும்படி கூறினார். இதில் பொது மக்களுக்கும் அவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்ஸ்பெக்டர் பாண்டியனை அடித்து உதைத்தனர். இதைப் பார்த்த சக போலீஸார், பொது மக்களிடமிருந்து அவரை காப்பாற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.