ஹலோ நான் பேய் பேசுறேன் – விமர்சனம்

தமிழ் திரையுலகம் பேய்களின் உலகமாக மாறி வெகுநாட்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விதவிதமான பேய்கள் புறப்பட்டு வந்து ரசிகர்களுக்கு திகிலூட்டியும், சிரிக்க வைத்தும் கண்டெய்னர் கண்டெய்னராக கல்லா கட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுவிட்டன. அப்படிப்பட்ட ரசனைக்குரிய புதுவிதமான பேய் ஒன்றின் கதை தான் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’.

சின்னச் சின்ன திருட்டுக்களை செய்துவருபவர் நாயகன் வைபவ். அவர் மீது இரக்கப்படும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், தான் பணிபுரியும் நிறுவனத்தில் அவருக்கு மார்க்கெட்டிங் வேலை வாங்கிக் கொடுக்கிறார். வைபவ் வேலைக்குப் போகும் முதல் நாளிலேயே, அந்நிறுவனத்தின் பணத்தையும், மோட்டார் சைக்கிளையும் அபேஸ் செய்துகொண்டு கம்பி நீட்டிவிடுகிறார். இதனால் ஐஸ்வர்யாவின் வேலை பறிபோகிறது. அவர் வைபவை தேடிப் பிடித்து தனது நிறுவனத்தின் பணத்தை வாங்க முயற்சிக்கும்போது, எதிர்பாராத நிகழ்வாக வைபவ் “ஐ லவ் யு” சொல்ல, நெகிழ்ந்துபோகும் ஐஸ்வர்யா அதை ஏற்றுக்கொள்கிறார்.

இதற்கிடையில், ஒரு கோர விபத்தில் உயிரிழக்கும் இன்னொரு நாயகியான ஓவியாவின் செல்போனை, வைபவ் திருடிக் கொண்டுபோய் தனது வீட்டில் வைக்கிறார். அந்த செல்போனில் இருந்து கிளம்பும் ஓவியாவின் ஆவி வைபவை படாதபாடு படுத்தி, அவரை உண்டு இல்லை என பண்ணுகிறது. அது மட்டுமா…? என் காதலனை அழைத்து வந்தால் தான் இங்கிருந்து வெளியேறுவேன் என்றும் நிபந்தனை விதிக்கிறது. ஓவியாஆவியின் காதலனை கண்டுபிடிக்க புறப்படுகிறார் வைபவ். ஆவியின் காதலனை அவர் கண்டுபிடித்தாரா? ஆவியின் இம்சையிலிருந்து விடுதலை பெற்றாரா? என்பது மீதிக்கதை.

இது வைபவ் தானா? என ஆச்சரியப்படும் அளவுக்கு நடிப்பில் தூள் கிளப்பியிருக்கிறார் வைபவ். சென்னைத் தமிழில் பேசிக்கொண்டு, நாயகிக்கு காதல் வலை விரிக்கும் இவரது உடல்மொழியும், முகபாவனையும் அட்சர சுத்தமாய் அத்தனை அம்சம். ”ஐயோ” என்ற ஒரு வார்த்தையையே பலவிதங்களில் பேசி அசத்தி, நல்ல ஃபார்முக்கு வந்துவிட்டதை உரக்க அறிவித்திருக்கிறார். இதுபோல் இன்னும் ஒன்றிரண்டு படங்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து, சிரத்தையுடன் நடித்தால், நட்சத்திர அந்தஸ்தை அவர் எட்டிப் பிடித்துவிடுவார் என உறுதியாக நம்பலாம்.

எந்த வேடம் கொடுத்தாலும் நடிப்பில் பின்னியெடுப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பது ஏற்கெனவே நிரூபணமான ஒன்று. இந்த படத்திலும் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து பாராட்டு பெறுகிறார்.

சில காட்சிகளில் அழகு தேவதையாக வந்து மயக்கும் ஓவியா, ஏனைய காட்சிகளில் ஆவியாக வந்து மிரட்டுகிறார்.

வைபவின் மச்சான்களாக வரும் வி.டி.கணேஷ், சிங்கபூர் தீபன் ஆகியோரது காமெடி காட்சிகள் படத்தின் வெற்றிக்கு உரம் சேர்க்கின்றன. வி.டி.வி.கணேஷின் கலக்கும் வித்தை குடிமகன்களை குஷிப்படுத்தும். மேலும், டம்ளர் குத்து, பக்கெட் குத்து, மக்கு குத்து என்று விதவிதமான சாவு குத்துக்களின் மன்னனாக அவர் செய்யச் சொல்வதும், அதற்கு வைபவ் கொடுக்கும் ரிபீட் கவுண்டர்களும் திரையரங்கை காமெடி அரங்கமாக மாற்றிவிடுகிறது.

“கம்போஸிங்ல இருக்கண்டா” என்ற அறிமுகத்தோடு எண்ட்ரி கொடுக்கும் யோகி பாபுவின் ‘கத்தி’ காமெடி சிரிப்புக்கு உத்திரவாதம். மனுஷன் இன்னும் சில காட்சிகளில் வந்திருக்கலாமே என்று ஏங்க வைத்துவிடுகிறார்.

சித்தார்த் விபினின் இசையில் குத்து பாடல்கள் ஆடியன்ஸை குத்தாட்டம் போட வைக்கும் ரகம். பின்னணி இசையிலும் அதகளப்படுத்தி இருக்கிறார்.

என்.பானுமுருகனின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு ஏற்பவும், திரைக்கதையோடு சேர்ந்தும் பாந்தமாக பயணித்துள்ளது.

படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை வரை இது திகில் படம் என்ற எண்ணம் நமக்கு தோன்றாதபடி, ஒரு காதல் காமெடி படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதையை நகர்த்திச் செல்லும் அறிமுக  இயக்குனர் பாஸ்கர், இடைவேளையின்போது ஒரு வித்தியாசமான திகில் அனுபவத்தை கொடுக்கிறார். இது வழக்கமான கோடம்பாக்கத்து பேய் படம் என்றில்லாமல், சில புதிய விஷயங்களைச் செய்து, தானொரு வெற்றிகரமான வணிகக் கலைஞன் என்பதை நிரூபித்துள்ளார் பாஸ்கர். பாராட்டுக்கள்.

தமிழ் ரசிகர்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்து வைத்திருக்கும் சுந்தர்.சி, மக்கள் ரசிக்கும் ஜனரஞ்சகமான படங்களை தயாரிப்பதும், இயக்குவதும் எப்படி? என்றொரு புத்தகம் எழுதினால், நாளைய இயக்குனர்களுக்கு அது நல்ல வழிகாட்டியாக இருக்கும்.

‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ – பேய்களையும் பேய்த்தனமாக சிரிக்க வைக்கும் காமெடி படம்!