பெரியார்: விமர்சனங்களும், பதில்களும்

சமூக நீதிக்காகவே வாழ்ந்து மறைந்த பெரும் தலைவர்கள் இன்றும் தங்களின் சிந்தனைகளாலும் கருத்துகளாலும் நம்மிடையே உயிர்ப்புடன் இருக்கின்றனர். அப்படிப்பட்ட பல தலைவர்களில் தனது கருத்துகளுக்காக அதிகம் விவாதிக்கப்படுவதும், விமர்சிக்கப்படுவதும் பெரியார்தான்.

வருடங்கள் பல கடந்தாலும் பெரியார், பலராலும் வாசிக்கப்படுகிறார். அவரின் பல கருத்துகள் விவாதப் பொருளாகின்றன. கருத்துகளை ஏற்போர் ‘பெரியார்’ என்றும், கருத்துகளை மறுத்து வெறுப்போர் ‘ராமசாமி நாயக்கர்’ என்றும் இரு தரப்புகளாக நின்று கருத்து மோதல் நடத்துகின்றனர். ஒரு வகையில் இது ஆரோக்கியமான செயல்தான். “விவாதங்களின் வழி வேறுபாட்டை ஒழிக்க வேண்டும்” என்று பெரியாரும் ஆசைப்பட்டார். ஆனால், வலைதளங்களில் பகிரப்படும் சில தவறான விமர்சனங்கள்  பெரியார் குறித்த இன்றைய தலைமுறையின் புரிதலைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

அத்தகு விமர்சனங்களை பெரியார் மீதான குற்றச்சாட்டுகளாக முன்வைத்து தங்களின் அரசியல் ஆதாயத்தைத் தேடிக்கொள்வோர் பலர். அவர்களுக்கு பதில் அளிப்பதைத் தாண்டி இன்றைய தலைமுறையினருக்கு அவரைப் பற்றிய சரியான புரிதல் ஏற்படவேண்டும். பெரியார் மீதான சில அடிப்படை விமர்சனங்களுக்கான பதில்கள் இவை,

இந்து மதத்தை மட்டும் எதிர்த்தார் பெரியார்: உண்மையா?

இந்து மதத்தை மட்டுமே பெரியார் எதிர்த்தார் என்பது உண்மையன்று. ஒரு மதமும் வேண்டாம் என்பதே அவரின் வாதம். “மதம் மனிதனை மிருகமாக்கும்; மதம் மனிதர்கள் ஒற்றுமைப்படுவதைத் தவிர்க்கிறது. ஆகையால், அனைத்து மதங்களும் தேவையற்றவைதான்” என்பதே பெரியாரின் அடிப்படையான நிலைப்பாடு.

இங்கு பெரும்பான்மையினரின் மதம் இந்து மதமாக இருந்ததாலும் அதில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் பெரும் அளவிலான மக்களை பாதித்ததாலும் பெரியார் தொடர்ந்து இந்து மதத்துக்கு எதிராகக் கடுமையாகக் குரலெழுப்பி வந்தார். பெரியார் தன் ஆதரவில் வளர்ந்த குழந்தைகள் என்ன மதம் பயில வேண்டும் என்பதில் அவர் குறுக்கிடவே இல்லை, தங்களின் சிந்தனையால் அவர்கள் நாத்திகத்தை ஏற்றால் சரி என்று சொல்லி அவர் கடவுள் வாழ்த்துப் பாடலைக் கூட மறுத்ததில்லை.

தமிழர்களைக் காட்டுமிராண்டிகள் என்று வர்ணித்தார் பெரியார்: உண்மையா?

இது வெகுமக்கள் சொல்லும் குற்றச்சாட்டு. ஆனால் உண்மை, “திராவிடத்தின் ஆதி மக்களான தமிழர்கள் தங்களின் கலாச்சாரத்தின் அடிப்படை பழக்கவழக்கங்களை மறந்துவிட்டனர். அதனை ஒரு தரப்பினர் மறைத்துவிட்டார்கள். இப்போது தமிழர்கள் கொண்டாடும் அனைத்துக் கலாச்சாரங்களும் அவர்களை அடிமைச் சமூகமாக நிறுவவே உதவி செய்கின்றன. அறுவடை தவிர்த்து பிற பண்டிகைகள் எல்லாம் நாம் அடிமைப்பட்டிருக்கும் காட்டுமிராண்டி தன்மைக்கே வழிவகுக்கின்றன. இதனால் அடிமைத்தனத்தைவிட்டு வெளிவர சாதி இழிவை வளர்க்கும் கலாச்சாரங்களை பின்பற்றாதீர்கள்”. இதுதான் 1970-ல் பெரியார் வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம்.

“நம்மில் சிலர் பணம் பதவிக்கு ஆசைப்பட்டு சாதி இழிவுக்குத் துணை போகிறார்கள். இதை லட்சியம் செய்யாமல் புராண மாயையில் மூழ்கிக்கிடக்கிறோம்” என, 1943-லேயே கட்டுரை எழுதினார். அடிமைப்பட்டு இருப்பது காட்டுமிராண்டித்தனம் எனப் பல சமயங்களில் பெரியார் சொன்னதுதான் இப்படி வேறுவிதமாக திரிக்கப்பட்டுவிட்டது.

தமிழ் துவேஷி பெரியார்: உண்மையா?

மொழி சீர்திருத்தமே தமிழை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்று தொடர்ந்து பெரியார் வலியுறுத்தி வந்தார். ஆனால், அதற்கு யாரும் செவி சாய்க்காததால் பழமையைக் கட்டி அழும் மொழி என்று தமிழ் மொழியை விமர்சனம் செய்தார். தமிழினை விஞ்ஞானத் துறையில் புகுத்தி புதுமைகள் படைக்கவே விரும்பினார்.

ஆனால், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகவே அவர் ஆங்கிலத்தை ஆதரித்தார். ஆங்கிலம் கற்றால் அறிவு மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட முடியும் என்று பெரியார் நம்பினார், அவர் அன்று சொன்னதுதான் இன்று நிகழ்ந்தது. ஆங்கிலம் வேலைவாய்ப்பில் முக்கிய இடம் வகிப்பதை மறுப்பதற்கில்லை. சாதிப் பற்று, மதப்பற்று போல மொழிப்பற்று முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது. நெகிழ்வுத் தன்மை வேண்டும் என்றவர், இந்தி திணிப்பையும் சமஸ்கிருதத்தை புனிதப்படுதத்துவத்தையும் எதிர்த்தே வந்தார்.

பார்ப்பனர்களுக்கு எதிராகச் செயல்பட்டார் பெரியார்: உண்மையா?

பார்ப்பனியத்தைத்தான் பெரியார் எதிர்த்தாரே அன்றி பார்ப்பனர்களை அல்ல. “பாம்பைக் கண்டால் கூட விட்டுவிடு. ஆனால், பார்ப்பனைக் கண்டால் விடாதே” என்று பெரியார் சொன்னதாக சொல்லப்படும் இந்தச் சொல்லாடலுக்கு எந்தவித ஆதாரங்களோ முறையான பதிவுகளோ இல்லை.

“பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றுமில்லை, அவர்களின் சில பழக்கவழக்கங்களைத்தான் நாம் எதிர்க்கிறோம். அவர்கள் மனது வைத்தால் அதை எளிதில் மாற்றிக்கொள்ள முடியும். நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்கவேண்டும். அதில் பலாத்காரத்துக்கு இடமில்லை” என்று 1953-ல் ராயப்பேட்டை கூட்டத்தில் சொன்னார் பெரியார்.

“எனக்கு எந்த சமுதாயத்தின் மீதும் வெறுப்பு இல்லை. சமுதாயத்தில் பார்ப்பனர்கள் அனுபவிக்கும் உயர்வு மீதுதான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இங்கு யாவரும் ஒருதாய் பிள்ளைகள் என்று அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றால், நான் போராட வேண்டிய அவசியமே இருக்காது” என்றார். இவ்வாறாக அவர் சொல்லியிருந்தாலும் அவரை ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக நிலைநிறுத்துவதே முரண்.

பெரியார் வளர்ப்பு மகளையே திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன ?

அண்ணா தேர்தல் அரசியலில் ஈடுபடப்போவதால் பெரியாருக்கு அவரை அடுத்த வாரிசாக அறிவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட, அர்ஜுனன் மற்றும் ஈ.வெ.கி. சம்பத் ஆகியோரை வாரிசுகளாக அறிவிக்கும் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. தன் வளர்ப்பு மகளாகிய மணியம்மையை இயக்கத்தின் வாரிசாக அறிவிக்க பெரியார் முடிவு செய்தார்.

ஆனால், அன்று நடைமுறையில் இருந்த இந்து சட்டத்தின்படி ஒரு பெண்ணைத் தத்தெடுக்க முடியாது. வாரிசாக அறிவிக்க வேண்டும் என்றால் திருமணம் மட்டுமே செய்ய முடியும். அவர் காலங்காலமாக எதிர்த்து வந்த இந்து சட்டத்தின்படியே திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம். சட்டப்பூர்வமாக தனது வாரிசாக மணியம்மையை ஆக்குவதற்கு திருமணம் தவிர வேறுவழி இல்லை என்ற நிலையிலேயே பெரியார் மணியம்மையை மணந்தார்.

பெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?

நிச்சயமாக இல்லை. கருத்து சுதந்திரத்தைப் பெரும் அளவில் மதித்தவர் பெரியார். ம.பொ.சி.யின் நண்பரான மாலி பெரியாரைக் கடுமையாக விமர்சித்து நாடகம் ஒன்றை எழுதியபோது, “உன் கருத்தை நீ சொல்கிறாய் . அதில் தவறொன்றும் இல்லை” என்றார் பெரியார்.

அதுமட்டுமல்லாமல், பெரியாரை வெளிப்படையாக நேருக்குநேர் எதிர்த்த ம.பொ.சி-கூட, “பொதுவாழ்வில் அவர் கடைப்பிடித்து வரும் நேர்மை, கொள்கைகளில் அவர் கொண்டுள்ள உறுதி ஆகியவற்றால் மாற்றுக் கட்சியினராலும் போற்றி புகழத்தக்கவர்” என, 1962-ல் வெளிவந்த பெரியார் பிறந்த நாள் மலரில் எழுதியுள்ளார்.

“நான் சொல்வதில் தவறேதும் இருந்தால் என் அறியாமையை மன்னியுங்கள்” என சொல்லியிருக்கிறார் பெரியார். இங்கு விமர்சனங்கள் கூடாதென்பதில்லை, அவரை முழுமையாகப் படித்துவிட்டு, ஏன், எதற்கு, எந்தக் காலகட்டத்தில் அப்படிச் சொன்னார் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு விவாதிப்பது மட்டுமே சரியான விமர்சனமாக இருக்க முடியும்.

பெரியார் என்பது வெறும் பெயரல்ல அது ஒரு சித்தாந்தம். அவரின் சிலையை அகற்றினால் அல்லது அவரைக் குறித்தத் தவறான விமர்சனங்களைப் பரப்பினால் அது அழிந்துவிடுமா என்ன? முன்பை விட இப்போது அதிகமாக பெரியாரியம் பற்றி பேச வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கிறது. பேசுவோம்.

அதிகார வர்க்கத்தின் கண்களில் கருப்புச் சட்டை மிரட்சியைக் கொண்டுவரும் வரையில், பெரியாரைப் புறக்கணித்துவிட்டு இங்கு அரசியல் செய்ய முடியாது என்ற நிலை இருக்கும் வரையில், பெயர் கேட்டால் பெருமை விடுத்து பெயரை மட்டும் சொல்லும் வரையில், அடையாளங்களை அறிவிக்கத் தயக்கநிலை இருக்கும் வரையில், சமூகத்தில் எல்லோரும் சமமாக நடத்தப்படும் வரையில் பெரியார் இருப்பார்.

வசந்த்.பி,

டிஜிட்டல் மாணவப் பத்திரிகையாளர்.

Courtesy: hindutamil.in