ஹர்காரா – விமர்சனம்
நடிப்பு: ராம் அருண் காஸ்ட்ரோ, காளி வெங்கட், கௌதமி சௌத்ரி, ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், நிக்கோலா ஃபுஸ்ட்டேர் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: ராம் அருண் காஸ்ட்ரோ
ஒளிப்பதிவு: பிலிப் ஆர்.சுந்தர் – லோகேஷ் இளங்கோவன்
படத்தொகுப்பு: டேனி சார்லஸ்
இசை: ராம் சங்கர்
தயாரிப்பு: என்.ஏ.ராமு & சரவணன் பொன்ராஜ்
தமிழக வெளியீடு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
பத்திரிகை தொடர்பு: சதீஷ் (டீம் எய்ம்)
’ஹர்காரா’ என்ற சொல்லுக்கு ‘தபால்காரர்’ (போஸ்ட்மேன்) என்றொரு பொருள் உண்டு. அந்த பொருளில் தான் இப்படத்துக்கு இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
செல்போன், இ-மெயில் போன்ற அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பு, தகவல்களை பரிமாறிக்கொள்ள கடிதங்களே பெருமளவில் பயன்பட்டன. ‘கொரியர் சர்வீஸ்’ என்ற தனியார் சேவை ஆதிக்கம் செலுத்தத் தொடங்குவதற்கு முன்பு, கடிதங்களை சேகரிப்பது, பட்டுவாடா செய்வது போன்ற பணிகளை இந்திய அரசின் அஞ்சல் துறையைச் சேர்ந்த தபால்காரர்கள் மட்டுமே செய்து வந்தனர். இந்த பணிகள் ஊர்மக்கள் ஒவ்வொருவரது வாழ்வோடு நெருக்கமாகப் பிணைந்திருந்ததால், ஒவ்வொரு ஊரிலும் ஆசிரியரைப் போல, போலீஸ்காரரைப் போல, தபால்காரரும் மிக முக்கியமான மனிதராக பார்க்கப்பட்டார். போற்றப்பட்டார்.
அப்படிப்பட்ட இரண்டு தபால்காரர்கள் பற்றிய படம் தான் இந்த ‘ஹர்காரா’. ஒரு தபால்காரர் தற்காலத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர்.
கதை தற்கால நிகழ்வாகத் தொடங்குகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள ஈசன்மலை என்ற அழகிய மலை மேல் இருக்கும் குக்கிராமம் ஒன்றின் தபால் நிலையத்தில் தபால்காரராக பணியாற்றுகிறார் காளி (காளி வெங்கட்). கிராம மக்கள் அவர் மீது அன்பு செலுத்திய போதிலும், அவருக்கு அந்த கிராமத்தில் பணியைத் தொடர விருப்பமில்லை. காரணம், மலையின் உயரமான பகுதியில் அமைந்துள்ள அக்கிராமம், உலகின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டதாக இருக்கிறது. மேலும், அந்த குக்கிராம மக்கள், கல்வியறிவு அறவே இல்லாதவர்களாக இருக்கிறார்கள். மட்டுமல்ல, தபால் நிலையத்தை அவர்கள் கடிதப் போக்குவரத்துக்கு பயன்படுத்துவதைக் காட்டிலும், சிறு சேமிப்பு, முதியோர் உதவித்தொகை போன்ற பண பரிமாற்றத்துக்கான வங்கியாகவே அதிகம் பயன்படுத்துகிறார்கள். எல்லாவற்றையும் விட, மலைக்காட்டில் வசிப்பதால் காளிக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை என்ற அவலம்…
இதனால் விரக்தியில் இருக்கும் காளி, மிகவும் பின்தங்கிய அந்த கிராமத்திலிருந்து வெளியேற நினைத்து, பணியிட மாற்றம் கோரி விண்ணப்பிக்கிறார். ஆனால் அவருக்கு மாற்றாக வேறொருவரை கண்டுபிடிக்க இயலாது என்பதைச் சுட்டிக்காட்டும் அவரது அதிகாரிகள் அவருடைய கோரிக்கையை ஏற்க மறுக்கிறார்கள்.
இந்த நேரத்தில் காளிக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. தபால் நிலையத்தை மூடிவிட்டு, அதற்குப் பதிலாக அங்கு ஒரு வங்கியை திறக்க வேண்டும் என்று கோரி, கிராம மக்கள் சார்பில் அரசுக்கு மனு எழுதிப் போடுகிறார். அவ்விதம் தபால் நிலையம் மூடப்பட்டுவிட்டால், தன்னை கொஞ்சம் நாகரிகமான – முன்னேறிய – வேறொரு ஊருக்கு பணியிட மாற்றம் செய்வார்கள் என்பது அவரது நம்பிக்கை.
ஒருநாள். மலை மேல் மிக மிக உயரமான இடத்தில் வசிக்கும் வயதான பெண்மணி ஒருவருக்கு கொடுக்க வேண்டிய கடிதம், காளியின் தபால் நிலையத்திற்கு வருகிறது. அதை கொடுப்பதற்காகப் புறப்படுகிறார். அவரது நீண்ட, நெடுந்தூர மலையேற்ற பயணத்தின்போது, உடன் வரும் பெரியவர் ஒருவர் மூலம், 150 ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்த முதல் ஹர்காரா – முதல் தபால்காரர் – மாதேஸ்வரன் பற்றியும், அவரை உள்ளூர் மக்கள் கடவுளாக வணங்குவது பற்றியும் தெரிந்துகொள்கிறார்.
மாதேஸ்வரனின் வாழ்க்கைக் கதை என்ன? கடவுளாக வணங்கப்படும் அளவுக்கு அவர் அந்த மக்களுக்குச் செய்த நற்காரியங்கள் என்ன? அவரது வாழ்க்கைக் கதை தற்கால தபால்காரரான காளியின் மனநிலையையும், வாழ்நிலையையும் எப்படியெல்லாம் மாற்றி அமைக்கிறது? என்பது ‘ஹர்காரா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
2019ஆம் ஆண்டு வெளிவந்த ‘வி1 மர்டர் கேஸ்’ என்ற புலனாய்வு திரில்லர் திரைப்படத்தில் நடித்து, தனது நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்த ராம் அருண் காஸ்ட்ரோ, இந்த ‘ஹர்காரா’ திரைப்படத்தில் 150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ’முதல் ஹர்காரா’வான மாதேஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி, சிறப்பாக நடித்திருக்கிறார். அந்தக்காலத்து தபால்காரர் எப்படியிருப்பார்? பணி நிமித்தம் அவர் சந்தித்த சிரமங்கள் என்ன? என்பதை தத்ரூபமாக தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இவரே இப்படத்தை இயக்கியும் உள்ளார். திரைப்படங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாத தபால்காரர் கதாபாத்திரத்தை நாயகன் ஆக்கி, அதை மேன்மைப்படுத்தி, உண்மைச் சம்பவங்களை சேர்த்து, செழுமையான உள்ளடக்கம் கொண்ட படமாக இதை கொடுத்ததற்காக இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோவை பாராட்டலாம். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
சமீப நாட்களாக நல்ல நல்ல குணச்சித்திர வேடங்களில் பட்டையைக் கிளப்பி வரும் காளி வெங்கட் இதில் தபால்காரர் காளி கதாபாத்திரத்தில் வருகிறார். மலைகிராமத்தில் ஒட்டுதல் இல்லாமல் வாழ்வது, அந்த மக்களின் அன்பில் சிக்கி அவதிப்படுவது, 33 வயதாகியும் திருமணம் ஆகாததை எண்ணி குமுறுவது என இயல்பான நடிப்பை திறமையாக வெளிப்படுத்தி தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
நாயகி துர்காவாக வரும் கௌதமி செளத்ரிக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை என்ற போதிலும், கிடைத்த வாய்ப்பில் நிறைவாக நடித்திருக்கிறார். ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், நிக்கோலா ஃபுஸ்ட்டேர் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
பிலிப் ஆர் சுந்தர், லோகேஷ் இளங்கோவன் ஆகியோரின் ஒளிப்பதிவு பிரமிப்பூட்டுகிறது. மலையை, மலைகிராமத்தின் அழகை, வாழ்வியலை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தி பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
ராம் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓ.கே. ரகம். பின்னணி இசை அளவாக பயணித்து, காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.
‘ஹர்காரா’ – ரசிக்கத் தக்க புது அனுபவம்!