ஹர ஹர மகாதேவகி – விமர்சனம்
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பெண்களை குறிவைத்து மேக்கப் பொருட்கள் அடங்கிய பை ஒன்று அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் அதே கட்சியில் இருக்கும் முக்கிய தலைவரான ரவிமரியா அந்த மேக்கப் பைகளில் ஒன்றில் வெடிகுண்டை வைத்து அதனை கருணாகரன், மொட்டை ராஜேந்திரனிடம் கொடுத்து தன்னுடைய கட்சித் தலைவர்கள் பங்குபெறும் கூட்டத்தில் வைத்து வெடிக்கச் சொல்கிறார்.
நாயகன் கவுதம் கார்த்திக், துக்க வீட்டில் நடக்கும் இறுதிசடங்குகளை முன்நின்று நடத்தும் ஒருங்கிணைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கவுதம் கார்த்திக்கும் அவரது காதலியான நிக்கி கல்ராணிக்கும் இடையே ஏற்படும் மனக்கசப்பால் இருவரும் பிரிந்து விடுகின்றனர்.
இதையடுத்து காதலித்த போது இருவரும் ஒருவருக்கொருவர் கொடுத்த பரிசுப் பொருட்களை திரும்பப் பெறுவதாக முடிவு செய்கின்றனர். அந்த பொருட்களை தேர்தலின் போது வழங்கப்பட்ட பையில் போட்டு எடுத்துச் செல்கின்றனர். மறுபுறத்தில் கள்ள நோட்டுகளை அதே மாதிரியான வேறொரு பையில் எடுத்துச் செல்கிறார் பால சரவணன்.
இந்நிலையில், இந்த பைகள் அனைத்தும் ஹர ஹர மஹாதேவகி விடுதியில் வைத்து மாறிவிடுகிறது. கடைசியில் கவுதம் கார்த்திக் – நிக்கி கல்ராணியின் காதல் என்ன ஆனது? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? ரவி மரியா முதலமைச்சர் ஆனாரா? பால சரவணனின் பணம் என்ன ஆனது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
காதல், ரொமேன்ஸ், நட்பு என கவுதம் கார்த்திக்கின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. நிக்கி கல்ராணி இந்த கதாபாத்திரத்தை துணிச்சலாக எடுத்து நடித்திருப்பதற்காக அவருக்கு பாராட்டுக்கள். காதல், கிளாமர், இரட்டை அர்தத் வசனங்கள் என கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
கவுதம் கார்த்திக்கின் நண்பனாக வரும் சதீஷ் படம் முழுக்க நாயகனுடனேயே வருகிறார். ஒரு சில இடங்களில் இவரது காமெடியை ரசிக்க முடிகிறது. கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் கூட்டணியின் காமெடி ரசிக்கும்பபடி இருக்கிறது. ஒரு அரசியல் வாதியாக ரவி மரியா அவரது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பால சரவணன் தான் வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். மனோ பாலா, நமோ நாராயணா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஆர்.கே.சுரேஷ் இந்த படத்தில் இதுவரை ஏற்று நடிக்காத கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மயில் சாமி சிறப்பு தோற்றத்தில் கவரும்படியான தோற்றத்தில் வந்து கவர்கிறார்.
ஒரு பையால் ஏற்படும் குழப்பத்தை காதல், பிரிவு, நட்பு, காமெடி, கொஞ்சம் அரசியல், அங்கங்கு இரட்டை அர்த்த வசனங்கள் என இளைஞர்கள் விரும்பும் கதைக்களத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். கதைக்கு ஏற்ப திரைக்கதையில் கொஞ்சம் ஸ்வாரஸ்யத்தை கூட்டியிருக்கலாம். வசனங்கள் இயல்பானவையாக ரசிக்கும்படி இருக்கிறது.
பாலமுரளி பாலுவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `ஹர ஹர மஹாதேவகி’ கரடியின் கலாட்டா.