”முற்றிலும் தனித்துவமான, இதர திகில் படங்களிலிருந்து வேறுபட்ட படம் ‘13”: ஜி.வி.பிரகாஷ் குமார் பேச்சு
ஜி.வி.பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்து, சமீபத்தில் வெளியான படம் ‘செல்ஃபி’. இப்படத்தில் இருவரும் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த வெற்றிக் கூட்டணி இப்போது மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறது. இந்த படத்துக்கு ’13’ என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
’ரோமியோ ஜூலியட்’, ’96’ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ’மெட்ராஸ் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பாளர் எஸ் நந்தகோபால், அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘13’ என்ற படத்தைத் தயாரிக்கிறார். ஹாரர் – த்ரில்லர் வகையிலான இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் கே.விவேக் இயக்குகிறார்.
சித்து குமார் இசையமைக்க, சி.எம்.மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். ஜே.எஃப் காஸ்ட்ரோ எடிட்டராகவும், பி.எஸ்.ராபர்ட் கலை இயக்குனராகவும் இப்படத்தில் அறிமுகமாகிறர்கள். தொழில்நுட்பக் குழுவில், ஆடை வடிவமைப்பாளர் ஹினா, ஸ்டண்ட் மாஸ்டர் ரக்கர் ராம், நடன இயக்குனர் சந்தோஷ் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
இப்புதிய படம் பற்றிய அறிவிப்புக்கான நிகழ்வு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு, பத்திரிகையாளர்களுடன் உரையாடினார்கள்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் பேசும்போது, “’96’ படத்துக்குப் பிறகு என்னுடைய அடுத்த தயாரிப்பு இது. அதைத் தயாரிக்கும்போது நான் உற்சாகமாக இருந்ததைப் போலவே, இந்தப் புதிய ப்ராஜெக்ட் ‘13’ ஐத் தொடங்கும்போது அதே நேர்மறை உற்சாகத்தில் இருந்தேன். திரைக்கதையை அறிமுக இயக்குநர் விவேக் கூறிய விதம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உள்ளது என்ற நம்பிக்கையை எனக்குள் அதிகப்படுத்தியது.
கோவிட் காலத்தில் இந்த பிராஜக்ட் தொடங்கப்பட்டது. ரோமியோ ஜூலியட் மற்றும் 96 போன்ற எனது முந்தைய தயாரிப்புகளைப் போலவே, இந்த படமான ’13’, கதை மற்றும் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கும். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் அளித்துவரும் தீவிர ஆதரவிற்கும் அர்ப்பணிப்பிற்கும் நன்றி. ஸ்கிரிப்டைக் கேட்டவுடன், ஜி.வி. பிரகாஷ் குமாரைத் தவிர வேறு எந்த நடிகரையும் என்னால் நினைக்க முடியவில்லை, அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் அவர் என்று நான் உணர்ந்தேன். அதுபோல, கதையைக் கேட்டவுடன் அவருக்கும் உடனடியாக பிடித்துவிட்டது.
இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கவில்லை. ஆனால் அவரது கேரக்டர் திரைக்கதையை அப்படியே கவர்ந்து இழுக்கும். இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு அவருக்கு நன்றி. இந்த படம் அனைவராலும் விரும்பப்படும், நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறேன்” என்றார்.
நடிகை ஆதியா பேசுகையில், “என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்த தயாரிப்பாளர் நந்தகோபால் சார் மற்றும் இயக்குநர் விவேக் சாருக்கு நன்றி. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் சாருடன் பணிபுரிந்தது சிறப்பான மற்றும் தனித்துவமான அனுபவம். என்னுடன் கதாநாயகிகளாக நடித்திருக்கும் பவ்யா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். ஒளிப்பதிவாளர் ஒரு அழகான விஷுவல் விருந்தளித்துள்ளார், இது நிச்சயமாக பார்வையாளர்களால் பாராட்டப்படும். எடிட்டர், காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் டீமில் உள்ள அனைவரும் முழு அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் வழங்கிய அழகான மற்றும் சிறந்த பணிக்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்” என்றார்.
நடிகை பவ்யா பேசுகையில், “ஒவ்வொரு நடிகரும் தங்கள் திறமையை வெளிப்படுத்த விரும்புவார்கள், ‘13’ எனக்கு அப்படிப்பட்ட படமாக இருக்கும். நடிக்க நிறைய வாய்ப்பு உள்ள கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்த தயாரிப்பாளர் நந்தகோபால் சார் மற்றும் இயக்குனர் விவேக் சாருக்கு நன்றி. ஜிவி சார், ஆத்யா, ஐஸ்வர்யா மற்றும் பலருடன் இணைந்து பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. ‘13’ திரைப்படம் நம் அனைவருக்கும் ஒரு அதிர்ஷ்டமான படமாக இருக்கும்” என்றார்.
நடிகை ஐஸ்வர்யா பேசுகையில், “புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த விவேக் சாருக்கு நன்றி. நான் என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன் என்று நம்புகிறேன், என்னை இந்தப் படத்தில் ஒரு அங்கமாக மாற்றிய தயாரிப்பாளர் நந்தகோபால் சாருக்கு நன்றி. ஜி.வி.பிரகாஷ் சார் அதிக உயரத்தில் இருந்தபோதிலும், படப்பிடிப்பில் அனைவரையும் சமமாக நடத்தினார். இந்தப் படத்தின் சிறந்த தரத்தை உயர்த்துவதில் தொழில்நுட்பக் குழுவினர் அதிகம் உழைத்துள்ளனர். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் பேசுகையில், “என்டிஆர்-ன் 100வது பிறந்தநாளை முன்னிட்டு எங்களின் ‘13’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் நானும் தயாரிப்பாளர் நந்தகோபால் சாரும் வெற்றிமாறன் எழுதிய திரைக்கதையில் ஒரு படத்தை உருவாக்க முடிவு செய்தோம். இருப்பினும், சில காரணங்களால் அதை தொடங்கவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு, நந்தகோபால் சார் இந்த ஸ்கிரிப்டைக் கொண்டு வந்து என்னை அணுகி இது ஒரு திகில் படம் என்று கூறினார். இயக்குனர் விவேக் விவரித்த ஸ்கிரிப்டைக் கேட்ட பிறகு, இது முற்றிலும் தனித்துவமானதாகவும் இதர திகில் படங்களிலிருந்து வேறுபட்டதாகவும் இருப்பதைக் கண்டேன். அதுமட்டுமின்றி, தொழில்நுட்ப வல்லுனர்களின் சேர்க்கையும் படத்தை மேலும் மேலும் மெருகேற்றியது. இத்திரைப்படத்தின் மூன்று கதாநாயகிகளும் இந்த படத்தில் தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் செலுத்தியுள்ளனர். காட்சிகள் அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவாளரால் படமாக்கப்பட்டது போல் உள்ளது. ஒரு புதியவரால் படமாக்கப்பட்டது போல் இல்லை. இந்த படத்திற்கு ஆக்ஷன் கொரியோகிராஃபர் ராம் நிறைய பங்களித்துள்ளார். சித்து குமாருடன் எனது முந்தைய கூட்டுப்பணிகள் அற்புதமான வெற்றிப் படங்களாக அமைந்தன. ‘13’ ஒரு நல்ல வெற்றிப் படமாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர் விவேக் பேசுகையில், “என் ஸ்கிரிப்டை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர் மற்றும் ஜி.வி.பிரகாஷ் சார் இருவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் வரும் மூன்று கதாநாயகிகளுக்கும் சமமான முக்கியத்துவம் படத்தில் இருக்கிறது. கௌதம் வாசுதேவ் மேனன் சாரின் இருப்பு முழு படத்தையும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் சாருடன் பணிபுரிவது எனக்கு ஒரு கனவு. அது நனவாகியிருக்கிறது.. முழு தொழில்நுட்பக் குழுவினரும் – ஆக்ஷன் கோரியோகிராஃபர், காஸ்ட்யூம் டிசைனர், ஆர்ட் டைரக்டர் என அனைவரும் தங்களின் சிறந்த பங்களிப்பை இந்தப் படத்திற்கு வழங்கியுள்ளனர்” என்றார்.