கார்டியன் – விமர்சனம்
நடிப்பு: ஹன்சிகா மோத்வானி, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, மொட்டை ராஜேந்திரன், அபிஷேக் வினோத், டைகர் கார்டன் தங்கதுரை, ஷோபனா பிரனேஷ், தியா, பேபி க்ரிஷிதா மற்றும் பலர்
இயக்கம்: குரு சரவணன் & சபரி
ஒளிப்பதிவு: கே.ஏ.சக்திவேல்
படத்தொகுப்பு: எம்.தியாகராஜன்
இசை: சாம் சிஎஸ்
தயாரிப்பு: ’ஃபிலிம் ஒர்க்ஸ்’ விஜய் சந்தர்
பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே அஹமத், யுவராஜ்
படத்தின் துவக்கத்தில், ஒரு முரட்டு மந்திரவாதி நெருப்பு மூட்டி யாகம் வளர்த்து அதன்முன் அமர்ந்து, கர்ண கொடூர கரகரத்த குரலில், “ஓம் க்ரீம் ட்ரீம்…” என்று அச்சமூட்டும் விதத்தில் மந்திரம் ஓதி, ஒரு பேயை வரவழைக்கும் முயற்சியில் இருக்கிறார். சிறிது நேரத்தில் அந்த இடத்தின் சுற்றுச்சூழல் அசாதாரணமாக மாற, “பேய் வந்துவிட்டது. பயங்கர உக்கிரமான பேய் வந்திருக்கிறது” என்று கத்துகிறார் மந்திரவாதி. தனது மந்திர சக்தியால் அந்த பேயை ஒரு பச்சைக் கல்லுக்குள் அடைக்கிறார். “இந்த கல் மீது யாருடைய ரத்தத்துளி படுகிறதோ அவருக்கு இந்த பேய் கட்டுப்பட்டு அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும். அது மற்றவர்களுக்குத் தீமையாக இருக்கும். ஆனால், இந்த கல் உடைந்தால்… அவ்வளவு தான்… பேய் வெளியே வந்துவிடும். விளைவுகள் மோசமானதாகவும், ஆபத்தானதாகவும் இருக்கும்” என்றும் கூறுகிறார்.
…என்ன… கல்லுக்குள் பேயா…? வழக்கமாக, பேய்ப்படங்களில், பாழடைந்த பங்களாவில் அல்லது கைவிடப்பட்ட அரண்மனையில் பேய் இருப்பதாகத் தான் காட்டுவார்கள். இதில் கல்லுக்குள் பேய் இருப்பதாகச் சொல்லுகிறார்களே? புதுசாக, வித்தியாசமான ஐடியாவாக இருக்கிறதே…! ஆவலுடன் நிமிர்ந்து உட்காருகிறோம்…
அடுத்து நாயகி ஹன்சிகா மோத்வானியைக் காட்டுகிறார்கள். சிறு வயதிலிருந்தே அவர் எதைச் செய்தாலும் தவறாக முடிவதால், அவரை அதிர்ஷ்டம் இல்லாதவர் – ’அன்லக்கி’, ’விளங்காதவர்’ – என்று மற்றவர்கள் முத்திரை குத்த, அதை நம்பி ஏற்றுக்கொள்ளும் ஹன்சிகா தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்துவருகிறார். ஒருநாள். கட்டுமானப் பணிகள் நடக்கும் ஒரு கட்டிடத்தின் மாடிப்படியில் ஏறுகையில், அவரது காலில் ஒரு ஆணி குத்த, அதிலிருந்து பீறிடும் ரத்தத் துளிகள் பச்சைக்கல் மீது தெறிக்கின்றன. தன் பார்வையில் படும் அந்த பச்சைக்கல்லை ஆசையோடு எடுத்து பத்திரப்படுத்திக் கொள்கிறார் ஹன்சிகா. அப்போதிருந்து அவர் வாழ்க்கையில் திடீர் மாற்றம் நிகழ்கிறது. அவர் என்ன நினைக்கிறாரோ, அவை அனைத்தும் உடனே நடக்கிறது. அவருக்கு இது நல்லதாக இருந்தாலும், மற்றவர்களுக்கு அது தீமையில் முடிகிறது. இப்படி ஒரு சக்தி தனக்கு வந்திருப்பதை நினைத்து வருந்தும் ஹன்சிகா, இதெற்கெல்லாம் காரணம் தன்னிடம் இருக்கும் அந்த பச்சைக்கல் தான் என்பதை உணர்ந்து ஆவேசமாக அதை வீசி எறிகிறார். கல் உடைந்து சுக்குநூறாக சிதறுகிறது. அதற்குள் இருந்த உக்கிரமமான பேய் வெளிப்படுகிறது.
இதுவரைகூட கதை புதுசாக இருக்கிறது. ரசிக்கிறோம். வெளியே வந்த பேய் என்ன செய்யும் என்று அச்சம் கலந்த ஆவலோடு காத்திருக்கிறோம்.
வெளியே வந்த பேய் – வழக்கமாக பெரும்பாலான படங்களில் பேய் என்ன செய்யுமோ அதையே செய்து – அரைத்த மாவையே அரைக்கிறது. அதாவது, ஹன்சிகாவின் உடம்புக்குள் புகுந்துகொண்டு. தான் உயிர் வாழ்ந்தபோது தன்னை படுகொலை செய்த நான்கு வில்லன்களைத் தேடிப்போய், ஒருவர் பின் ஒருவராக கொன்றொழிக்கிறது. வழக்கமான வில்லன்கள்; வழக்கமான ஃபிளாஷ்பேக்; உக்கிரமான பேய் வழக்கமான பேயாக… படுத்தே விடுகிறது…!
ஹன்சிகா மோத்வானி ஒரு இடைவெளிக்குப் பிறகு நாயகியாக இதில் நடித்திருக்கிறார். தனியொரு நடிப்புக் கலைஞராக மொத்தப் படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். ஆரம்பத்தில் அதிர்ஷ்டம் இல்லாத அப்பாவிப் பெண்ணாக நடித்து அனுதாபத்தைப் பெறுபவர், அடுத்து உக்கிரமான பேயாக மிரட்டலாக நடித்து பயமுறுத்தியிருக்கிறார்.
பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகிய நான்கு பேரும் வழக்கமான வில்லன்களாக வந்து தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
மொட்டை ராஜேந்திரனும், டைகர் கார்டன் தங்கதுரையும் இங்கொன்றும், அங்கொன்றுமாக காமெடி வெடியை வெடிக்க வைத்திருக்கிறார்கள்.
அபிஷேக் வினோத், ஷோபனா பிரனேஷ், தியா, பேபி க்ரிஷிதா உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் தத்தமது கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
படத்தின் முதல் பாதிக்கதையில் புதுமையைப் புகுத்த முயன்றிருக்கும் இயக்குநர்கள் குரு சரவணன் – சபரி, இரண்டாம் பாதிக்கதையில் – உயிரோடு இருக்கும்போது பாதிக்கப்பட்ட எளிய நபர் இறந்தபிறகு அமானுஷ்ய சக்தி பெற்ற பேயாக மாறி பழி வாங்கும் – வழக்கமான டெம்ப்ளேட்டுக்குத் திரும்பியதால் சோர்வு தட்டுகிறது. இந்த இரண்டாம் பாதிக்கதையையும் மாற்றி யோசித்து கொஞ்சம் புதுமையாக கொடுத்திருந்தால் படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவும், சாம்.சி.எஸ்-ன் இசையும் பேய்படத்துக்குத் தேவையான பங்களிப்பைச் செய்துள்ளன.
‘கார்டியன்’ – ஹன்சிகாவின் நடிப்புக்காக பார்க்கலாம்!